அப்பாம்மை – ஆர். காயத்ரி :

ஆயிரம் தான் சொன்னாலும் ஆணின் உலகம் வேறு, பெண்ணின் உலகம் வேறு. அது அவர்களின் எழுத்திலும் எப்படியும் வெளிப்பட்டே தீரும். நான்கு நாட்கள் டப்பாவில் அடைத்த முட்டைக்கோஸ் (அது புதிதாக வேகும் போதே பக்கத்தில் நிற்க முடியாது) ஆலிலை வயிறு என்ற வார்த்தைகளில் தோன்றும் வன்மம் ( ஆனால் பின்னால் இந்த வார்த்தைகள் பச்சாதாபத்தை வளர்க்க உதவப் போகின்றன) , பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்குமுள்ள கடலளவு வித்தியாசம் (சேனைக்கிழங்கை என் மனைவி கருணைக்கிழங்கு என்பார்), சாணத்தை அப்பி மறைப்பது என்று முழுக்க பெண்ணின் பார்வையில் எழுதப்பட்ட கதை.

கதைசொல்லி சிறுபெண் இல்லை, அவளுக்கும் மணமாகி விட்டது. நிர்வாணம் பழக்கமாகி இருக்கும். எனவே பதின்வயது சிறு பெண்ணின் Emotional foolishness கிடையாது இந்தக்கதை. அவளுக்கு இந்த சடங்குகள் தெளிவாக, அப்பாம்மையை அவமானப்படுத்துவது புரிகிறது. ( சிறுவயதில் பார்த்த பிராமணப்பெண் ஒருவர் விதவையான சடங்கில், இரண்டு கைகளையும் மோதி வளையல்களை நொறுக்கி, பொட்டை அழித்து…… அந்த மாமி எதற்காக அழுதிருப்பார்?)

அடுத்து அப்பாம்மை எனும் ஆகிருதி. அவள் இருக்கும் வரை ராணி போல் அவள் விருப்பத்திற்கு வாழ்ந்து முடிந்தவள். அவளது கதாபாத்திரம் தெளிவாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ( மாமியாருடையதும் கூடத்தான்….. சபைநிறைந்த உருவம்). முதல்முறை படித்த போதே காயத்ரியிடம் கூறினேன். இது உயிரோட்டமுள்ள கதை என்று. சில கதைகள் தங்களைத் தாங்களே எழுதிக்கொள்ளும். காயத்ரி தொடர்ந்து எழுத வேண்டும்.

உதிரும் உடல் – மஞ்சுநாத்:

ருத்ர விந்து கதையைப் படித்த போது, சித்த மருத்துவத்தின் கூறுகளைக் கலந்து சிறுகதை எழுதுவதில் இவருக்கு போட்டியாளர்கள் குறைவு என்று எழுதிய நினைவு. இந்தக் கதையில் மீண்டும் அதை நிரூபித்திருக்கிறார்.

இரமணீயம் டீச்சர் குறித்த பள்ளிச்சிறுவனின் பார்வையும், இப்போதைய பார்வையும் இந்தக் கதையின்
ரத்த நாளங்கள். எல்லோரும் மணமுடிக்க விரும்பிய பெண், தோற்றப் பொலிவு இல்லாத, வயது வித்தியாசம் அதிகம் கொண்ட ஒருவரை ( அரசஇலை அழைப்பிதழ்கள் வழங்கும் டீச்சரின் முகத்தில் மலர்ச்சியே இல்லை) திருமணம் செய்வதும், பலவருடங்கள் கழித்து அதே மனிதர், உருவத்தில் என்ன இருக்கு என்று கேட்கும் கேள்வியில் வாழ்க்கை சொல்லிக் கொடுக்கும் நகைமுரண்களில் ஒன்றும் வருவது தனி அழகு. ஆறுமாதத்தில் குணமாக்கி விடலாம் என்பது சித்தமருத்துவர்கள் வாயால் நாம் அடிக்கடி கேட்டது. Perfect short story. வாழ்த்துகள் மஞ்சுநாத்.

குதூகலம் – ஆன்டன் செகாவ்- தமிழில் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்:

இந்த உலகில் எல்லோருக்குமே பதினைந்து நிமிடப் புகழ் உண்டு என்பது ஒரு Popular Saying. சமூக ஊடகங்களின் வளர்ச்சிக்கு முன், திருமண தினம் அந்த புகழைக் கொடுத்தது. இப்போது, எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும் நேர்மறை அல்லது எதிர்மறைப் பதிவைப் பதிவிட்டால் அந்த புகழ் கிடைத்துவிடும். இந்தக் கதையில் முக்கியமான விசயம் அவனது பெற்றோரின் Reaction. பெற்றோர்களை விடப் பிள்ளைகளை அதிகம் புரிந்தவர் யார்? நல்ல மொழிபெயர்ப்பு.

மலையாளத் தாத்தா – சித்துராஜ் பொன்ராஜ்:

சித்துராஜின் சமீபகால கதைகளில் இருந்து விலகிய Sithuraj’s touch இல்லாத சாதாரண கதை. அவசரமாக எழுதியதா இல்லை வேறு காரணமா தெரியவில்லை. பணம் என்றால் நிறம் மாறும் உறவுகளை சித்துராஜால் இன்னும் ஆழமாக, நுட்பமாக எழுதியிருக்க முடியும்.

அமிர்தம் – ஷான்:

ஆயா இட்லி சுட்டு விற்று ஏமாந்த கதை.

நான்கு கட்டுரைகளுமே மிக நன்றாக இருக்கின்றன. ஒன்றுக்கொன்று வேறுபட்ட Topicகளை பேசும் கட்டுரைகள். பிரமிளின் இதுவரை வெளிவராத கட்டுரை போனஸ்.
கவிதைகள் (மொழிபெயர்ப்புக் கவிதை உட்பட) எல்லாமே தரமாக இருக்கின்றன.
சிறுகதைகள் தான் தெரிவில் குறைபாடு இருக்கிறது. சிறுகதைகளே இல்லாமல் வந்தால் கூடப் பரவாயில்லை, அகநாழிகை போன்ற கலை இலக்கிய இதழ்களை தனியொருவராக அகிலன் தரத்திற்குக் கொண்டுசேர்க்கும் திறம் படைத்தவர் நம்மிடையே ஏராளமாக உண்டு. இதழ் தொடர்ந்து வெளிவர வாழ்த்துகள்.

பிரதிக்கு

அகநாழிகை 70101 39184
தனி இதழ் விலை ரூ.150.

Leave a comment