தமிழ்நாட்டில் ஒரு சாதி மொத்தத்தையும் பழிக்கக்கூடாது என்று சொன்னால் நம்மை சங்கி என்பார்கள். இலங்கையில் அதை விட எளிதாக நம்மை Branding செய்வார்கள் போலிருக்கிறது. எனக்கு சாதி, மதம் இல்லை, கடவுள் நம்பிக்கை இல்லை என்று எத்தனையோ பதிவுகள் போட்டாயிற்று. எனக்குப் புத்தகம் போடும் எண்ணமில்லை. தமிழ்நாட்டில் அநேகமான முக்கிய பதிப்பாளர்கள் கேட்டும் போடவில்லை. முகநூல் புகழை வைத்துக் காணி வாங்கிப்போடலாம் என்ற கனவு எனக்கில்லை. என் மதம் அன்பு, என் சுவாசம் இலக்கியம். யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய தேவை இப்போது மட்டுமல்ல எப்போதும் இருந்ததில்லை.
இந்தியாவிலிருந்து வருமுன்னே தொடர்ந்து தொடர்பில் இருப்பவர்களில் ஒருவர் எம்.எம். நௌஷாத். அவரைச் சந்திக்கையில் அசடு வழியக்கூடாதென்று அவசரமாக அவரது புதிய நாவலைப் படித்தேன். அவர் வீட்டுக்குச் செல்வதற்குள், அவர் பலரிடம் சொல்லி அவர் வீட்டில் ஒரு கூட்டம். நாவலுக்கு அணிந்துரை எழுதிய மன்சூர், பல கவிஞர்கள் எழுத்தாளர்களைச் சந்திக்கும் வாய்ப்பு. அக்கறைப்பற்றில் அருமையான மதிய உணவு. அதன் சுவையை விடக்கூடியது டாக்டர் நௌஷாத்தின் அன்பின் சுவை. Pages Books சிராஜ் தேடிவந்து சந்தித்ததுடன், முகத்துவாரம் கூட்டிச்சென்று, புத்தகத் தேர்வும் செய்து கொடுத்தார். புத்தகக்கடைக்கு நண்பர் அப்துல் ரஸாக் வந்திருந்தார்.
Pradeepa Loganathan, நீலாவணை இந்திரா, Fathima Minha எல்லோரையும் அவரவர் வீட்டில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எங்கோ வெளியில் இருந்து அவசரமாக வந்த பிரதீபா, மின்ஹா விருந்தோம்பலுடன், பள்ளிப்பெண்களின் துள்ளல்நடைபில் உற்சாகத்தைக் காட்டினர். என் மனைவியைச் சந்திக்க யாரேனும் வந்தால் ஹலோ சொல்லிவிட்டு நான் மாடிக்கு வாசிக்கப் போய்விடுவேன். பிரதீபாவின் கணவர் கடைசிவரை பேசிக் கொண்டிருந்தார். இந்திராவின் மொத்தக் குடும்பமும் வந்து இறுதிவரை நின்று அன்பு மழை.
உமா வரதராஜன் அரை இந்தியர். எழுத்தில் மட்டுமல்ல பேச்சிலும் அதே பகடி தொனிக்கிறது. மறுநாள் மதிய உணவு அவரது மொத்தக் குடும்பத்தினருடன். மகள், பேரக்குழந்தைகள் பிரியமாகப் பழகியது சரி, கணவனின் இலக்கிய நண்பர் என்றும் பாராமல் அவரது மனைவி மிகக் கனிவாகப் பழகினார். உமா வரதராஜன் மாடியில் திரைப்பட, புத்தகப் பொக்கிஷங்களை வைத்திருக்கிறார். அவருக்கு சம்மதம் என்றால் மாடியை விட்டு இறங்காமல், ஒரு வருடமோ, இருவருடங்களோ அங்கேயே இருக்கத் தயார்.
மட்டக்களப்பில் மலர்ச்செல்வனின் ஏற்பாட்டில் ஒரு சந்திப்பு. மேற்கத்திய இலக்கியப் போக்கும், தமிழ் இலக்கியப் போக்கும் பற்றிப் பேசிமுடித்த பிறகு கேள்வி பதில் நிகழ்வு. எதிர்பார்த்ததை விடக் கூட்டம் அதிகம். இலங்கையில் காலடி வைத்ததில் இருந்து அன்பின் பிரவாகம் மட்டுமே, அதன் நடுவில் துவர்ப்பு கலந்திருந்தால் அது என் நாவிற்குத் தெரியவேயில்லை. அன்பையே உங்களுக்கும் அளிக்க விரும்புகிறேன். அதிதீவிர இந்து, கிருத்துவ, இஸ்லாமிய நண்பர்களே, நாவலின் மையக்கரு என்பது நான் சொல்வது இல்லை, நூல் சொல்வது என்ற அரிய உண்மை உங்களுக்குப் புலப்படாமல் போகலாம், மேலும் பல நூல்கள் வாசித்து நான் இன்னும் உங்களைப் புண்படுத்தலாம். பரஸ்பர அன்புடன் பிரிவோம். என்னை நட்பு விலக்கம் செய்யுங்கள்.