ஆசிரியர் குறிப்பு:

நாகர்கோயில், ஒழுகினசேரியில் பிறந்தவர். பெங்களூரில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிகிறார். பட்டர்-பி என்ற முதலாவது சிறுகதைத் தொகுப்பிற்குப் பின் வரும் இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது.

தெரிந்தோ அல்லது யதேச்சையாகவோ ஆன்மீகம் சம்பந்தப்பட்ட கதைகள் நிறையவே இருக்கின்றன இந்தத் தொகுப்பில். அனுமாரே இரண்டு கதைகளில் வருகிறார். இயேசு சில கதைகளில். நம் பாவத்தையெல்லாம் கடவுள் சுமப்பார், எனவே பயப்படாமல் பாவம் செய் என்று ஜான் இன்ஸ்பெக்டர் சொல்வதையும் உண்மையில் யோசித்துப் பார்க்கலாம். ‘இறைவன்’ கதையைத் தனியாகக் குறிப்பிட்டே ஆக வேண்டும். Conscious கடைசி நேரத்தில் வேலை செய்வது மட்டுமன்றி, ஆன்மிகவாதிகளும், நாத்திகவாதிகளும் அவரவர் கோணத்தில் அணுக வாய்ப்பிருக்கும் கதையது.

பல்வேறு யுத்திகளில் சொல்லப்பட்ட கதைகள். குறிப்பாக ‘சூலி’ மற்றும் ‘ தேர்ப்பாடை’ ஆகியவை சற்று கவனக்குறைவாக இருந்தால் வெறும் சென்டிமென்டல் கதைகளாக முடிந்திருக்கும். சூலியில் வரும் superstition, தேர்ப்பாடையில் உறவுகளின் வண்ணம் மாறுவது கதைகளை ரசிக்க வைக்கின்றன. அந்திமந்தாரை கடிதம் மூலம் கதைசொல்லல். கடைசிக் கதையான விளிம்பு அமானுஷ்யத்தை நம்பிக்கையின் தேரில் ஏற்றுவது.

அநேகமான கதைகளில் மையக்கதாபாத்திரம் ஆண், பெரும்பாலும் வாலிபர்கள். அத்தம், சுருளிடைப் பொழி மருது போன்ற கதைகளின் மையக்கதாபாத்திரங்கள் விதியின் கையில் வாழ்க்கையைக் கொடுத்து விட்டு வேடிக்கை பார்ப்பவர்கள். நடையொரு கதையில் வருபவனும் வித்தியாசமானவன் தான். ஆரம்பக் கதையில் இருந்து கடைசிக்கதை வரை ஒரு பரபரப்பு, அலைபாய்தல் என்பது எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் இருக்கிறது. முதல் குழந்தையை எதிர்பார்ப்பவன் கூட அவனே உருவாக்கிக் கொண்ட nightmareல் மூழ்கித் தவிக்கிறான்.

வைரவன் பல கதைகளில் இயல்பான நாஞ்சில் வட்டார வழக்கை உபயோகித்திருக்கிறார். முதல் தொகுப்பின் மூலம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர்.
பன்னிரண்டு கதைகள் கொண்ட தொகுப்பில் கதைக்கருக்கள் வித்தியாசமாக இருப்பது போல் தரமும் வித்தியாசமாக இருக்கிறது. வைரவன் தன் கதைகளுக்கு இன்னும் அதிகம் நேரம் செலவழிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. உதாரணத்திற்கு ‘அவன்’ கதையின் இறுதிவரி அதிர்ச்சிமதிப்பைக் கூட ஏற்படுத்தாமல் மறக்கப்பட்டு விடுகிறது. அவள் பெண்ணாகவே இருந்தால் என்ன? இஞ்சினியரிங் முடித்துவரும் பெண்ணிடம் அதுவரை பாலின வேறுபாடு பற்றி யாரும் கவனிக்கவில்லையா! அதே போல் அத்தான் அரைக்கதைக்கு அவனது ஒருபாலினத் தேர்வை வியாக்கியானம் செய்வது. வைரவனால் Sharp ஆன கதைகளை எழுத முடியும், ஏற்கனவே எழுதியிருப்பவர். நல்ல கதைகளும் தொகுப்பில் இருக்கின்றன. Mixed reactionஐ ஏற்படுத்தும் சிறுகதைகள்.

பிரதிக்கு:

யாவரும் பதிப்பகம் 90424 61472
முதல்பதிப்பு டிசம்பர் 2022
விலை ரூ. 180.

Leave a comment