உயிர்தரிப்பு – ப.தெய்வீகன் :
ஆஸ்திரேலியாவிற்குக் கள்ளத்தனமாய் வந்த இலங்கை அகதியின் கதை. குடியுரிமை பெறுவதற்கான எத்தனையோ யுத்திகளில் இதுவும் ஒன்று. ஆஸ்திரேலியாவின் வித்தியாசமான சட்டங்களில் ஒன்று Banning Home slaughtering.
ஆனால் கண்முன்னே ஆடு சாவதைத் தாங்க முடியாத அளவிற்கு ஒரு போர் போராளியை மாற்றி வைத்திருக்கிறது என்பது கதையில் நுணுக்கமாக வந்திருக்கிறது.
மிஸ் பிரில் – கேத்தரீன் மேன்ஸ்ஃபீல்ட் – தமிழில் கயல்:
கம்பளி அங்கியுடன் பேசும் பெண் பைத்தியமோ என்று தோன்றியது. பின்னர் தான் அவளுக்கு பேச யாருமில்லை என்பது புரிந்தது. முதுமையும் தனிமையும் இருபெரு நோய்கள். கம்பளியும் அவளும் ஒன்று தான். எப்போதும் பெட்டிக்குள் இருக்க வேண்டியது தான். கயலின் மொழிபெயர்ப்பு இயல்பாக வந்துள்ளது.
தறு- அம்ருதா ஏயெம்- An Occurrence at Owl Creek Bridge என்ற ஆங்கிலக்கதையை லதா அருணாச்சலம் மொழிபெயர்த்திருந்தார். இதில் முடிவு மட்டுமே ஒன்று, மற்றபடி மிக வித்தியாசமான கதை. இவருடைய மற்ற கதைகளை வாசிக்க வேண்டும்.
மூபின் சாதிகா – குறுங்கதைகள்:
ஐந்து குறுங்கதைகள். பெரும்பாலான கதைகளில் பாண்டஸி வருகிறது. பல கதைகள் வாய்மொழியில் சொல்லப்படும் தொனியைக் கொண்டிருக்கின்றன. இந்தியர்களுக்கான கதைகள் இவை. வெளிநாட்டினர் புரிந்து கொள்ளுதல் கடினம். எல்லாக் கதைகளிலும் கடைசி வரியில் ஒரு வித்தியாசமான நிகழ்வு நடைபெறுகிறது. கண்கள் சொல்லும் பொய் போல நிஜவாழ்வில் அமைந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்!
செவனேன்னு இருக்கும் சிவன் – காளீஸ்வரன்:
கிராமத்தின் சின்ன பஞ்சாயத்தை முழுநீள நகைச்சுவையாக்கி இருக்கிறார் காளீஸ்வரன். யார் பிடி யாரிடம் என்று தெரியாமல் கடைசிவரை நழுவிப் போகிறது. கடைசியில் மாரன் சொல்லும் யோசனை தான் கதையின் உச்சகட்ட நகைச்சுவை.
செந்நிற வெள்ளம் – கலைச்செல்வி:
இது போன்ற இமயமலையை ஒட்டிய கதைகளை எழுதும் பொழுது கலைச்செல்வி at her best. அந்த இடத்தின் மேலுள்ள பிடிப்பு இவரது வார்த்தைகளில் பனியைத்தூவி நிலப்பரப்பை மூடுகின்றது. மலைகளுடன் பேசும் பெண். மலை உயரத்தில் இருப்பதால் பாதுகாப்பானதும் கூட இல்லையா? சோனுக்காக பேருந்தின் ஜன்னலுக்குள் நுழையும் மலை. தனிமையும், விட்டேத்தியான உணர்வையும் தெளிவாகப் பதிந்து விட்டுப்பின் சோகம் பின்னால் சொல்லப்படுகிறது. வாழ்த்துகள்.
