:

மதுரம் பூதலிங்கம் என்ற பெயரில் ஆங்கிலத்திலும், கிருத்திகா என்ற பெயரில் தமிழிலும் எழுதிய கிருத்திகா, புனைவின் எல்லா வடிவங்களிலும் முயற்சித்தவர். குழந்தைகளுக்கான பல நூல்களை ஆங்கிலத்தில் எழுதியவர், சோழர், பல்லவர் சிற்பக்கலை குறித்த நூல்களை எழுதியவர், இராமாயணம், மகாபாரதம் குறித்தும் நூல்கள் எழுதியவர். கணவர் உயர் அரசு அதிகாரியாகப் பணியாற்றியதால், இந்தியாவின் பல நகரங்களில் வசித்தவர், இந்தியா முழுதும், பல நாடுகளுக்கும் பயணம் செய்தவர். தமிழ்,ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற கிருத்திகா, தொடர்ந்து இலக்கியம் குறித்துப் பேசுவதிலும், இலக்கியவாதிகளைச் சந்திப்பதிலும் ஆர்வம் காட்டியவர். இவர் ஓவியரும் கூட. தனது தொன்னூற்று மூன்றாவது வயதில், 2009ஆம் ஆண்டு மறைந்தார்.

இவர் தமிழில் எழுதியதைப் பொறுத்தவரை, கிருத்திகாவின் வாசவேஸ்வரம், நேற்றிருந்தோம், புகைநடுவில், புதிய கோணங்கி ஆகிய நான்கு நாவல்களும் முக்கியமானவை. வாசவேஸ்வரம், புகைநடுவில்,புதிய கோணங்கி வெகுகாலம் இரண்டாம் பதிப்பே காணாமல், சமீபத்தில் மறுபதிப்பு கண்டன. நேற்றிருந்தோம் மறுபதிப்பு காணவில்லை. கிருத்திகாவின் இலக்கிய முயற்சிகளுக்கு சிட்டி உறுதுணையாக இருந்தார். இருவரிடமும் அறிவார்ந்த நட்பு கடைசிவரை இருந்தது. முப்பத்தி மூன்று வருடங்கள் கடிதத்தொடர்பு இருந்தது. இவரது நாடகம் ஒன்றை சிட்டி இயக்கி மேடையேற்றி இருக்கிறார். இவரது பல இலக்கிய முயற்சிகளுக்கு சிட்டி தூண்டுதலாக இருந்திருக்கிறார். இந்தக் கட்டுரை சிட்டிக்கும் கிருத்திகாவுக்குமான சில கடிதங்களையும், வாசவேஸ்வரம், புகைநடுவில் என்ற இரண்டு நூல்களையும் வைத்து கிருத்திகாவை சிறிதளவேனும் தெரிந்து கொள்ளும் முயற்சி.

சிற்றூர் ஒன்றில், பிராமணக்குடும்பத்தில் பிறந்து பதிமூன்று வயதில் பிரிட்டிஷ் அரசில் உயரதிகாரியாக இருந்த ஒருவரை மணமுடித்து, பதினாறு வயதில் குடும்ப வாழ்க்கையைத் தொடங்கிய பெண்ணுக்கு, கணவர் அளித்த ஊக்கமும், தன் முனைப்பும் எந்த அளவு கொண்டுவந்து சேர்த்திருக்கின்றன என்று கிருத்திகாவைப் படிக்கும் போதெல்லாம் ஆச்சரியப்பட்டதுண்டு. வாசவேஸ்வரம் போன்ற நுட்பமான படைப்பைத் தன் காலத்திற்கு முன்பே வழங்கிய கிருத்திகாவின் நூல்கள் பெண்படைப்புகள் அதிகம் பேசப்படாது தமிழில் புறக்கணிக்கப்படுவதற்கான சான்று.

கடிதங்களில் இருக்கும் ஒரு நெருக்கம், பின் தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து, நாம் அனுப்பும் எந்தமுறைகளிலும் இருந்ததே இல்லை. கடிதங்கள் மூலம் மட்டும் ஒருவர் உடன் இருப்பதாக நம்பிக்கழித்த தலைமுறை ஒன்று இருந்தது என்பதே இப்போதுள்ள தலைமுறைக்கு நம்புவதற்கு கடினமாக இருக்கும்.

