ஆசிரியர் குறிப்பு:

ஈழத்தின் யாழ்/நயினா தீவில் பிறந்தவர். தற்போது தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார்.
ஜெப்னா பேக்கரி, கலாதீபம் லாட்ஜ், புத்திரன் ஆகிய மூன்று நாவல்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. இது சமீபத்தில் வெளிவந்த இவரது நான்காவது நாவல்.

ஜெப்னா பேக்கரியின் Controversyஆல் தான் வாசு முருகவேலை முதலில் படித்தேன். பின் கலாதீபம் லொட்ஜ், (வாழ்வைக் கடல் நனைத்தது, துயரமே அப்போது கடலாக இருந்தது) வாசு முருகவேலை எந்தப் புத்தகம் வந்தாலும் படிக்கும் ஆசிரியர்கள் பட்டியலுக்கு கொண்டு போய் சேர்த்தது. புத்திரன் ஏமாற்றவில்லை. மூத்த அகதி நான்காவது.

முதலாவதாக, அடுத்தடுத்து வந்த நாவல்கள் மூன்றும் முந்தையதை விட ஒரு படி மேல். இரண்டாவது இந்த நாவலை நவீன கதைசொல்லலின் மூலம் சொல்லியிருக்கிறார். JCB விருதின் இறுதிப் பட்டியலுக்கு வந்த Name Place Animal thing போன்ற பல நூல்களில் இதே கதைசொல்லல். நேர்க்கோட்டுக் கதை இல்லாமல் சம்பவங்களின் சிதறலாய் கொடுத்து வாசகர் மனதில் முழுச்சித்திரத்தை வரைந்து கொள்ளச் செய்யும் யுத்தி. நான்காவது நான் வாசித்த வகையில், தமிழகத்தில் வாழும் ஈழஅகதிகளின் வாழ்க்கையை (நாவல் சென்னையின் சில பகுதிகளைத் தாண்டவில்லை) நேர்மையாக, First hand informationsகளுடன், முழுமையாக ஆவணப்படுத்தும் முதல் நாவலிது.

குஜராத்தில் முஸ்லீம்கள் பதறிக் கொண்டே வாழ்ந்தார்கள். காஷ்மீரை சுற்றிப்பார்க்க சென்ற நாம் பதட்டத்துடனே ரசித்தோம். தமிழகத்தில் பாதுகாப்பாக இருந்து கொண்டு, கலவரத்தைத் தூண்டிவிட கர்நாடகாவில் அடிகளை நாம் வாங்கிக் கொண்டோம். சொந்த நாட்டில் எத்தனையோ நூற்றாண்டுகளாக வாழும் மண்ணின் மைந்தர்களுக்கே இதுவென்றால், அகதி என்ற பெயருடன் வருபவர்கள் எதை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என்பது உங்கள் கற்பனைக்கு. ஆஸ்திரேலியா இல்லை கனடா இல்லை, இங்கிலாந்து இல்லை, பிரான்ஸ் இல்லை, சென்னையில் தான் இந்தக்கதை நடக்கிறது. மொழி ஒன்றே எனில் நிலம் வேறு.

நாவலின் முதல் அத்தியாயத்தில் ‘வெல்லும் தமிழீழம்’ என்பது போல் Dark humour நாவலில் இறுதிவரை கலந்து வருகிறது. அத்துடன் கமலை புலி அடித்தது , காவல்துறைக்கு எழுதும் கடிதம் அகதிஇலக்கியம் என்பது போல் இயல்பான பகடியும். போர் முடிந்து அடுத்து வாழ்வு தொடங்கித் தான் ஆக வேண்டும். எங்கே, எப்படி என்பது தான் கேள்வி. அதை எந்த Accusing toneம் இல்லாது, தமிழகத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் பேராதரவு வழங்கும்! ஈழத்தமிழர்களின் வாழ்வை யதார்த்தமாகச் சித்தரித்திருக்கிறார் இந்த நாவலில். அரசியல் கூட்டத்தில் ஆரம்பித்து, அதிலேயே முடிவதும் ஒரு நையாண்டி தான்.

கலாட்டாக் கல்யாணம் நடந்து முடிவது, காவல்துறைக்கு வீட்டு உரிமையாளர் கொடுக்கும் கடிதம், சிலோன்அகதிகளுக்கு
வீடில்லை என்பது, பிரெஞ்ச் அரசாங்கம் Deport செய்த ரூபன் சென்னையில் தஞ்சமடைவது, கனடா விசாவிற்குக் காத்திருப்பது, ஈழத்தமிழரை நம்பி எம்.ஜி.ஆர் நகரைச் சுற்றிய மூன்று கடைகள், இலங்கை எம்பஸியில் பதிவதற்கு உடன்செல்ல நண்பர்கள் பயப்படுவது, என்பது போன்று துண்டுதுண்டு சம்பவங்களால் அகதி வாழ்வு சொல்லப்படுகிறது.

அகதி வாழ்வில் காதலும், காமமும் அழைக்காமல் வந்து சேர்ந்து கொள்கின்றன.
அதற்காக வர்சா, ஜீவா போல் பலர் காத்திருக்கின்றனர். நார்வேயில் இருந்து வந்த நகுலன் போல் சிலர் தலைகால் புரியாமல் ஆடுகின்றார்கள். அநாதரவாக ஒரு மரணம் நிகழ்கிறது. ஒரு கொலையும் நடக்கிறது. The Employees என்னும் புக்கர் பட்டியலில் வந்த நாவல் பல ஊழியர்களின் அறிக்கைகள். Susanna Clarke ன் Piranesi என்ற Women Fiction Awardஐ இவ்வருடம் வென்ற நாவல், ஒருவர் எழுதிய Journalகளின் தொகுப்பு. நவீனக்கதை சொல்லல் ஒரு மையக்கதாபாத்திரத்தின் பிரச்சனைகளை சுற்றி நகர்வதில்லை. வாசுமுருகவேலும் இந்த நாவலில் பாரம்பரியக் கதைசொல்லலில் இருந்து விலகி, ஒரு நல்ல படைப்பை அளித்திருக்கிறார். இதற்கு அளிக்கப்படும் வரவேற்பு இன்னும் பல எழுத்தாளர்களின் பரிட்சார்த்தமான படைப்புகளுக்கு தூண்டுதலாக இருக்கட்டும்.

பிரதிக்கு:

எழுத்து பிரசுரம் (Zero Degree) 89520 61999
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ. 290.

Leave a comment