நிரபராதம்- மயிலன் ஜி சின்னப்பன்:
மிட்டாயைக் கையில் வாங்கிய குழந்தை, பிசுபிசுப்பு கையை உறுத்தும் வரை வைத்திருந்து சாப்பிடுவது போல, காலையில் பார்த்தபின்னும் கொஞ்சம்நேரம் கழித்துப் படிக்கலாம் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். கதையைப் படித்ததும் நான் எடுத்த முடிவு சரியெனத் தெரிந்தது, மயிலன் ஏமாற்றுவதில்லை.
நெருங்கிய மருத்துவர்கள் சொல்லிக் கேட்டதுண்டு, ” நான் சற்று முன்னால் போயிருந்தால்……..”. ஒரு குற்ற உணர்வை, உறுத்தலைச் சொல்லும் கதையாக இது மாறவில்லை. மனம் அதை வடிக்க ஒரு வடிகாலைத் தேடுவதும், அதற்கு ஒரு சாயலைத் திணிப்பதும், பின் அதுவே இது என நம்புவதும் கதையில் அற்புதமாக வந்திருக்கிறது. இன்னொரு வகையில் காதலை, காமத்தைத் தவிர ஆண் பேசுவதற்கு ஒரு பெண்ணிடம் ஆயிரமாயிரம் விசயங்கள் இருக்கின்றன. அவன் அடிவயிற்றின் வெண்மையை உற்றுப் பார்க்கையில் கூட, வாசகருக்கு அவனுடைய Obsession மேலிருக்கும் பரிதாபம் மேலெழுவதே இந்தக் கதையின் வெற்றி.
பதக்கம் – பாலாஜி பிருத்விராஜ்:
காட்சிப்படுத்தலின் அழகு இந்த சிறுகதை. ஒரு சின்ன சம்பவத்தை எடுத்துக் கொண்டு கதை வெகு இயல்பாகச் செல்கிறது கடைசி வரி வரும் வரை. கடைசிவரியின் Twist ஒரு பெரிய ஏன் ஐத்தந்து செல்கிறது. பலகாலம் முன்பு தங்கத் தோட்டைத் தொலைத்த பெண்ணுக்கு, ஒருவாரம் இப்படி இரு அப்போது தான் அடுத்துத் தொலைக்கமாட்டாய் என்று வேப்பங்குச்சியை செருகிய சம்பவத்தைப் பார்த்த நினைவு வந்தது.
மடையான்- எம்.கோபாலகிருஷ்ணன்:
நடைச்சித்திரம் என்று கடைசியில் குறிப்பு சொல்கிறது. நன்றாக வந்திருக்கிறது.
மடையான் பெயரிலேயே அவனைப்பற்றிய குறிப்பு இருக்கிறது. அவனது கதாபாத்திரத்தை ஆழ்ந்து நோக்கும் பொழுது அவனிடம் சராசரி ஆண்களை விட சிறந்த குணாதிசயங்கள் தென்படுகின்றன.
வந்ததை வரவில் வைப்போம், சென்றதை செலவில் வைப்போம் என்ற மனநிலை எல்லோருக்கும் எளிதாக வரக்கூடியது அல்ல. அத்துடன் கூடவே தன்மானம்.
தாயின் மணிக்கொடி- எம்.கே.மணி:
“ஏன் இப்படி எல்லாம் மனிதருக்கு நடக்க வேண்டும்?” என்று கதையின் இடையில் ஒரு வரி வரும். அநேகமாக மணியின் எல்லாக் கதைகளிலுமே இந்தக் கேள்வியை நாம் கேட்க வேண்டியிருக்கும். மணியின் கதாபாத்திங்கள் வித்தியாசமானவை. இவரது மொழிநடை எடிட்டர் காட்சிகளுக்குச் செய்யும் மொழிநடை. சேவையை வியாபாரமாக்குவதும், சாடிஸ்டுகள் சேவாமையத்தில் இருப்பதும் நாம் ஏற்கனவே பார்த்திருந்தாலும் எப்போதும் ஜீரணிக்க முடியாதவை. ஏன் சிலருக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கிறது?
