பார்த்திருத்தல் – வண்ணதாசன்:

அறுபது வருடங்களுக்கு மேலாக எழுதிக் கொண்டிருக்கிறாரா வண்ணதாசன்! எழுத எழுத காப்பி டிக்காஷன் மூன்றாவது, நான்காவது என்றாவது போலத் தொடர்ந்து எழுதினால் ஆவதென்பது இவருக்கு நேரவேயில்லை. அதே நுணுக்கம். இந்தக் கதைக்குள் புகுந்து வேடிக்கை பார்ப்பவனாக அந்த மூவர் முகத்தை ஒருதடவை பார்க்கும் ஆசை எழுகிறது. கதை என்று எதுவுமில்லை, ஆனால் இது நல்ல கதை.
எனக்கும் மற்ற வாழைப்பழங்களை விட நாட்டுப்பழமும், சிறுமலைப்பழமும் பிடிக்கும்.

ஏது எதங்கு – பெருமாள் முருகன்:

சர்ரியல் Set up குழந்தை. ஆனால் கதை நேர்க்கோட்டில் நகர்கிறது. உன்னோடு வாழாத வாழ்வென்ன பாட்டில் அவரவர் வேலைலைப் பார்ப்பது போல் குழந்தையைச் சுற்றி எல்லாம் சாதாரணமாக நடக்கிறது. குழந்தைக்கு எதற்கு நீள்குறி? பால் குடிப்பதான பாவனைக்கும், ஆழ்ந்த உறக்கத்திற்கும் இடையில் ஏதேனும் இருக்கிறதா? ஏது எதங்கு என்றால் மழலை, எனில் உண்மையில் குழந்தை தானா? நான் தான் தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக யோசிக்கின்றேனா?

பரிபூரணி -. கிருத்திகா:

பிரியத்தைக் கொட்டும் பெண்கள் எல்லோருமே பரிபூரணி தான். தாய்மை தான் பெண்மையை நிறைவாக்குகிறது என்பதெல்லாம் முட்டாள்தனம். கிருத்திகாவிற்குக் கதைகள் எழுதுவது என்பது நாம் காலைநேர நடைப்பயிற்சி செய்வது போல Effortlessஆக வருகிறது. அந்தக் கனவில் இருந்து கதை முழுக்க மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்தைக் கோடிட்டுக் காட்டுகிறார், ஆனால் கடைசி வரை ஒரு வார்த்தை சொல்வதில்லை. பெண் பிள்ளைகளுக்கும் சித்திகளுக்கும் அம்மாவைத் தாண்டிய நட்பு ஒன்று உண்டு. அழகான கதை. பூ பூப்பதைப் பார்ப்பது போல் கண் முன் விரிகிறது கதை.

குறி – எம்.எம்.தீன்:

திருநங்கை என்றால் கூடுதல் Exploitation. பணம், உடல், உழைப்பு எல்லா சுரண்டலையும் நிகழ்த்திவிட்டு கவனிக்காது போய் விடுவார்கள். அந்த வகையில் பெண்ணுக்கு இருக்கும் பாதுகாப்பு கூட இவர்களுக்கில்லை. ஆனால் பெண்ணின் மனம் மட்டும் அப்படியே இருப்பதை இந்தக் கதையில் கொண்டுவந்திருக்கிறார் தீன்.

முகமூடி வீரர் மாயாவி தோன்றும் இன்பவேட்கை – சித்ரன்:

காமம் என்றால் என்ன என்று முழுதும் தெரியாத வயதில் அந்தத் தேடலில் ஈடுபடாதவர்கள் யார்? ஆனால் அதனுடன் கிரிக்கெட், காமிக்ஸ் எல்லாம் கலந்து வந்தேபாரத் வேகத்தில் ஒடும் கதை. ஒன்றும் சரிவரவில்லை என்று யாரேனும் கைலிக்குத் தீ வைத்துக் கொண்டால் சித்ரன் தான் பொறுப்பு.