சிட்டி கிருத்திகாவுடனான சந்திப்புக்கு, தி.ஜானகிராமன், சி.சு.செல்லப்பா, டி.ஆஞ்சனேயலு ஆகியோரையும் அழைக்கிறார். கிருத்திகாவின் அறிவு பூர்வமான கலந்துரையாடல் அனைவரையும் கவர்கிறது. பெண்கள் அழுகைக்கதைகள் மட்டும் எழுதுபவர்கள் என்ற சிட்டியின் கருத்தும் மாறுகிறது.

கடிதங்களில் இலக்கியமும் பல விசயங்களும் பேசப்படுகின்றன. ருக்மணிதேவி, பாலசரஸ்வதி நடனம் குறித்து, சாளுக்கிய சிற்பங்கள் குறித்து, மதுரை மணி ஐயர் கீர்த்தனை குறித்து, பறவைகள் குறித்து, பதேர் பாஞ்சாலி குறித்து, புத்தமதம் குறித்து, இந்திய நாடகங்கள் குறித்து, அம்ரிதா ஷெர்ஜில் குறித்து, இந்திய அரசியல் குறித்து, உபநிஷத்துகள் குறித்து இன்னும் ஏராளமான விசயங்கள் குறித்து. புகை நடுவில் நாவல் வெளியாகி இரண்டு வருடம் கழித்து இவர்கள் நட்பு ஆரம்பிக்கிறது. அதன் பின்னர் இருவரது இலக்கிய முயற்சிகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள். மற்ற இலக்கியவாதிகளின் படைப்புகள் குறித்துப் பேசுகிறார்கள். நடுவே அவரவர் குடும்பம் குறித்த தகவல்களும் கடிதங்களில் வருகிறது. பல கடிதங்களின் பகுதிகளே இந்த நூலில் தரப்பட்டிருக்கின்றன. அறிவார்ந்த தளத்தில் இது போன்ற நெருக்கம் அமைவது வெகு அபூர்வம்.

கிருத்திகா ஒரு கடிதத்தில் எழுதுகிறார்.
” ராமன் இந்து மாதிரிக் கணவர்களுக்கு மூலமுன்மாதிரி இல்லையா? பலநூற்றாண்டுகளாக அவனைப் பின் தொடர்வது இன்றைய ராமர்களுக்கு நெஞ்சில் வலி ஏற்படுத்தவில்லையா? …….. ராமனின் குணாதிசயம் இன்னும் நம்ஆண்களை பெண்கள் தனித்த ஜீவன்கள் அல்லர் , ஆண்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக வரப்பிறந்தவர்கள் என்பதை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மாறாமல் காத்துவருகிறது. நவீன ராமர்கள் சீதாவைத் தூக்கி எறிவதில்லை. அது அதிக செலவை ஏற்படுத்துவது. பதிலாக வீட்டில் அவர்களை மௌனமாக இருக்கவைக்கிறார்கள். நிறைய வீடுகள் அவர்கள் கதறலில் மௌனமாக இருக்கின்றன. என்னால் நீங்கள் குறிப்பிட்ட தி.ஜானகிராமனின் கதையைப் போல ஒன்றைக் கற்பனை செய்தும் பார்க்கமுடியவில்லை (மறதிக்கு)”

கிருத்திகாவின் முதல் நாவல் புகை நடுவில் மற்றும சத்யமேவ, தர்மஷேத்ரே மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அது போலவே அவரது மாஸ்டர்பீஸான வாசவேஸ்வரமும் பின் பல வருடங்கள் கழித்து எழுதிய புதிய கோணங்கியும். நேற்றிருந்தோம் இந்த வரிசையில் மூன்றாவது. அதனை புது வாசவேஸ்வரம் என்றும் சொல்லலாம். இரண்டு முத்தொகுதிகளை (Trilogy) இவர் எழுதியிருக்கிறார். அதனாலேயே வாசவேஸ்வரமும், புகைநடுவிலும் இந்தக் கட்டுரைக்காக எடுக்கப்பட்டிருக்கின்றது.

