ஆசிரியர் குறிப்பு:
இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளரும், ஊடகவியலாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இலங்கை, இந்தியா,கனடா முதலிய நாடுகளில் இருந்து விருதுகளை வாங்கியுள்ள இவர், சிங்களத்தில் இருந்து பல குறிப்பிடத்தக்க படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இவருடைய முதல் குறுநாவல் இது.
மிகச்சிறிய குறுநாவல் இது, நெடுங்கதை என்றே சொல்ல வேண்டும். கிராமத்தில் எல்லோருக்குமே இயற்கையாக மரணம் நேராது, துர்மரணம் நேரும் ஊரில் அடுத்தடுத்து மரணங்கள் நேரும் Dystopian story. இந்தக் கதையில் கதைசொல்லியின் பெயரோ, பாலினமோ கடைசிவரை குறிப்பிடப்படவில்லை. இந்தக் கதைக்கு அது தேவையுமில்லை.
சின்னக்கா- அம்மா இருவரது உறவு பல தாய் மகள்களது உறவின் பிரதிபலிப்பு. வெளியில் இருந்து பார்த்தால் வெறுப்பு மண்டியது போல் தோன்றுமுறவில் அன்பின் வேர்கள் யாராலும் அசைக்க இயலாது ஆழப் பதிந்திருக்கும். ஒரு இழப்பு ஊருக்கு வெறும் செய்தி, ஆனால் அந்தக் குடும்பம் மொத்தமும் யாரோ அவசரமாய் கலைத்துப் போட்ட கொலுபொம்மைகளாய் மாறிப் போகிறது.
அம்மாவும், பெரியக்காவும் ஒரே அச்சின் இரண்டு வார்ப்புகள். வைராக்கியம் பொதுவானது, எப்படி எதிர்வினை செய்வது என்பதில் தான் வித்தியாசம். அப்பாவின் குடி ஒரு Escapism. யாருக்கும் உதவாத செயல். அம்மா குடும்பத்தைச் சேராத யார் வீட்டுக்கு வந்தாலும் விரட்டியடிப்பதில் ஒரு செய்தி இருக்கிறது. சபிக்கப்பட்ட கிராமத்தின், சபிக்கப்பட்ட வீட்டுக்குள் வராதீர்கள்.
ஏற்கனவே சிறுகதைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டிருப்பவர் ரிஷான். அதனால் தடங்கலில்லாத வகையில் கதை சொல்லல், நல்ல மொழிநடை இரண்டும் இயல்பாகவே இந்தக் குறுநாவலுக்கு வந்திருக்கிறது. காடு நாவலின் முக்கியமான கதாபாத்திரம். காடு பெருவெளி. வேட்டைக்காரனைப் பலிவாங்குகிறது, கதைசொல்லிக்கு இருப்பிடத்தை அளிக்கிறது. வெள்ளச்சி அக்கா போல துணைக் கதாபாத்திரங்களும் சீராகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. ரிஷான் நாவல் எழுதும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்று தோன்றுகிறது.
பிரதிக்கு:
கஸல் பதிப்பகம் இலங்கை 770807787
முதல்பதிப்பு ஜனவரி 2022
விலை ரூ. 45.