நீர்க்கோழி – காளிபிரசாத்:
நெருங்கிய நண்பர்களுக்கு இடையே ஒரு பெண் வருவது எல்லாக் காலங்களிலும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அதே கதையை புதுமையாகச் சொல்லி இருக்கிறார் காளிபிரசாத். சட்டென்று காட்சிகள் மாறிச் செல்லும் கதையில் முஸ்லீமைக் காதலித்தால் முஸ்லீமாக மாற வேண்டும் என்ற கட்டாயம் போல் பல விஷயங்களைக் கொண்டு வந்திருக்கிறார்.
மெஹரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
உவர்ப்பு – வங்காளத்தில் திலோத்தமா மஜூம்தார் – தமிழில் அருந்தமிழ் யாழினி:
மிக எளிமையான கதை. இந்தியாவில் இன்னும் பல பெண்கள் திருமணம் என்ற பெயரில் பெற்றோரின் பணத்தின் பெரும்பகுதியைச் செலவழித்து இன்னொரு வீட்டுக்கு வேலைக்காரியாகப் போகிறார்கள்.
உறவுகள் தரும் அழுத்தத்தில் சோர்ந்து விடுகிறார்கள். தனித்திறமைகளுக்கு அர்த்தமே இல்லாமல் போகின்றன. மணமுடித்த ஆண்கள் சிறிய இடைவெளிக்குப் பின் பழைய வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். திருத்தமான மொழிபெயர்ப்பு.
குறுங்கதைகள் – ந.பெரியசாமி:
நான்கில் எதுவுமே குறுங்கதைகள் இல்லை. ஆனால் முதலாவதும், நான்காவதும் நன்றாக வந்திருக்கின்றன. அந்தக் கதைகளில் இருக்கும் Fantasy elements நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. பெரியசாமி தொடர்ந்து எழுத வேண்டும்.
குற்றம் – ஹேமிகிருஷ்:
ஹேமிகிருஷ் அவரது ஆரம்பக் கதைகளில் இருந்து நிறைய தூரம் வந்து விட்டார். ஒரு சாதாரண நிகழ்வு அல்லது momentary mistake இரு சிறுமிகளுக்கு பெரியபாரத்தை சுமக்க வைக்கிறது. குழந்தை காணாமல் போவதில் இருந்துகுற்றஉணர்வு எப்படி தொடர்ந்து விரட்டும் என்பது வரை வெகு இயல்பாகக் கதை செல்கிறது. கடைசியில் பெரியகோடு பக்கத்தில் இவர்கள் செய்தது சின்ன புள்ளியாகிப் போகிறது. பாராட்டுகள் ஹேமிகிருஷ்.
வீட்டுத்தலைவர் – பியற்றிஸ் லம்வாகா- தமிழில்ரிஷான் ஷெரீப்:
இதே எழுத்தாளரின் சிறுகதைகளை ரிஷான் அரிச்சுவடியில் காணப்படாத எழுத்து என்ற தலைப்பில் மொழிபெயர்த்து நூலாக வந்துள்ளது. உகாண்டாவின் உள்நாட்டுக் கலவரத்துடன் தேவைக்கு உபயோகித்துப் பின் மறக்கும் மனிதசுபாவத்தையும் சேர்த்து இந்தக்கதையை எழுதியிருக்கிறார். நல்ல மொழிபெயர்ப்பு.
மதகு – வளவன்:
மேலிருக்கும் கூரை எப்போது வேண்டுமானாலும் தலையில் விழும் அதுவரை அனுபவிப்பது எல்லாமே லாபக்கணக்கில் சேரும். ஒரே ஊர் நேபாளிக்கு சொந்த ஊராவதும், சென்னையில் இருந்து வந்தவனுக்கு அந்நியமாவதையும் புரிந்து கொள்ள முடிகிறது. நேர்க்கோட்டில் எளிமையாகத் தொடங்கி, முடியும் கதை.
பிரதிக்கு:
தனி இதழ் ரூ.50
சந்தாவிற்கு 99628 14443