எப்போதுமே நான் எதிர்கொள்ளும் கேள்வி, தினம் ஒரு புத்தகம் படித்தால் எதை என்று நினைவில் வைத்துக் கொள்ளமுடியும்!
வாசித்தல் ஒரு சுகானுபவம். சாயங்கால நேரங்களைக் கண்டிப்பாக மதுக்கூடங்களில் கழிக்க வேண்டும் என்று சிலர் நினைப்பது போல் அது ஒரு தேர்வு. வாழ்வில் எது நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது என்று நினைக்கிறோமோ அதனிடம் நம்மை ஒப்புவிக்கிறோம். எனது நண்பர் ஒருவர் எந்தப்பெண்ணைப் பார்த்தாலும் பதின்பருவச் சிறுவனைப் போல் மருவக் காதல் கொள்வார்.
Retention என்பது காலஓடையின் நீர்மையில் கட்டாயம் பாசிபடரக்கூடியது. ஐந்தாம் வகுப்பில் உருப்போட்டு சொன்னதை எல்லாம் திரும்பச் சொல் என்றால் யாரால் சொல்ல முடியும்? அத்தனை முறை படித்தது மறக்கையில் எதை நாம் நினைவில் சுமக்கப்போகிறோம்? மெதுவாகத் தேன்மிட்டாயை சுவைப்பது போல் வைத்திருந்து வாசிப்பதும், அதிவேக ரயில் அத்துவானக்காட்டைக் கடப்பது போல் வேகமாகப் படிப்பதும் அவரவர் விருப்பம். அதற்கும் நினைவுக்கும் சம்பந்தமில்லை. ஆனால் வேகமாகப் படிப்போருக்கு நிச்சயமாக முழுக்கவனக்குவிப்பு இருந்தே ஆக வேண்டும். எதிர்வீட்டுப்பெண் தலைசீவும் காட்சி மனதில் இடையில் வந்ததென்றால் இரண்டுபக்கங்கள் படிக்கும் நேரம் அங்கே செலவாகிவிடும்.
முழுதும் நினைவில் தங்காது என்று தெரிந்தும் ஏன் படிக்க வேண்டும்? உடல் நலம், குடிகுடியைக் கெடுக்கும் போன்ற நல்லொழுக்க விதிகளை மறந்துவிட்டுப் பார்த்தாலும், போதையின் காலஅளவு எவ்வளவு? அவர்களிடம் பணம் செலவழித்து அடைந்த போதை முழுதும் தீரும்வரை தூங்கப்போகாதே என்று யாரும் சொல்வதைப் பார்த்ததில்லை. குடிக்காதவர்களையும் இப்போது குழிக்குள் இறக்கும் நேரம் வந்து விட்டது. ஆண்டாண்டாய் தினம் கொண்ட கலவியில் இப்போது சந்தோஷம் கையிருப்பு எவ்வளவு?
எல்லா சுகானுபவங்களுமே வாழ்க்கையின் அந்தந்தப் பக்கங்களை இனிமையாக்கியவை என்பதைத் தாண்டி மீதம் என்ன என்று பார்ப்பது பசித்தவன் பழங்கணக்கு பார்த்த கதை.
ஒரு வருடம் முன்பு, பத்து வருடங்கள் முன்பு நான் படித்தவற்றை இப்போது படித்து விட்டு என்னுடன் விவாதிப்பவர் ஏராளம். எடுத்த உடன் முதுகுத்தண்டில் சில்லென்ற உணர்ச்சி பரவினாலும், சமாளித்துப் பதில் சொன்னதாகவே நம்புகிறேன். இல்லை, நான் கேட்ட புத்தகத்திற்கு உன் பதில் “அவன் விதி செத்தான்” என்பது போல் நழுவல் பதிலாக இருந்தது என்று நினைப்பவர்கள் தாராளமாகப் பின்னோட்டத்தில் சொல்லலாம். நட்புக்கு ஏதும் பங்கம் வராது என்று சூடம் அணைக்கிறேன். ஆனால் இந்த Retention மற்றொரு வகையில் முக்கியமான விசயம். மோகமுள் படித்தேன் என்பவரிடம் தங்கம்மாவின் சாவில் பாபுவின் பங்கு என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? உயிர்த்தேன் செங்கம்மா பூவராகவனுக்கு அவன் மனைவி முன்னே தைலம் தேய்த்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பது போல் கேள்வி கேளுங்கள். யாராக இருந்தாலும், பெரிய எழுத்தாளர் என்றாலும் Summaryல் வராத விசயங்களை நேரில் அல்லது அலைபேசியில் பேசுகையில் கேளுங்கள். Chatல் வேண்டாம். Retentionல் கூட மறக்கக்கூடியவை, மறக்க முடியாதவை என உண்டு. எழுத்தாளர் பைரவனைப் பார்க்கப் போன M சரோஜா சொன்ன வசனத்தை நீங்களும் அடிக்கடி சொல்வீர்கள்.