ஹோட்டலின் அலங்கார விறாந்தை- தாட்சாயணி:
தாட்சாயணியின் ஆரம்ப எழுத்துகளை பார்க்கையில் அவரிடம் எவ்வளவு நேர்த்தி கூடியிருக்கிறது என்று ஆச்சரியமும், மகிழ்ச்சியும் ஒருங்கே ஏற்படுகின்றன. சிறுகதையில் இரண்டு இனங்களின் போர் நாட்டில் பொருளாதாரத்தைச் சீர்குலைத்தது, தொடர் இடப்பெயர்வுகள், இருந்தவருக்கும் வெளியே போனவருக்கும் இடையே பொருளாதார இடைவெளிகள், பழமையை மறத்தல் என்று பல விஷயங்கள் வந்தாலும் எல்லாவற்றையும் பின்தள்ளி முன்வந்து நிற்பது nostalgia. கற்பூர வாசனை நாசியில். தொடர்ந்து எழுதுங்கள். அடுத்த தொகுப்புக்குக் காத்திருப்பேன்.
பார்வை – சுஷில் குமார்;
குழந்தைகளைக் கண்டிப்பாக வளர்த்தால் தான் அவர்கள் உருப்படுவார்கள் என்று அடித்து உதைத்து வளர்த்தவர்களை பிள்ளைகள் பெரியவர்கள் ஆனதும் பெரும்பாலும் மன்னித்து விடுகிறார்கள். ஆனால் யாரிடமாவது நம் அன்பைக் காட்டித்தான் ஆக வேண்டியதிருக்கிறது. மனிதர்களை நம்பாதவர்களுக்கு விலங்குகள் துணை. அம்மா-மகள் உறவிற்குப் பல பரிமாணங்கள் இருப்பது போல் அப்பா-மகன் உறவுக்கும் உண்டு. சுஷிலிடம் இருந்து மீண்டும் நல்லதொரு கதை.
பிதிர்க்கடன் – ஜிஃப்ரி ஹாசன்:
இந்தக் கதை இலங்கையின் கிராமம் ஒன்றிற்கு நம்மையும் சிறுவராக்கிக் கூட்டிச் செல்கிறது. சைக்கிள் கம்பி விளையாட்டு எது? தமிழ்நாட்டில் இல்லைதானே! சிறுவர் உலகத்துடன், இஸ்லாமிய நம்பிக்கைகளும் அழகாக இணைகிறது. ஒரு சிறுகதையில் நாமறியாத ஒரு உலகத்தைப் பரிட்சயமாக்குவது கடினம். அதிகம் வாசிப்பவர்களுக்கு அது எளிதாக சாத்தியமாகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள், இறைநம்பிக்கையின் வித்தியாசங்கள், இஸ்லாமியக் குடும்பத்தின் பழக்கவழக்கங்கள் எல்லாம் வருகின்றது. அப்பாவிற்கு எதனால் என்று கண்டிப்பாகத் தெரிந்திருக்கும், இருந்தாலும் ஒருவேளை………… என்பது தான் கதையின் அழகியல். வாழ்த்துகள் ஜிஃப்ரிஹாசன்.
கடல் கனித்தது – லோகேஷ் ரகுராமன்:
சீதாவின் தாகம் தீர்க்க பல்லாயிரம் ஆண்டுகள் முன்பு ராமன் உண்டாக்கிய ஊற்று கொள்ளுத் தாத்தாவின் தாகத்தைத் தணிக்கிறது. மிகுந்த வயதானவர்கள் குழந்தைகளாவது இயல்பு. மகள் அப்பாவின் குணக்கேட்டை ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை சொல்லிக் கொண்டே இருக்கிறாள் ஆனால் கடைசியில் கொள்ளுத் தாத்தா உருவாக்கிய மணற்குன்று தான் முன்னால் வந்து நிற்கிறது. கொள்ளுத் தாத்தாவின் மனதில் என்ன ஓடியிருக்கும்? Beautiful story.