நான் சிறுவயதில் இருந்தே எந்தப் பத்திரிகையிலும் ஒரு தொடர்கதை கூடப் படித்ததில்லை. காத்திருப்பில் பொறுமை இருந்திருந்தால் சில காதல்கள் கூட கைகூடியிருக்கும். இப்போது ஏராளமான நூல்களைத் தூங்கவைத்துவிட்டு வாரஇதழ், மாதமிருமுறை எதையும் வாசிப்பது மித்ரதுரோகம் போல் மனதை உறுத்துகிறது. எதனால் சொல்வனத்தை மட்டும் தவிர்க்கிறேன் என்று இப்போது நிறையப்பேர் கேள்வி கேட்பதால் இந்த விளக்கம் அவசியமாகிறது.

அனுராதாவின் மொழிபெயர்ப்புகளில் என்னை முக்கியமாகக் கவர்ந்தது அவர் மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுக்கும் இந்திய எழுத்தாளர்கள், அநேகமாகப் பெண் எழுத்தாளர்கள். ஆஷா பூர்ணாதேவி, அம்ரிதா ப்ரீதம், கிருஷ்ணா சோப்டி, மகாஸ்வேதா தேவி, இஸ்மத் சுக்தாய் போன்றோரைப் படிக்காமல் வேறு நாட்டினரைப் படித்து என்ன செய்யப் போகிறோம்? ஆனால் இப்போதைய சூழலில் 1500ஆம் ஆண்டில் வாழ்ந்த Morroccan writerஐ மொழிபெயர்க்கும் ஆவலைக் கட்டுப்படுத்துதல் பதின்வயது தாபத்தை அடக்குவதை விட பெரிய விஷயம்.

நவீன ஹிந்தி இலக்கியம் என்ற Seriesல் ஐந்து வெவ்வேறு ஆசிரியரின் கதைகள் உள்ளன. நான்கு கதைகளை அனுராதா மொழிபெயர்த்திருக்கிறார்.

ராஜேந்த்ர யாதவ்வின் சிறுகதை ஆண்பெண் உறவுச்சிக்கலை இரண்டு Cornerகளில் இருந்தும் பார்க்கிறது. மௌனத்தைப் போல் உறவைக் கொல்லும் வியாதி வேறொன்றில்லை, அதுவும் இருவரின் மௌனம். தேவ், ராகா ராகா என்று கத்தி எதிரொலியைக் கேட்பது
கடைசியில் யோசித்தால் எவ்வளவு பாரத்தை மனதில் ஏற்றுகிறது!

நிர்மல் வர்மாவின் கதையில் நோய்வாய்ப்பட்ட சிறுவனின் பார்வையில் அவனது அம்மாவின் மணவினை தாண்டிய உறவு சொல்லப்படுகிறது. சிறுவனின் அறியாமையே நமக்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும் கதை.

பிரஜேஸ்வர் மதனின் கதை Stream of Consciousness யுத்தியில் ஒரு குடும்பத்தின் கதையைச் சொல்கிறது.

ஸர்கம் கோலா உண்மையான ரசிகன் கலைஞனிடமிருந்து விலகி இருப்பதும், ரசனை இல்லாதோர் பணத்தால் நெருங்கும் தகுதியைப் பெறுவதையும் சொல்கிறது. சாதாரண கதை.

எல்லா சிறுகதைகளுமே மூலமே தமிழில் எழுதியது போல் வாசிப்பதற்கு இலகுவாக இருக்கின்றன. Complex sentence என்பதையே அனுராதாவின் மொழிபெயர்ப்பில் பார்க்க முடியாது. முதல் இரண்டு கதைகளை எழுதியவர்களைத் தேடிப்படிக்க வேண்டும். ஞானபீட பரிசு பெற்ற நிர்மல் வர்மாவின் கதை எவ்வளவு நேர்த்தியாக சொல்லப் பட்டிருக்கிறது! ஒரு நல்ல கதை அந்த ஆசிரியரை முழுதும் படித்துவிட வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிடுகிறது.

