ஆசிரியர் குறிப்பு:

வேதாரண்யத்தில் வசிப்பவர். முகநூலில் தொடர்ந்து கவிதைகள் எழுதிவரும் இவரது முதல் கவிதைத் தொகுப்பு இது. பிப்ரவரி 2022ல் வெளியாகியிருக்கிறது.

அன்பை, குழந்தைமையுடன் கூடிய ஆச்சரியத்தை, மனிதர்கள் மேலிருக்கும் நம்பிக்கையை, தனக்குத்தானே அல்லது எதிரிருப்பவருடன் நடத்தும் உரையாடல்களே
தேவிலிங்கத்தின் கவிதைகள். நம்மைச் சுற்றி அன்றாடம் நடக்கும் விசயங்களை, எளிய வார்த்தைகளில் கோர்வையாகச் சொல்லி இருக்கிறார்.

விரைவில் நல்லது நடக்கும் என்று, கம்பின் நுனியில் கட்டப்பட்ட கேரட்டைத் தின்னும் ஆசையில் குதிரையின் ஓட்டமாக வாழ்க்கை நகர்கிறது. அறியாத ஒன்றின் மீதான எதிர்பார்ப்பு, எதிர்காலம் முழுதும் பரவி, கனவின் சாயலைக் கொண்டு வந்து சேர்க்கிறது.

” களைக்கும் போதெல்லாம் தென்படும்
கானல் நீர்க்குளமொன்று,
குளமே கானல் எனில்
பூத்திருக்கும் கண் கவர் மலர்கள்
அனைத்தும் பொய்ப்பூக்கள்….
அசராமல் அள்ளிப்பருக, பருக
நீர்பெருகும் அவ்விடத்தில்
தாகம் தணிந்தபாடில்லை….”

கு..ப.ராவின் ஆற்றாமை சிறுகதைக்கு நேரெதிர் திசையிலிருந்து வருகின்றன இந்த வரிகள். இப்படித்தான் தேவிலிங்கம்
பிரியங்களைப் பூங்கொத்துகளுக்குப் பதிலாக நீட்டுவது.:

” புதிதாய் திருமணமாகி மோகக்கதைகளை
கூறுபவளின் மின்னும் கண்கள் கண்டு
இவ்வாழ்க்கை
இவளுக்கு நிரந்தரமாக அமைய வேண்டுமென்று பிராத்திக்கிறது
கணவனைப் பிரிந்தவளின் மனது”

பெண் மணமாகி வருகையில், முதலில் கொல்லப்படுவது அவளுக்குள் இருக்கும் சிறுபெண். அந்த சிறுமியை உயிர்ப்புடன் வைத்திருப்பவர்களுக்கு, பணம் குறைவென்றாலும் மகிழ்ச்சிக்குக் குறைவில்லை.

” திருவிழா இராட்டினத்தில்
ஏறியே ஆக வேண்டுமென
அடம்பிடிக்கும் குழந்தையை
காசில்லாமல்
தன்கையை மடக்கித்
தொங்க சொல்கிறவனின்
மறுகையில் தொத்திக்கொள்கிறவளின்
கண்களில் மின்னிக்கொண்டிருப்பது
முப்பதாண்டு பால்யத்தின்
அதே ராட்டினக்கனவுகள்”

தேவிலிங்கம் காத்திருக்க வேண்டியது இது போன்ற கவிதைகள் மலரும் தருணத்திற்காகத் தான். மூன்று பேர் வரும் இந்தக் கவிதையில், குழந்தையின் ஆசையும், கணவனின் இயலாமையும், மனைவியின் Nostalgiaவும் syncஆகும் நேரத்தில் கவிதை முகிழ்கிறது. நிறைசூலியின் கணவனின் கள்ளஉறவை மறைக்கும் பெண் போன்ற அற்புதத் தருணங்களை ஏந்தி வரும் கவிதைகள், சம்பந்தமில்லாத விசயங்கள் கலக்கும் போது, மிகப்பெரிய ஹாலுக்கு போடப்பட்ட நாற்பது வாட்ஸ் பல்ப் ஆகிப்போகின்றன.

நெய்தல் நிலத்தை ஒட்டிய கவிதைகள் பல இருக்கின்றன இந்தத் தொகுப்பில். மீன் துண்டுகள் கூட பிரியத்தின் குறியீடாக வருகின்றன. அன்பு நிறைந்தவர்களுக்கு காண்பதெல்லாம் அதுவே. நாகவாசனை போன்ற சொல்லாடல்களும், சாயலில் இருப்பவரையெல்லாம் கட்டிக்கொள்ளத் துடிக்கும் பிரியமும் என்று தனிமொழி தேவிலிங்கத்திற்கு. அடுத்துவரும் தொகுப்புகளில் அதை இன்னும் கூராக்கிக் கொள்வார் என்று நம்பிக்கை கொள்வோம்.

பிரதிக்கு:

கலக்கல் ட்ரீம்ஸ் 9840967484
முதல்பதிப்பு பிப்ரவரி 2022
விலை ரூ.100.

Leave a comment