அடி – கார்த்திக் பாலசுப்ரமணியன் :
ஆறாவது வகுப்பு மாணவனின் பார்வைக் கோணத்தில் நகரும் கதை. குடும்ப சூழ்நிலையால் மெட்ரிகுலேஷனில் இருந்து, அரசுநிதிபெறும் பள்ளிக்கு மாறுபவனின் ஆங்கிலம் சிலருக்கு வசீகரத்தையும், சிலருக்குப் பொறாமையையும் ஏற்படுத்துகிறது. அந்த வயதில் நட்பும் பகையும் சட்டென தோன்றி மறைபவை. சிறுவனின் மனநிலையை (குறிப்பாக பூமாலை டீச்சர் ஆறுதல் சொல்லியவுடன்)
தத்ரூபமாகப் பதிந்திருக்கும் கதை.
சொர்க்கத்திற்கு ஒரு பயணம்- சுநீல் கங்கோபாத்தியாய்- தமிழில் அருந்தமிழ் யாழினி:
மகாஸ்வேதா தேவி என்றே நினைவு, பாண்டவர் சொர்க்கத்திற்கு நடக்கையில் ஒவ்வொருவராக இறப்பதும், திரௌபதி தன் கடைசி நிமிடங்களில், அர்ச்சுனனை விட பீமனை அல்லவா தான் அதிகம் காதல் செய்திருக்க வேண்டும் என்ற குற்றஉணர்வு கொள்வதுமான கதை. அது மிக வித்தியாசமான பார்வை. அதே போல் புதுமைப்பித்தனின் சாபவிமோசனத்தில் சீதாவின் தந்தையுடனான சந்திப்பு. சுநீல் கங்கோபாத்யாய் மிகச்சிறந்த இந்திய எழுத்தாளர்களில் ஒருவர். ஆனால் அவருடைய தோல்விக்கதைகளில் இதுவும் ஒன்று. இலக்கில்லாது பயணித்து முடியும் கதை. யுதிர்ஷ்டர், திரௌபதி பிம்பங்களை உடைக்க வேண்டும் என்று இவர் நினைத்திருந்தால் அதில் வெற்றிபெறவில்லை. கடைசிக்கடலை கெட்டுப்போய் வாயில் அதன் சுவையே தங்குவது போன்ற உணர்வு. அருந்தமிழ் யாழினியின் மொழிபெயர்ப்பு அருமை. வேறு ஏதேனும் மொழிபெயர்ப்பு இவர் செய்திருக்கிறாரா?
மொழி- சாம்ராஜ்:
மீண்டும் இவரிடமிருந்து இடதுசாரிகளை விமர்சிக்கும் கதை. கூடங்குளம் அணுஉலை விவகாரத்தில், ருஷ்ய, சீன என இரு பிரிவாகுவதும், போராட்டக்காரர்களின் மொழி, எளிய மக்களுக்குப் புரியாததையும் கிண்டல் செய்கிறது.
அலைபேசிகள் – கமலதேவி:
ஸ்ரீரங்கநாதனும் கதையில் ஒரு பாத்திரம் என்ற உணர்வை வரவழைக்கும் கதை.
தாமதமாகத் திருமணம் முடிப்போரில் சந்தேகப்படும் கணவர்களின் சதவீதம் அதிகம். பெரும்பாலான பெண்கள் தன்னை விட வயது குறைந்தவனிடம் நட்பாகப் பழகுவதில் அதிக கட்டுப்பாடை விதித்துக் கொள்ள மாட்டார்கள். கமலதேவியின் வழக்கமான பாணியில் கடந்த காலமும் நிகழ்காலமும் ஒன்றாகக் கலந்து வரும் கதை. மொபைலை விட்டு செல்வது, அம்மா கைவிடுவது, WSP குழுவில் தோழிகள் பொறுமையைப் போதிப்பது, கடைசியில் பவித்ரா ஒரு முடிவை எடுப்பது என்று எல்லாமே இயல்பாக இருக்கின்றன. ஆணோ பெண்ணோ இரண்டு மூன்று நாட்கள் ஊறப்போட்டு எதிர்வினை செய்பவர்கள் ஆபத்தானவர்கள். பாராட்டுகள் கமலதேவி.
தனியனின் வழித்துணை- செல்வசாமியன்:
தனிமையும் தன்னிரக்கமும் நிறைந்த கதை.
பலகாலம் பெண் துணை இல்லாது வாழ்ந்தவன் வழித்துணையாக ஒரு பெண்ணை Fantasize செய்துகொள்கிறான். இனிமேல் மழையில்லை என்றாலும் குடை வேண்டியிருக்கும். எந்த ஆர்ப்பாட்டமுமில்லாமல், திருப்பங்கள் இல்லாமல், சின்ன மாற்றமும் இல்லாது வாழும் ஒருவனது வாழ்க்கையின் ஒரு நாளை இயல்பாகச் சொல்லி முடியும் கதை.