ஆசிரியர் குறிப்பு:

கன்னியாகுமரி மாவட்டம், ,வில்லுக்குறி பேரூராட்சி, கொல்லாஞ்சிவிளையில் வசிப்பவர். பல இதழ்களில் இவரது கதைகள் வெளியாகி இருக்கின்றன. இது இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு.

நாஞ்சில் மொழியுடன் தொடர்ந்து எழுத்தாளர் வருகை சமீபத்தில் நேர்ந்து கொண்டிருக்கிறது, இம்முறை ஒரு பெண்.
அமுதா ஆர்த்தியின் கதைக்களங்கள் வித்தியாசமானவை. ‘நெகிழிக்கனவு’ பேசும்படத்தை நினைவுறுத்திய போதிலும் எளிதாக அது சொல்லவந்த விஷயத்தை முனைப்புடன் சொல்வதால் மாறுபட்டு நிற்கிறது. அவளது உடைமரக்காடும் வெட்டுக் கத்தியும் கதையை யார் வேண்டுமானாலும் எழுதியிருக்கக் கூடும். ஆனால் அதில் வரும் பெண்ணின் உணர்ச்சிகளை இதே போல் கொண்டு வருவதென்பது ஒரு ஆணின் எல்லைக்கு அப்பாற்பட்டது.

ஆண்கள் அடிக்கடி சந்திக்கும் ‘ Not tonight’ ஐ அல்லது அடுத்தகட்டமான ‘ எப்பவும் இதே நினைப்பா?’ என்ற கேள்வியை பெண்களின் முன்னெடுப்பில் எதிர்கொள்ளும் போது ஏன் அதை அவமானமாகக் கருதுகிறார்கள்? பெரும்பான்மை பெண்கள் இதில் Proactiveஆக இருப்பதில்லை என்பது வேறு விஷயம். பழகியபின் வரதட்சணை கேட்டுத் தரமுடியாததால், அவர்கள் குடும்பத்தைப்பற்றிக் கேவலமாகப் பேசுபவனை இன்னும் நினைத்துக் கொண்டிருப்பது என்ன ரகம்! பெண்கள் மனதிற்கு பெருநெருக்கத்தையும் உடலுக்கு விலக்கத்தையும் எந்த வயதில் கற்றுக் கொள்கிறார்கள்?

காதலித்து மணந்த பெண்ணை இரவுநேரத்தில் அடிக்கடி வீட்டை விட்டு விரட்டுகிறான் ஒருவன். உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் விரட்ட வேண்டும் என்று அவளுக்கு மேலும் பீதியை உண்டு பண்ணுகிறான். இன்னொருவன் நாள் முழுதும் அவளைத் தனிமையிலேயே வைத்து பணம்சேர்க்க அலைகிறான். காதல் அரும்புவதற்கு முன்னே வலுக்கட்டாயமாக பிய்த்து எறியப்படுகிறது இரண்டு கதைகளில். சிறுமிகளும், பெண்களும் நிம்மதி இல்லாது திரிந்துகொண்டே இருக்கிறார்கள் இந்தக் கதைகளில்.

பதினான்கு கதைகள் கொண்ட தொகுப்பில் கதைகள், ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை. கொலுசுக்கனவு போன்ற கதைகளில் இருந்து, மனநிலை பாதிக்கப்பட்ட ஆண் முதல் கதையிலும், மனநிலை பாதிக்கப்பட்ட பெண் இன்னொரு கதையிலும் என்று கதைக்கருக்களின் பரப்பளவு விஸ்தாரமாக இருக்கிறது. நாஞ்சில் வட்டார வழக்கில் கதைகளில் தேங்காய் எண்ணெய் மணம் சேர்கிறது. அமுதா ஆர்த்தி செய்ய வேண்டியது வாக்கியங்களின் அமைப்பில் கூடுதல் கவனம். அநேகமான கதைகள் சிறுபத்திரிகைகளில் வந்தவை. தனித்தன்மையும், நல்ல எதிர்காலமும் கொண்ட எழுத்து. தொடர்ந்து எழுத வேண்டும்.

பிரதிக்கு :

எதிர் வெளியீடு 99425 11302
முதல்பதிப்பு ஜனவரி 2023
விலை ரூ. 200.

Leave a comment