புகைநடுவில் இவரது முதல் நாவல். 1953ல் எழுதப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்து சில வருடங்களே ஆன 1950களின், டெல்லி நாவலின் களம். நேர்க்கோட்டில் நகரும் கதை இல்லை இந்த நாவலுக்கு. டில்லியின் சில தமிழ்குடும்பங்கள், அவர்களின் ஆசாபாசங்கள், அலுவலக அரசியல், வம்புப் பேச்சுக்கள், காதலும் தோல்வியும் இவை குறித்த சித்திரங்கள் தான் நாவல். பின்னாளில் எழுதிய டெல்லிவாசிகளான இந்திரா பார்த்தசாரதி, ஆதவன் போலவே நகரத்தின் பாசாங்கு வாழ்க்கை நாவலில் பிரதிபலிக்கிறது. சுதந்திரம் அடைந்து ஆறு வருடங்களுக்குள் வந்த இந்த நாவல், சுதந்திரத்தின் மதிப்பை அது சாதாரண மனிதனுக்குத் தரும் பயன்களைக் குறித்த நிறைய கேள்விகளை, சந்தேகங்களை எழுப்புவது ஆச்சரியம். இவரது உயர்மட்ட தொடர்புகள் இவரது சந்தேகங்களின் காரணிகளாக இருக்கக்கூடும். அதிகாரத்துவம், லோக்சபா செயல்பாடுகள் குறித்த விமர்சனங்கள், ஆணும் பெண்ணும் தொடர்ந்து செய்யும் விவாதங்கள், முடிவு செய்யமுடியாது இருவரை அனுமதிக்கும் உஷா, மனைவியை நண்பன் காதலிக்கிறான் என்று தெரிந்தும் கவனிக்காதது போல் இருக்கும் கணவன், சந்தர்ப்பவாதிகள் காரியங்களை சாதித்துக் கொண்டு வாழ்வது, நல்லவனாக இருந்தாலும் கோழை தற்கொலை செய்து கொள்வது எல்லாமே 1953ல் தமிழுக்குப் புதிதாக இருந்திருக்கும். அதை எழுதியது ஒரு பெண் எழுத்தாளர் என்பது, நீதிக்கதைகள், குடும்ப உறவுகளைப் பற்றிக் கதைகள் வேறு பெண் எழுத்தாளர்கள் எழுதி வந்த காலத்தில் இன்னும் விசேசமானது. அந்த வகையில் கிருத்திகா முன்னோடியாகிறார்.

வாசவேஸ்வரம் 1966ல் எழுதப்பட்டது. இவரது புகுந்தவீடான திருப்பதிச்சாரத்தின் சாயலில்
வாசவேஸ்வரம். இன்றும் வாசவேஸ்வரம் தமிழின் சிறந்த நூறுநாவல்களில் ஒன்று. ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள உறவை, சமூகநீதிக்கட்டுப்பாடுகளைப் பற்றிக் கவலை கொள்ளாது இயல்பாக விவரிக்கும் நாவல். யாரெல்லாம் சமூகஅறம் பற்றிப் பேசுகிறார்களோ அவர்கள் எல்லோருமே தனிப்பட்டவிதத்தில் ஒரு ரகசிய வாழ்க்கை வைத்திருப்பார்கள். எப்போதும் கணவனுக்குப் போதாது என்று அவனிடம் சண்டைபிடிக்கும் பெண்கள், அடுத்த ஆணை தன்னருகே நெருங்கவிடாமல் இருப்பார்கள்
என்பது பொதுஉளவியல். இதில் அதையும் உடைத்திருப்பார் கிருத்திகா. விச்சுவிற்கு செம்பருத்தி சட்டநாதனின் பெரியஅண்ணியின் சாயல். திருவிழாவில் கலவரம், கொலை, திருப்பம் என்று நாவல் கடைசியில் பேய்பாய்ச்சல் பாயும். அம்மா வந்தாளைப் போலவே மீறலின் அழகியலை இலக்கியமாக்கிய இந்த நூலும், அம்மா வந்தாளும் வந்தது ஒரே ஆண்டு. வாசவேஸ்வரம் ஒரு கதாநாயகன்-கதாநாயகி கதையல்ல. இதில் வரும் கதாபாத்திரங்களின் சாயலில் பலர் திருப்பதிசாரம் ஊர்க்காரர்களால் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள் என்று கிருத்திகா ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அம்மா வந்தாள் முழுக்க காமத்தைப் பேசவில்லை ஆனால் வாசவேஸ்வரத்தில் காமத்தேடல் கதை நெடுக நடைபெறுகிறது. அம்மா வந்தாள் போலவே இதிலும் மணவினை தாண்டிய உறவுகள், தடை தாண்டிய காமம் மற்றும் தாண்டாத காமமாக வருகின்றன. பகல் கலவி சரியா இல்லையா என்ற விவாதம் நடுவில் வருகிறது. கிராமத்தினர் பலரும் மூர்க்கமாக இல்லை நடத்தை தவறியவர்களாக வருகிறார்கள். பெரியபாட்டா ஒருவர் மட்டுமே கடைசிவரை பிதாமகர் போல். இத்தனை இருந்தும் வாசவேஸ்வரத்திற்கு ஏன் எதிர்ப்பு வரவில்லை? அம்மா வந்தாள் போல் அது அதிகம் பேரால் படிக்கப்படவில்லை, வாசவேஸ்வரம் தனியாக யாரையும் பின் தொடராது பரவலான கதாபாத்திரங்களுடன் நகர்கிறது, கடைசியாக எல்லோருமே அப்புவைப் போல அம்மா புனிதமாக மட்டும் தான் இருக்க வேண்டும் என்று நம்பியது. கிருத்திகா சிட்டிக்கு எழுதிய கடிதத்தில் சொல்கிறார் ” வாசவேஸ்வரத்தை விட அம்மா வந்தாள் நல்ல நாவல் என்று தேர்ந்தெடுக்கப்பட்டது நியாயமானது. தி.ஜாவின் அழகான மொழியும், நாவலின் உள்ளடக்கமும் இதைவிட சிறந்தது”. கிருத்திகா அவரை அறியாமலேயே இந்த நாவலில் புதியபாதையை உருவாக்கி இருக்கிறார். உபந்நியாசத்தில் தொடங்கி உபந்நியாசத்தில் முடிப்பதில் ஒரு அங்கதம் இருக்கிறது. வாசவேஸ்வரம் ஆண்பெண் பேதமில்லாத இச்சைகளின் பிரவாகம்.

