தீப் ஹல்தர்:

இருபது வருடங்களாக பத்திரிகையாளராகப் பணி. தற்சமயம் இந்தியா டுடே குழுமத்தின் நிர்வாக ஆசிரியர். மதம், சாதி, பாலினம் முதலியவைகளில் நிகழும் சமூக மாற்றங்கள் குறித்து எழுதி வருகிறார்.

விலாசினி:

சென்னையில் வசிப்பவர். சுயாதீனப் பணியாளர். பிரக்ஞை என்ற பதிப்பகம் மூலம் பதினைந்து புத்தகங்களைப் பதிப்பித்தவர். இது இவருடைய நான்காவது
மொழிபெயர்ப்பு நூல். முந்தைய மூன்றும் புனைவுகள், எனவே இது மொழிபெயர்ப்பில் முதல் அல்புனைவு நூல்.

எந்த அரசாங்கத்திற்கும் எளிய மக்களின் தீனக்குரல் கேட்பதில்லை. எந்த ஜாதியாக, மதமாக இருந்தாலும் எளிய மக்களின் உயிரிழப்பு பொருட்படுத்தப்படுவதில்லை.
கட்டவிழ்க்கப்பட்ட எல்லாக் காவல்துறையும் கற்பனையிலும் எண்ணமுடியாத அளவு வன்முறைகள் செய்யும். இனப்படுகொலை நடந்து முடிந்து, இவர்கள் குற்றவாளி என்று உலகம் முழுதும் தெரிந்தாலும் யாரும் தண்டனை பெற்றதாக சரித்திரம் இல்லை. ஹிட்லரும், ஹிம்லரும் மட்டுமா அத்தனை படுகொலைகளையும் நடத்தினார்கள். ஆயுதங்களாகச் செயல்பட்ட நாஸிகள் மக்களோடு மக்களாகக் கலந்து விட்டனர். சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப்பெரிய படுகொலைகளில் ஒன்றை, மக்களின் பார்வைக்கு அதிகம் வெளித்தெரியாத விசயங்களை, ஆவணமாக்கும் முயற்சியே இந்த நூல்.

நாஸிகள் தோற்பது உறுதி என்று தெரிந்ததும் வதைமுகாம்களின் தடயங்களை அழிக்கத்தொடங்கினார்கள். தப்பிப் பிழைத்தவர்கள் மூலமாகவே அவர்கள் நிகழ்த்திய கொடூரங்கள் உலகிற்குத் தெரியவந்தன. இந்த நூலும் வாய்மொழி வரலாறு தான். ஒன்பது பேர் நடந்தவற்றைச் சொல்கிறார்கள். அவர்களில் ஒருவர் சமூகசேவகர், ஒருவர் பத்திரிகையாளர், ஒருவர் எழுத்தாளர், ஒருவர் வழக்கறிஞர், ஒருவர் அன்றைய அரசாங்கம் மற்றும் காவல்துறையின் பிரதிநிதி, மீதி எல்லோருமே பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்கள். எல்லோருமே உயிர்பலி ஆயிரங்களில் என்று சொல்கையில், காவல்துறைக்காரர் பத்துக்கும் குறைவு என்று சொல்கிறார்.

அகதிகள் பெருவாரியான அளவில் வருவதை எந்த நாடும் ஏற்றுக் கொள்வதில்லை. பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல காரணங்கள் அதற்கு இருக்கின்றன. இங்கே ஒரு தீவை சொந்தமாக்கி அகதிகள் குடியேறியது, அவர்களை அங்கிருந்து அகற்ற காவல்துறை வன்முறை அதை எதிர்த்து அகதிகள் வன்முறை என்று அடுக்கடுக்கான நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. காவல் துறையினர் குடிநீரில் விஷம் கலந்தது, குடிசைகளை எரித்தது என்பது போன்றவை எப்போதும் More Loyal than the King என்பதை நிரூபிக்கும் முயற்சிகள்.உதாரணமாகத் தமிழ்நாட்டில் சமீப காலத்தில் ஜல்லிக்கட்டு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு போல பல நிகழ்வுகள். காவல்துறையினருக்கு மூன்று ஆயுள் தண்டனையை எந்த நீதிமன்றமும் வழங்குவதில்லை.

பால்யகாலத்தில் கதை சொன்னவரின் கதை, நினைவுகளை அரிக்க, அதை ஊருக்குச் சொல்லும் முயற்சியே இந்த நூல்.
மரிச்ஜாப்பியுடன் தொடர்புடைய பலரையும் நேரில் சந்தித்து அவர்களின் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். இருந்த இட.த்தில் எல்லா நூல்களையும் எழுதும் பிருஷ்டம் தேய்ந்த எழுத்தாளர்கள் நிரம்பிவரும் காலகட்டத்தில், இந்த நூலுக்காக நிறைய உழைத்திருக்கிறார், மரிச்ஜாப்பியை நேரில் சென்று பார்த்திருக்கிறார்.

விலாசினி முதல் நாவலிலேயே தெளிவான, கச்சிதமான மொழிபெயர்ப்பை செய்தவர். ஆடுஜீவிதம் ஆங்கிலப்பிரதியைப் படித்துக் குறுகிய காலகட்டத்திலேயே இவருடைய தமிழ் மொழிபெயர்ப்பைப் படித்ததால், இவருடைய வார்த்தைத் தேர்வுகளையும், வாக்கிய அமைப்பையும் ரசிக்க முடிந்தது. இந்த நான்காவது நூலும் முதல் மூன்றைப் போன்றே நல்ல மொழிபெயர்ப்பு.

பிரதிக்கு :

எதிர் பதிப்பகம் 99425 11302
முதல்பதிப்பு ஜனவரி 2022
விலை ரூ.200

Leave a comment