எல்.கே.ஜி – சுஷில் குமார்:
சிறுவயதில் விளையாடுகையில் விதிமுறைகளை வகுப்பது உடன் விளையாடும் பெண்பிள்ளைகள் தான். “தொட்டுத்தொட்டுப் பேசினா விளையாட வரமாட்டேன்”. அவர்கள் அம்மாக்கள் நாங்கள் விளையாடும் பக்கம் திரும்பிக்கூடப் பார்த்ததில்லை. எந்த அசம்பாவிதங்களும் எப்போதும் நேர்ந்ததில்லை. கல்லூரியில் படிக்கும் போது கூட சிறு பெண்குழந்தைகளைத் தூக்குகையில் அவர்களது அம்மாக்கள் பெருமை பொங்கும் முகத்துடன் சிரிப்பார்கள். சில அழகான அம்மாக்கள் அவர்களுக்குப் போடும் தூண்டில் என்ற அச்சத்தில் தலையைத் திருப்பிக் கொள்வார்கள். ஆனால் யாருமே என் குழந்தையைத் தொடாதே என்று சொல்லியதில்லை. எல்லாமே மாறிப்போனது. பல சம்பவங்கள் யாரும் நம்பத் தகுதி இல்லாதவர்கள் என்று மாற்றின. ஐம்பது வயது ஆண் மூன்று வயதுப் பெண்ணின் கையைத் தொடுவது காமம் என்றால் வானம் ஏன் இன்னும் இடிந்து விழாமல் இருக்கிறது! ஒரு ஆணை விட பெண் குழந்தைகளை அப்பழுக்கில்லாது வேறு யார் நேசிக்க முடியும்? நல்ல கதை சுஷில்.
https://tamizhini.in/category/tamil/short-stories/
கற்றாழை – ஐ.கிருத்திகா:
கிருத்திகா ஒரு புதிய பாணியைத் தொடர்ந்து தனது கதைகளில் கொண்டு வருகிறார். திரையை விலக்கிப் பெண்களின் அகஉலகோடு பெண்ணுடலின் புதிர்முடிச்சுக்களை அவிழ்த்துக் கொண்டே செல்வது. இம்முறை White Discharge. முழுக்கவே இதைச் சொல்லும் கதையை நான் இப்போதே முதன்முறையாகப் படிக்கிறேன். Perfume என்பது சலனமில்லாமல் ஒருவரியில் வந்து போகிறது. அதற்குப் பின்னால் இருக்கும் strong smelly discharge. பெண்ணுடலில் ஒளிந்திருக்கும் இன்பங்கள்
எல்லோராலும் பேசப்பட்டு விட்டன. அந்த உடலில் மறைந்திருக்கும் வலிகள், அருவருப்பைத் தரும் துர்வாடைகள் ( நம் அன்னையர் பழம்சேலையில் கிழித்த துணியைக் கசக்குகையில் வெளிப்படும் துர்நாற்றத்தை எப்படி சகித்துக் கொண்டார்கள்?) முதலியன தமிழில் அதிகம் பேசப்படவேயில்லை. அதைப்போலவே ஆணுக்கு உறுப்பு சிறிதாக இருப்பதில் வரும்
Inferiority complex பெண்களுக்கு மார்பகங்களில் இருப்பது. அம்மாவுக்கும், பெண்ணுக்குமிடையேயான தலைமுறை இடைவெளி Periods மூலமாகவே சொல்லப்படுவது. கடைசியாகக் கற்றாழையில் இருந்து தெறிக்கும் பாலுக்கும் அதே நிறம். Fully loaded story and you are rocking Kritika.
தேவருக்காக வேய்ந்த கூரை – வில்லியம் ஃபாக்னர் – தமிழில் கார்குழலி:
Faulknerன் பெரும்பான்மைக் கதைகளில் இருந்து மாறுபட்டு, Stream of conscious methodல் இல்லாமல், எளிமையாக, நகைச்சுவையுடன் சொல்லப்பட்ட கதை. ஒரு வேலையை செய்யமாட்டேன் என்று சொல்வதை விட, கெடுத்துப் போக்கினால் அடுத்து யாருமே நம்மிடம் வேலை சொல்லப் பயப்படுவார்கள் தானே! கார்குழலியின் மொழிபெயர்ப்பு நன்றாக இருக்கிறது. Faulknerன் கதையை நரி வேட்டையாம் நரி வேட்டை என்று படிப்பதிலும் ஒரு சுவாரசியம் இருக்கிறது.
நன்மக்கள் – ஃஃப்ளானரி ஓ கானர் – தமிழில் கயல்:
Flannery O’Connorன் புகழ்பெற்ற கதைகளில் ஒன்று. அக்காலத்திய Southern mindsetஐ வைத்து எழுதப்பட்ட கதைகளில் ஒன்று. அவருடைய கதைகளில் Racial difference மற்றும் Class difference இந்தக் கதையில் வருவது போல் சர்வசாதாரணமாக வரும். கண்ணால் காண்பது பொய் என்ற தத்துவத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கதை. Connorன் சிறுகதைகளை அவை சொல்லப்படும் தன்மைக்காகவே இன்றும் அமெரிக்க மக்கள் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். இவ்வளவிற்கும் இவர் முப்பத்தி இரண்டு கதைகளே மொத்தம் எழுதியிருக்கிறார். கயலின் மொழிபெயர்ப்பு வெகு இயல்பாக, வாசிக்க எளிதாக இருக்கின்றது.