ஆசிரியர் குறிப்பு:

திருவாரூர் மாவட்டம் தக்களூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். திருவாரூரில் அஞ்சல்துறையில் பணிபுரிகிறார். ஏற்கனவே மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல், ஒரு கட்டுரைத் தொகுப்பு ஆகியவை வெளியாகி இருக்கின்றன. இது நாலாவது சிறுகதைத் தொகுப்பு.

நம்மைச் சுற்றிலும் கதைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. உங்கள் முகம் தெரிந்ததும், சதா, படாரென்று கதவைச் சாத்தும் எதிர்வீட்டுக்காரி, கண்களைத் துடைக்காத, பீடிக்கறையேறி மஞ்சள் பற்கள் கொண்ட காய்கறிக்காரருடன் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதை தற்செயலாக நீங்கள் பார்க்கையில், ஒரு கதை கண்டிப்பாக உருவாகியே தீரும்.

தொகுப்பின் நீண்ட கதை பூரணியை எடுத்துக் கொள்ளலாம். இந்தக் கதைக்கு இவ்வளவு நீளம் தேவையா என்பது ஒரு முக்கியமான விசயம். கனரா வங்கியின் துணைமேலாளராகச் சேர குறைந்தது CA அல்லது MBA போன்ற தகுதிகள் வேண்டும்.
அப்படி இருந்திருந்தால் விக்னேஷ் போல் வங்கித் தேர்வுகளுக்காகத் தயார் செய்ய வேண்டியதில்லை. அடுத்து மூன்று வருடத்திலேயே புகழ்பெற்ற தணிக்கை நிறுவனத்தில் மேற்பார்வையாளராகச் சேர்கிறான். E &Y போல நிறுவனம். முடியுமா என்பது அடுத்த கேள்வி. அடுத்து பூரணி.
டிகிரி முடித்து எழுத்தராக இந்தியன் வங்கியில் சேர்பவர் எந்தத் தகுதியில் மேற்பார்வையாளராக ஆடிட்டிங் கம்பெனியில் சேர்கிறார்? சேர்ந்து பத்து வருடங்களில் விருப்ப ஓய்வுபெற்றால் எந்த தனியார் தணிக்கை கம்பெனியாவது வாழ்நாள் முழுக்க உட்கார்ந்து சாப்பிடும் அளவு Settlement தருமா? கீழ்தளத்தில் கம்யூட்டர் ரிப்பேர் என்றால் முதல்தளத்தில் இவனைத்தேடி வந்து இவனது அறையில் வேலை செய்யும் அளவிற்கு என்ன நெருக்கம்? அது இயல்பானதா? பூரணி- வருணை இவன் அலுவலகத்தில் பார்க்கும் சித்திரமும் பூரணி வருணுடனான உறவைச் சொல்லும் தகவல்களும் முரண்பாடு இல்லையா?. மாலையில் கிளம்பியதாக சொல்பவன், இரவு ஏழுமணி ஆகவில்லை என்கிறான். இடையில் நான்குமணிநேரம் கலவியும் கலவி சார்ந்த இதரவேலைகளும்.
காலப்பிழையா இது இல்லை ஒருவேளை தேவலோகம் பூலோகம் இரண்டிற்கும் இடையேயான காலவேறுபாடா? இன்னும் இந்தக் கதையில் பலவிசயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். தெரியாத விசயங்களை ஏன் எழுத வேண்டும் என்பது தான் ஆதாரக்கேள்வி!

வேம்பு கதை ஒரு நினைவுக்கோர்வை என்ற வகையில் OK. கற்றாழைக் கதையில் அமானுஷ்யம் மற்றும் Open ending சேர்வதால் சுவாரசியமாக இருக்கிறது. ஆனால் அதிலும் ஒரே கதையின் முக்கால்பாகம் மறுபடி சொல்லப்படுகிறது. மீன்கொத்தி Sharp ஆன கதை. முதல் அடி இலக்கிய விசாரம், நன்றாக வந்திருக்கிறது. மலர்கள் மற்றொரு நீளக்கதை. இதிலும் அறிமுகமில்லாத Territoryல் நுழைந்த குழப்பம் இருக்கிறது. முடிவின்மையின் வடிவம், நறுமணம், மெல்லிய இடர் எல்லாக் கதைகளுமே Fine tuningக்கு ஏராளமான வாய்ப்பு இருக்கும் கதைகள். பொன்னுலகம் கதையில் BOT soulmate ஆகிறது. இதன் சாத்தியக்கூறுகளை ஆரூர் பாஸ்கர், கார்த்திக் பாலசுப்பிரமணியன் போன்ற நண்பர்களுக்கு விட்டு விடுகிறேன். Sci fi கதை என்று எடுத்துக் கொண்டால், இப்படி எல்லாம் நடப்பதற்கு முன் வாழ்ந்துவிட்ட ஆசுவாசம் இல்லாமல் இல்லை. தப்பித்தோம்.

சுரேஷ் பிரதீப் திறமை வாய்ந்த எழுத்தாளர். பத்து கதைகள் கொண்ட இந்தத் தொகுப்பில் Impressive என்று ஒரு கதையைக்கூட என்னால் சொல்ல முடியவில்லை. ஒருவேளை இவரது சமீபத்திய குறுநாவல் இவர் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கலாம். இவருக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் சொல்வது என்னவென்றால் நமக்கு அனுபவமில்லாத, அதிகம் தெரியாத களங்களை முழுமையான ஆய்வு செய்யாது எழுதுவது எப்போதுமே ஆபத்து நிரம்பியது.

பிரதிக்கு:

அழிசி 7019426274
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ.180.

Leave a comment