ஆசிரியர் குறிப்பு:

பொன்முகலி (தீபு ஹரி) கவிதைகள், சிறுகதைகளைத் தனித்துவம் மிளிர எழுதி வருகிறார். இவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘தாழம்பூ’ 2019ல் வெளியானது. இது இவரது இரண்டாவது தொகுப்பு.

பொன்முகலியின் கவிதைகளில் இரண்டு முக்கியமான அம்சங்கள். ஒன்று கவிதைகளுக்குத் தேவைப்படும் அதீதம். அது காதல் என்றாலும் சரி, காற்றில் அசையும் கொடி கன்னத்தைத் தழுவுவது போலல்ல, ஆவேசமானது. கோபம் என்றாலும் ஆவேசமானது. இரண்டாவது அழகியல். உணர்ச்சி, ஒழுங்கமைதி, அழகியல் மூன்றும் சேர்கையில் அது Wholesome combination. அவையே பெரும்பாலான பொன்முகலியின் கவிதைகள்.

இந்த சிறிய கவிதை எங்கெல்லாம் பயணம் செய்கிறது பாருங்கள். முதல் இரு வரிகளில் Murphy’s law வருகிறது. கைகள் இங்கே கோப்பையைத் தேடவில்லை எனவே கோப்பை தரைவிழுந்து சிதறுகையில் விதியைத் தவிர நொந்து கொள்ள வேறேதுமில்லை. தூக்கம் வராத இரவுகளில் நினைவுகளுடன் போராட்டம் என்ற அளவில் முடியவில்லை கவிதை, ‘நிலவின் களிம்பேறிய படித்துறை’ Goosebumbsஐ ஏற்படுத்துகிறது. கவிதை எழுதியவரிடமிருந்து தனித்து விலகிச் சிறகடித்துப் பறப்பது இப்படித்தான்.

” நழுவ விடுபவர்களின் கைகளைத்தேடி
அமரும் கோப்பை நான்
எனது மூளை
நிலவின் களிம்பேறிய படித்துறைகளின்
இரவில் விழித்து இருப்பது”

ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பது போல் சேலைப்பூக்கள். தரையில் புரண்டு அழுக்காகி மீண்டும் மீண்டும் சோப்புப் போட்டுத் தேய்த்ததால், சாயம் போகும் நிதர்சனமும் கவிதையில் வந்து ஒட்டிக் கொள்கிறது.

” ………….
அத்தனை வேகமாக நீ
உடல்களை நோக்கி ஓடுகிறாய்
உன் புடவை ஓரங்களில் இருக்கும்
சாயம் போன பூக்கள் சில
உன் கால்களை
இடறி இடறி விடுகின்றன”

பத்தொன்பதாம் எண்ணிட்ட கவிதை சுயசிந்தனை இருக்கும் பெண்களின் ஒட்டுமொத்தக் குரல்கள். பெண்ணியம் பேசவில்லை, இறைஞ்சுதலில்லை, இது தான் விதித்தது என்ற சோகத்தை மட்டும் நமக்குக் கடத்துகிறது.

இறப்பு பற்றிய கவிதைகள் பல இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. நான்
இறந்த பின்னும் விஜி இருப்பாள், ஆனால் என் காலத்தில் அவளில்லை. அவளுடைய காலத்தில் நான் இருந்தாலும் அது எனக்குத் தெரியப்போவதில்லை.

” இறக்கும் போது ஒருவருடைய காலம்
அவருடனேயே சேர்ந்து இறந்து விடுகிறது.
அவர் புதையுறுகிற இடத்தில்
ஒரு கைப்பிடி மண்ணெணவும்
பிறகு
அதில் வளர்கிற புல்லெனவும்
அது இருக்கிறது.”

எண்பத்தைந்து கவிதைகள் பல சிறியதுமாய், சில பெரியதுமாய் அடங்கிய தொகுப்பு இது. பொன்முகலியின் கவிதை உலகம் குழந்தைமையும் அதிக முதிர்ச்சியும் ஒருசேரக் கொண்டது. சகமனிதர்களின் அபத்தங்களைப் பேசுவது. தன்னுடைய போதாமைகளையும் தெரிந்து கொண்டு, என்னைக் காதலித்தால் மதுவிலோ இல்லை தற்கொலையிலோ போய் முடியும் என்று எச்சரிப்பது.

கவிதையில் அழகியலின் பங்கு இன்றியமையாதது. அம்மா குழந்தையை சேலையில் இறுக்கக்கட்டி தண்ணீருக்குள் விழுந்து சாகுமுன் சொல்கிறாள் ” நீர் என்பது முடிவுறாத பெரிய கனவு இங்கே நம் ஆத்மா மீன் குஞ்சுகளாகும்”. அதே போல “காலம் என்னைக் கொத்திக் கொண்டு போகக் காத்திருக்கிறேன்” என்பது கசப்பை விழுங்கிப் பின் புன்னகைப்பது. இவ்வாறு ஏராளமான வரிகளில் அழகியல் அதன் பங்கை இவரிடம் கேட்டு வாங்கிக் கொள்கிறது.

அடுத்தது, நவீன கவிதைகளுக்கான மொழி.
ஒரு பழையபாணிக் கவிதை என்று ஆரம்பிக்கும் நீளக்கவிதையிலும் கூட நவீன
கவிதை மொழி இருக்கிறது. இவரது கவிதைகள் பலவும் தளைகள், தடைகள் எல்லாவற்றையும் தாண்டிச் சொல்ல நினைப்பதைச் சொல்லியே முடிகின்றது.

பல கவிதைகள் முகநூலில் படித்தவை. ஆனால் மொத்தத் தொகுப்பாகப் படிக்கையில் அதன் சுவை வேறு. இந்த வாழ்க்கையின் அபத்தங்களை, அநித்யங்களை, பாசாங்குகளைக் குறித்தே அதிகமான கவிதைகள் இருக்கின்றன. அவன்கூடயாச்சும் ஓடிப்போனேனா என்ற எள்ளலும், Don’t care மனநிலையும் சில கவிதைகளில், மென்மையான மறுபக்கத்தைக் காட்டும் அம்மா, அத்தை, ஈஸ்வரன் மாமா கவிதைகளும் உண்டு. கவிஞர்களுக்கு அடிப்படைத் தேவையான Variety இவர் கவிதைகளில் இயல்பாக இருக்கிறது. எது எப்படியானாலும் நிலவெரியும் இரவுகளில் என்னை விட்டுச் சென்றது நியாயமா என்று கேட்கும் பெண்ணை பொன்முகலியின் கவிதைகளில் பார்க்க முடியாது.

தமிழ்கவிதைநூல்கள்

பிரதிக்கு :

காலச்சுவடு பதிப்பகம் 4652- 278525
முதல்பதிப்பு செப்டம்பர் 2021
விலை ரூ.140.

Leave a comment