ஆசிரியர் குறிப்பு:

திருநெல்வேலியில் வசிப்பவர். முதுகலை வேதியியல் பயின்றவர். பள்ளி, கல்லூரி காலங்களில் கவிதைகள் எழுதியவர். திருநெல்வேலியில் பல இலக்கிய அமைப்புகளில் பங்காற்றும், காணிநிலம் என்ற இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இருக்கும் இவரது, முதல் சிறுகதைத் தொகுப்பு இது.

தாணப்பன் தொடர்வாசிப்பில் இருப்பவர். புத்தகங்களைத் தேடித்தேடிப் படிப்பவர். இலக்கியத்தை விட்டு விலகக்கூடாது என்று ஏதேனும் ஒன்றில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர். நீண்ட காத்திருப்பின் பின்னர் ஐம்பதாவது வயதில் முதல் படைப்பை வெளியிடுகிறார்.

என் நாட்குறிப்பிலிருந்து கதையில் ஒரு Nostalgia அழுத்தமாகப் பதிவாகி இருக்கிறது.
வாழ்க்கைச் சிதறலாக பல கதாபாத்திரங்கள், சம்பவங்கள் வருகின்றன. சாமியாடி அம்மா சாபம் கொடுத்து விடுவாள் என்று ஒரு காதல் கொல்லப்படுகிறது. அடுத்தவருக்கு துரும்பைக்கூட எடுத்துப் போடாத அக்ரஹாரம், ஆண் பெண்ணாக மாறினால் தெருவிற்குள் சேர்க்க மாட்டேன் என்கிறது.
பேரிடர் காலத்தில் வேலையை விட்டு நிறுத்துகிறார்கள், வாங்கிய கடன் மருத்துவத்திற்குச் சரியாகப் போகிறது. தெருவில் போன மாட்டை நகராட்சி பிடித்துக் கோயிலில் விடுகிறது, பட்டர் மாட்டைத் திரும்பக் கொண்டு போனால் பாவம் என்கிறார். உடல்உறவு கொள்ள முடியாத இருவர் மனமொத்த தம்பதியாக வாழ்கின்றனர். குக்கர்ஆவி அடித்து கையில் புண்ணாவதும் கதையாகி இருக்கிறது. பார்த்தது, கேட்டது தாண்டி புதிதாக எதையுமே முயவில்லை தாணப்பன், இந்தக் கதைகளின் ப்ளஸ் அது தான்.

பார்த்தது, கேட்டதை எழுதினால் கதையாகி விடுமா என்ற கேள்வி கேட்கப்பட்டால் பெரிய இல்லை என்பதே பதிலாக இருக்கும். செம்புலப்பெயல் நீர் கதையை எடுத்துக் கொள்வோம். குழந்தை இப்போது வேண்டுமா, வேண்டாமா என்பதை பெண் முடிவுசெய்யக் கூடாதா? அது போகட்டும். சௌம்யா வேண்டாம், இன்று பதிமூன்றாம் நாள் என்று தடுக்க, சதீஷ் வற்புறுத்தி உறவு கொண்டால் அங்கே ஒரு காரணம் உருவாகுகிறது. எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் உறவுகொள்வோம் ஆனால் குழந்தை இப்போது வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு சௌம்யா விவரமில்லாதவளா? வள்ளியைப் பார்த்து உடன் மனம்திருந்துவது எல்லாம் நாற்பத்தைந்து வருடம் முன்பே, மன்மதலீலை கிளைமாக்ஸில் வந்துவிடவில்லையா? ஒவ்வொரு கதையாகச் சொல்ல நான் விரும்பவில்லை.
கதைகளில் ஏதேனும் அழுத்தம் அல்லது ஆழம் இல்லை திருப்பத்தைச் சேர்க்க வேண்டியது அவசியம்.

கயத்தார் கதை சாதாரணமாக எல்லோர் வீட்டிலும் நடக்கும் கதை. அதில் வண்ணநிலவன், அண்ணன் தங்கையிடம் எப்படிச் சொல்லப் போகிறான் என்ற வாசக எதிர்பார்ப்பை உருவாக்கி அவன் ஒன்றுமே சொல்லாமல் திரும்புவதே திருப்பம். அதில் ஒரு மிகப்பெரிய உளவியல் கலந்திருக்கிறது. வண்ணதாசனின் சமீபத்திய கதை ஊசித்தட்டான்களும் ஆறாவது விரலும் பிரேமாவின் அகத்தத்தளிப்பை சிந்தாதது சிதறாது வாசகருக்குக் கடத்துகிறது. சுருக்கமாகச் சொன்னால், கதைகள் ஒரு பழைய அனுபவத்தை அசைபோட வைக்க வேண்டும், இல்லை புதிய அனுபவத்தில் நம்மைப் புகுத்திவிட்டு கண்காணாமல் ஒளிந்துகொள்ள வேண்டும். தாணப்பன் அடுத்து வரும் தொகுப்புகளில் அதை முயற்சிக்கட்டும்.

பிரதிக்கு:

சந்தியா பதிப்பகம் 044- 24896979
முதல்பதிப்பு 2022
விலை ரூ.120.

Leave a comment