கிருத்திகா ஆங்கிலம், தமிழில் எழுதியது மட்டுமன்றி புனைவு இலக்கியம் மட்டுமல்லாது, கட்டிடக்கலை, ஓவியம்,சிறார் இலக்கியம், ஆன்மீகம் குறித்தும் எழுதியிருக்கிறார். இசையை மையமாக வைத்து ஒரு நாவல் எழுதச் சொல்லி தி.ஜா இவரைக் கேட்டுக்கொண்டும் இவரிடம் தயக்கம் இருந்திருக்கிறது. இவரது கணவர் நேருவின் நல்மதிப்பில் இருந்த போதும் அரசியலை இவர் நேரடியாக எழுதவில்லை. பல நாடுகள் சென்ற, பல வெளிநாட்டு இலக்கியங்களைப் படித்த கிருத்திகா, தன் படைப்புகளில் ஒன்றில் கூட அதன் பாதிப்பை அடையவில்லை. கிருத்திகாவின் நாடகங்களும் காலத்திற்கு முந்தியவை என சிட்டி சொல்கிறார். பன்முகத்திறமை கொண்ட கிருத்திகா கேரளாவில் பிறந்திருந்தால், நாம் அவரைப் போற்றி, படைப்புகள் எல்லாவற்றையும் மொழிபெயர்ப்பு செய்திருப்போம். ஆனால் இப்போது அவரது பெரும்பாலான படைப்புகள் வாசிப்பிற்கே கிடைப்பதில்லை.
கிருத்திகாவின் மூத்த மகளின் மருமகள் இரங்கல் செய்தியில் சொல்கிறார். “பாட்டியை மணந்து சில மாதங்களிலேயே, தாத்தாவின் தந்தை இறந்ததால் பெரிய குடும்பபாரம் முழுதும், தாத்தாவின் தலையில் விழுந்தது. பாட்டி முன்னிருந்து எல்லாக் கல்யாணங்களையும், விசேசங்களையும் யாரும் குறை சொல்ல முடியாமல் நடத்திமுடித்தார்”. அந்த பதினாறு வயதுப்பெண்ணுக்கு குடும்பபாரம் பெரிதாகத் தோன்றியிருக்க வாய்ப்பில்லை, நிறைய கற்றுக்கொள்ள, எழுத, சாதிக்க ஏராளமான விசயங்கள் கண்முன்னே காத்துக் கொண்டிருந்திருக்கும் பொழுது.

உதவிய நூல்கள்:

  1. Lettered Dialogue – K A Narasaiah
  2. புகைநடுவில்- கிருத்திகா
  3. வாசவேஸ்வரம்- கிருத்திகா
  4. நேற்றிருந்தோம்- கிருத்திகா
  5. புதிய கோணங்கி- கிருத்திகா

Leave a comment