ஆசிரியர் குறிப்பு:

திருச்சி மாவட்டத்தில் முசிறியில் பிறந்தவர். மென்பொருள் நிறுவனமொன்றில் தலைமைப் பொறியாளராக, பெங்களூரில் பணிபுரிகிறார். இவரது நான்கு கவிதைத் தொகுப்புகளும், புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை என்ற சிறுகதைத் தொகுப்பும், ஏற்கனவே வெளிவந்தவை. இது இவருடைய முதல்நாவல்.

இந்தியாவைப் பொறுத்தவரை எல்லாப் பாரங்களும் பெண்களின் தலையிலேயே சுமத்தப்படுகின்றன. பெண் குழந்தைகளைப் பெற்றதால் வீட்டைவிட்டு வெளியேற்றிய சமூகம் முன்னர் இருந்தது. ஆண் பருவமடையாதது வெளியே தெரிவதில்லை, பெண் பருவமடையா விட்டால் அவள் ஏதோ முழுமையடையாத பெண், இருசி (Kallmann syndrome) என்று அழைக்கப்படுகிறாள். பத்துவயது சிறுமிகளின் பிறப்புறுப்பின் வெளிப்புறம் வெட்டப்படுவது, காம உணர்வைத் தூண்டாமலிருக்க என்று ஒரு சாராரால் இன்றும் செய்யப்படுகிறது. ஆண் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்வது போல், பெண்களால் பெரும்பாலும் செய்ய முடியாததற்கு உடலமைப்பின் இயற்கை சதி செய்கிறது. குழந்தையின்மையில் பெரும்பாரம் பெண்ணின் மீது விழுந்து, சகல பரிசோதனை முயற்சிகளும் அவள் உடலிலேயே நடத்தப்படுகின்றன. இந்த நாவல் குழந்தையின்மை என்ற கருவைச்(!) சுற்றிப் புனையப்பட்டது.

பரிசோதனைக்கு என்றாலும் பல ஆண் மருத்துவர்களிடம் உடலைக் காண்பிப்பதில் இருக்கும் அருவருப்பு, புதிதாகப் பெண் பார்க்க வந்தவனைப் பிடித்திருக்கிறதா இல்லையா என்ற குழப்பம், tensionஆல் Periods முன்னால் வருவது, PCOD பிரச்சனைக்கு ஒரே தீர்வாக கருத்தடை மாத்திரை இருப்பது, கணவனைப் பற்றிப் பிறந்தவீட்டார் பேசினால் கோபம் வருவது என்று பெண் கதாபாத்திரங்கள் மின்னுகிறார்கள். மையக்கதாபாத்திரமான நந்தினியை கச்சிதமாகச் செதுக்கியிருக்கிறார் லாவண்யா.

குழந்தையின்மை என்பது மற்றவர்களுக்கு அப்படியா என்று கடந்து போகும் செய்தி. ஆனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அது வாழ்நாள் துயரம். சுபகாரியங்களில் ஒதுக்கி வைக்கும் நெருங்கிய உறவினர், இவ்வளவு சம்பாதிக்கிறார்கள், பிள்ளையா, குட்டியா செய்யட்டுமே என்று காசு விசயத்தில் எதிர்பார்ப்பை வளர்த்துக் கொள்கிறார்கள்.
இன்னொரு வகை குழந்தை பிறந்து, மனவளர்ச்சியில்லாமல் போவது. குழந்தையின் கையில் பொம்மையை விளையாடக்கொடுத்துப் பின் பிடுங்கிக் கொள்ளும் குரூர விளையாட்டு. இந்த இரண்டையும் சுற்றியே நாவல் நகர்கிறது.

மையக்கரு குழந்தையின்மை என்றாலும், நாவல் பல குடும்பங்களின் கதைகளையும், பலரது அலைக்கழிப்பு, ஆசாபாசங்களையும் சொல்கிறது. தான் பார்க்காத, கேட்காத விசயங்களை லாவண்யா தொடுவதே இல்லை, அதனாலேயே இவர் கதைகள் யதார்த்தத்தை பிரதிபலிக்கின்றன. முன்னும், பின்னும் காலத்தில் நீந்தி பல பாத்திரங்களின் கதையைச் சொல்லும் நாவல், கடைசிவரை ஆரம்பவேகத்தைக் குறைப்பதேயில்லை. உறவுகளின் மாறும் நிறங்கள் இந்தக்கதையில் மற்றுமொரு முக்கியமான விசயம். அவரவருக்கு குடும்பம், குழந்தை என்று வரும்பொழுது தான் உண்மையான பாசம் விளங்கும். அழகுநாச்சி அம்மனில் ஆரம்பித்து ரங்கனிடம் முடிகிறது. கடவுள்கள் பேசிவைத்துக்கொண்டு கைவிரிப்பார்களா! மலர்களின் பருவங்கள் சில அத்தியாயங்களின் உபதலைப்பாக, கவித்துவமும், பொருள் பொதிந்த தலைப்புமாக நாவலுக்கு, நிறைய இடங்களில் நந்தினி அலைபாய்தலைப் பக்கத்தில் இருந்து பார்ப்பது போல் உணர்வைத் தரும் மொழிநடை , லாவண்யா சொல்வதை விட வாசகர் புரிந்துகொள்வது ஏராளம். நன்றாக வந்திருக்கிறது நாவல்.

பிரதிக்கு:

காலச்சுவடு பதிப்பகம் 4652-278525
முதல்பதிப்பு நவம்பர் 2021
விலை ரூ.425.

Leave a comment