இவர்கள் இல்லையேல் – வாழ்க்கைக் குறிப்பு- டோக்ரி மூலம் பத்மா ஸச்தேவ்- தமிழில் அனுராதா கிருஷ்ணசாமி:

பத்மா ஸச்தேவ் முதல்முறையாகத் தமிழுக்கு அனுராதாவின் மூலம் வருகிறார் என்று நினைக்கிறேன். அடிப்படையில் இவர் கவிஞர். இந்த நூல், தன் குடும்பத்தில் உழைத்த பலரைப் பற்றிய கோட்டுச் சித்திரங்களின் தொகுப்பு. சம்சாரம் அது மின்சாரம் மனோரமா போல வேலைக்காரர்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போல், உடனிருந்து, குடும்ப விவகாரங்களில் தலையிட்டு ஆலோசனை சொல்லி, அதை வீட்டாரும் பொருட்படுத்திய காலம் ஒன்று இருந்தது. அன்றைய இந்திய சமூகத்தின் வாழ்க்கை, நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றை பிரதிபலிப்பதனால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

எந்த வழியும் இல்லாத, யாரும் மணமுடிக்க விரும்பாத, மணவயதைக் கடந்த ஒருவன், மலைஜாதிப் பெண்ணுடன் வாழ்ந்தும், தான் பிராமணன் என்ற ஒரே கர்வத்தில் அவளை மணமுடிக்க மறுக்கிறான்.

இரண்டாவதாக மணம் செய்து, பலகாலம் சேர்ந்து வாழ்ந்து குழந்தையும் பெற்றுக் கொண்ட பெண்ணுக்கு, கணவன் இறந்தபோது பிணத்தைப் பார்க்க அனுமதி மறுக்கப்படுகிறது.

பிறந்தது பெண் குழந்தையாகி விட்டதால், புதிதாகத் துணி வாங்கவேண்டியதில்லை, பழைய துணியில் தைத்துப் போட்டால் போதும் என்கிறாள் பாட்டி.

பகலில் மனைவியின் முகத்தைப் பார்ப்பது பேசுவது என்பது வெட்கக்கேடான விஷயம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. (2018ல் நான் பார்த்த ஒரு நடுத்தரவயது கன்னட பிராமணத் தம்பதியர் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை. பின் மற்றவர் இருக்கும் போது அவர் என்னிடம் பேச மாட்டார் என்று அந்தப்பெண் சொன்னார்)

படிப்பறிவு அதிகமில்லாத, கடுமையான உடலுழைப்பு செய்து பொருளாதார சுதந்திரம் அடைந்த பெண்கள் கணவனிடம் அடி உதையைப் பெற்றுக் கொண்டு கூடவே ஏன் இருக்கிறார்கள்? விட்டுப்பிரிந்த பின்னும் மீண்டும் ஏன் போய்ச் சேருகிறார்கள் என்பது எனக்கு இன்றுமே விடைதெரியாத கேள்வி.

https://solvanam.com/series/%e0%ae%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d/

2021ல் பத்மா சச்தேவின் மரணச்செய்தி பற்றிப் படித்துப்பின் அவர் குறித்த விவரங்களைத் தேடி இருக்கிறார் அனுராதா. அந்தத் தேடலின் முடிவு இந்த நூலின் தமிழாக்கம். ஜம்முவில் பலரால் பேசப்படும் டோக்ரி மொழியில் எழுதியவர். பத்மா போல் எத்தனையோ எழுத்தாளர்களை நாம் தவற விட்டிருப்போம். அம்ரிதா பிரீதம் போலவே All India Radioவில் சிலகாலம் வேலை பார்த்தவர். அம்ரிதா, பத்மா போன்ற சுதந்திரத்திற்கு முன் பிறந்த பெண்கள் தங்கள் வாழ்க்கையின் மூலம் இன்றைய பெண்களுக்கு முக்கியமான செய்தியை விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

அனுராதாவின் மொழிபெயர்ப்பு வெகு சரளமாக, தங்கு தடையின்றிப் போகிறது. இந்தியில் அவருக்கு இருக்கும் பாண்டித்யம் மட்டுமில்லாது, அவர் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை டில்லி, மும்பை போன்ற நகரங்களில் கழித்ததும் இவருக்கு மொழிபெயர்ப்புக்குப் பெரிதும் உதவியிருக்கக்கூடும். அனுராதாவைப் போன்ற இந்தியாவின் பிற மாநிலங்களில் வசிக்கும் பலரும் தயக்கங்களைத் துறந்து மொழிபெயர்ப்புகளைச் செய்ய முன்வர வேண்டும். தமிழ்சூழலில் ஏற்கனவே பிரபலமானவர்களைத் தான் இந்திரன் சந்திரன் என்பார்கள். எனவே இந்தப் பணி நம் ஆத்ம திருப்திக்காக மட்டும். முகநூலில், வெளியில் எந்த எதிர்வினைகளும் இல்லையே என்று சோர்வதில் பயனில்லை. நாம் விதையிட்டு வளர்த்த செடியில் பூ பூக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு நிகரானது இது. வேறென்ன வேண்டும்?

Leave a comment