எப்பவும் போலத் தான் – காலத்துகள்:

ஒரு நாளில் ஆபிஸ் தொடங்கு முன் ஆரம்பித்து, முடிந்து வீடு சேர்ந்ததும் முடியும் கதை. அதற்குள் பல வேஷங்கள், ஏமாற்றுதல், Gossipகள். ஒரு நாள் கழிந்தது, எப்பவும் போல. ஆனால் எல்லோருக்கும் எப்பவும் போல வாழ்க்கை அமைவதில்லை.

இந்த நகரத்தில் திருடர்கள் இல்லை – கேப்ரியல் கார்சியா மார்க்கேஸ் – தமிழில் கா.சரவணன் :

பில்லியர்ட்ஸ்ஸில் ஒரு பந்தை அடித்தால் மற்றபந்துகள் உருள்வது போல ஒரு திருட்டில் இருந்து தொடரும் நிகழ்வுகள் வரிசையாக மற்றவர்களைப் பாதிக்கின்றன.
முதலில் வதந்தியாவது பின்னால் Racism ஆக மாறுகிறது. பின்னர் Guilty conscious விழித்துக் கொள்கிறது. கதையின் கடைசியில் பணத்தைத் திருடியது யார் என்பது தெரிய வருகிறது. பெரியபூனை எல்லாவற்றிற்கும் மௌனசாட்சி. மொழிபெயர்ப்பு சரளமாக உள்ளது.

ஓடுங்கள் அப்பா – கிம் அரோன் – தமிழில் ச.வின்சென்ட்:

கதைசொல்லி கருவாய் அம்மாவின் வயிற்றில் இருந்ததில் இருந்து வளர்ந்த பெண் ஆகும்வரையான கதையைச் சொல்கிறாள். கதையில் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க அப்பா ஓடுகிறார். இரண்டு வயிற்றுகளுக்காக அம்மா ஓடுகிறாள். அம்மாவிடம் உண்மையை மறுத்து கற்பனையான உருவத்தை அப்பாவிற்குக் கொடுக்க மகள் முனைகிறாள். இந்தைதக் குடும்பத்தில் எல்லாமே வித்தியாசமாக நடக்கிறது. அப்பாவின் அமெரிக்க அனுபவம், Incest தாத்தா என்று பொதுத்தன்மையை விட்டு விலகிய அனுபவங்கள். நல்ல மொழிபெயர்ப்பு.

கருப்பு மழை – பி.அஜய் ப்ரசாத் – தமிழில் க.மாரியப்பன்:

இது ஒரு நாவலாக விரித்து எழுதியிருக்க வேண்டியது. நன்கு Effective ஆக வந்திருக்கும். ருஷ்ய நாவல்களை தெலுங்கில் அதிகம்பேர் படித்திருக்க மாட்டார்கள் போலிருக்கிறது. இங்கே வாசிப்பவர்களில் எண்பது சதவீதமேனும் வாசித்திருப்பார்கள். கம்யூனிஸ்டுகள் குறித்த விமர்சனமாகவும் இந்தக் கதையை எடுத்துக் கொள்ள முடியாது. அவியலில் வீட்டில் இருந்த காயையெல்லாம் சேர்த்துக் கிண்டிய உணர்வு. ‘கிட்டத்தட்ட பெங்களூரு’ போன்ற வெகுசில இடங்களைத் தவிர மொழிபெயர்ப்பு நன்றாக வந்துள்ளது.

குழந்தைகள் இருவரின் கதைகள் புன்னகையை வரவழைத்தன. அறியாமை எவ்வளவு பெரிய வரம்.

பன்னிரண்டாவது படிக்கும் கிஷ்வரை இப்போதிருந்தே தீவிரவாசிப்புக்குக் கொண்டு செல்லுங்கள். நல்ல எழுத்தாளராக வருவதற்குண்டான அறிகுறிகள் எல்லாமே அவரிடம் இருக்கிறது.

சிறுகதைகள் மட்டும் கொண்ட இணைய இதழை வாசிப்பது என்பது தான் எவ்வளவு ஆனந்தமானதொரு விஷயம்.

Leave a comment