ஆசிரியர் குறிப்பு:

புதுக்கோட்டையில் பிறந்து பெங்களூரில் வசிப்பவர். காலாதீதத்தின் சுழல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. இது சமீபத்தில் வெளிவந்த இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு.

உன்னிப்பாகக் கவனிக்காவிடில் காற்றில் கரைந்து போயே போகும் வார்த்தைகள் எதுவாகவேனும் இருக்கலாம் “என்ன அவசரம்” ” அவசரத்தைப் பாரேன்” ” பாரேன் இதை” எதுவாகவேண்டுமானாலும்.

” உரசியமர்த்தியது
கண்சிமிட்டுவதற்குள்ளெனினும்
இனி உதவாத தீக்குச்சியென
மளுக்கென
முறிக்கும் மனமற்று
ஒதுக்கி வைக்கிறேன்
திரி தூண்ட உதவுமென
வார்த்தைகளை’

இது காதல் கவிதை. மோகம் மழையென பெய்து நிரப்புதல் அல்லது நிரப்பிக் கொள்ளுதல் முடிந்த உடன் உனக்கே உயிரானேன் என்று நேசத்தை சொல்வது வழக்கம். இந்த வரிகளைத் தனியாகப் பார்த்தால் தத்துவவிசாரத்தில் முடிவது போலில்லை?

” நெகிழ்தலுறும் போதில்
பண்டத்தை
சட்டென கைமாற்றி
கால்நடையாய்
பிட்சை கேட்டு நகரும்
மனத்திண்மையை
எவரிடம் யாசிக்க”

வாழ்க்கையின் கணிக்க முடியாத தன்மையில் மனிதம் கட்டுண்டு எதிர்காலத்தை எதிர்பார்க்கும். காய் விழுமோ அல்லது கல் விழுமோ ஆனால் எறிவதை நிறுத்த முடிவதில்லை.

” கண் சிமிட்டும்
நொடியின் பின்னத்துக்குள்
நிகழ்ந்து விடுகிறது
நடக்காதென ஏங்கும்
அற்புதங்கள்
நடக்கக் கூடாதென
பகீரதப் பிரயத்தனமிடும்
ஊழ் வினைகள்”

அம்மாடி நீதான் இல்லாத நானும்
வெண்மேகம் வந்து நீந்தாத வானம் என்பதைக் கேட்டால் மீதி என்ன இருக்கும் வானத்தில் என்று தோன்றும்.

” துரத்தும் நினைவுகளில்
தொலைந்த பின்
எனதென்று மிச்சமாக
எஞ்சுவது
எதற்கும் உபயமின்றி
கிடப்பது நான் மட்டுமே”

நீருக்குள் மூழ்கி உயிர் இழத்தல், பிரியத்துக்குள் மூழ்கி உயிர் இழத்தல் எதுவாயினும் சம்மதம்.

” அலை பாய்தலுக்கு
இடையேயான அமர்வு
ஒரு நொடி வாய்க்கையில்
காலடித்தடங்கள் இழுக்க
பேரன்பின் கனதி பரவி
புதைமணலாய் விழுங்குகையில்
கயிற்றின் முனையை
நீ விடுத்ததும் நன்மையென்றானது”

ரத்னாவின் முதல் தொகுப்பு பக்தியும் காதலும் கலந்த ஒன்றை, புது மொழியில் மீட்டுருவாக்கம் செய்யும் பல கவிதைகளை கொண்டது. விரும்புகிறேன் உன்னை என்பதோடு விடமாட்டாய் அல்லவா என்பதும் அதில் பொதிந்திருக்கும். அதிலிருந்து முழுசரணாகதியை நோக்கி நகர்ந்திருக்கிறார் இந்தக் கவிதைகளின் மூலம். விரும்பி சுயமிழத்தல் காதலில் இறுதி நிலை. ” நான் மறைந்து நீயே நிறைந்து விடுகிறாய்”, ” கைப்பற்றி எனை உள்வாங்கும் பெருவெளியாகிறாய்”
” தளை கழற்றி ஓடவிடு திரும்புதல் உ.ன்னிடமே” ” ஆதியற்ற அந்தம் நீயென மீச்சிறு பாகமளித்தாய்” என்பது போல் ஏராளமான வரிகள் நூல் முழுவதும்.

தத்துவார்த்தம் முதல் தொகுப்பை விட இதில் கனமாக வந்திருக்கிறது. ” தற்செயல்கள் ஈந்து முன் நிற்கையில் அற்றது எது பெற்றது எது? ” கூழாங்கல் விழுங்கி விழுங்கி செமிக்கக் கற்றுக் கொண்டதும் அனுபவமே”
கண்ணதாசனின் காதல் பாடல்களின் நடுவில் கூட தத்துவார்த்தம் இடைவந்து கண்சிமிட்டும். ” சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை”. அதே போலவே ரத்னாவின் பல கவிதைகளில் தத்துவ விசாரம் இயல்பாகக் கலந்திருக்கிறது.

ஒரு பெண், சில நேரம் குழந்தையாக நடந்து கொள்வாள், அதிகம் பேச மாட்டாள் ஆனால் மனதுக்குள் கொள்ளை பிரியம், தொட்டாற்சிணுங்கி, சட்டென வேதனைக்கும் குதூகலத்திற்கும் மாறிமாறி போய் வருபவள். கவிதைகளை வாசித்த உடன் கவிதைகளில் வரும் பெண் குறித்து என் மனதில் தோன்றிய Personality Profiling இதுவே. கவிதைகளில் உணர்வின் வேகம் அதிகரித்திருக்கிறது. காதலித்தல் அதிக சுகமா அல்லது காதலிக்கப்படுதல் அதிக சுகமா என்ற கேள்வி, விடையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.

பிரதிக்கு:

பரிதி பதிப்பகம் 72006 93200
முதல்பதிப்பு மார்ச் 2022
விலை ரூ.150.

Leave a comment