தமிழில் சிறுகதைகள் மற்றும் நாவல்கள் என்ற இரண்டு வடிவங்களிலும் சிறந்த பங்களிப்பை அளித்தவர்கள் என்று பட்டியலிட்டால், விரல்விட்டு எண்ணி விடலாம். சா.கந்தசாமி அதிகம் ஆரவாரமின்றித் தன்னுடைய தடங்களைத் தமிழிலக்கியப் பரப்பில் பதித்துச் சென்றவர்.
கதைகளல்லாத கதைகள் என்று சா.கந்தசாமியின் சிறுகதைகளைச் சொல்வார்கள். பெரும்பாலான கதைகளை பின்னாளில் அவர் அப்படி எழுதியிருந்தாலும், ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ போன்ற சிறந்த கதையம்சம் கொண்ட சிறுகதைகளையும் அவர் அதிகமாகவே எழுதியிருக்கிறார்.
சா.கந்தசாமியின் முக்கியமான நாவல்களைப் பட்டியலிடுவோர் தவறாமல் குறிப்பிடுபவை, சாயாவனம், தொலைந்து போனவர்கள், சூர்யவம்சம். ‘சாயாவனம்’ தமிழில் நல்லதொரு சூழலியல் நாவல். ‘சாயாவனம்’ அழிவைச் சொல்கிறது என்றால் ‘சூர்யவம்சம்’ ஒரு மனிதனின் வளர்ச்சியைச் சொல்கிறது. ‘தொலைந்து போனவர்கள்’, காலத்தில் நீர்த்துப்போகும் சிநேகத்தைச் சொல்கிறது. ஆனால் எனக்கு மனதுக்கு நெருக்கமான இவரது நாவல் ‘அவன் ஆனது’. வேறெந்த நாவலையும் விட இவர் உளவியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பது இதில் என்பதும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்..
‘அவன் ஆனது’ 1981ல் வெளியாகி இருக்கிறது. பெரும்பாலான நாவல்கள், நேர்க்கோட்டில் நகரும் பாணியில் எழுதப்பட்ட காலகட்டத்தில் இது, தன்மையில் எதிரில் உட்கார்ந்திருப்பவரிடம் அதைச் சொல்லும் தொனியில், காலத்தில் முன்னும் பின்னுமாய் நகர்ந்து, ஞாபகக்குவியலில் இருந்து அவசரமாகக் கையில் அள்ளி எடுத்ததை மட்டும் காட்டும் கதைசொல்லல் இந்த நூலின் குறிப்பிடத்தக்க அம்சம். அக்காலத்தில் பொதுவாக நாவல்களுக்கிருக்கும் ஒரு ஆரம்பம், ஒரு பிரச்சனை, பின் தீர்வு என்பது போன்ற கதை என்று எதுவுமே இதில் இல்லை.
மையக்கதாபாத்திரமான சிவசண்முகம் பார்வையிலேயே கதை சொல்லப்படுகிறது. அவனுக்கு அறிவு குறைவு என்பது அவனுக்கும் தெரிந்திருப்பது ஒரு ஆச்சரியம்.
குறைமதி படைத்தவன் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை அவனுக்குப் புரிந்த அளவிற்கு விஷயங்களைச் சொல்கிறான். அவன் சொல்லும் தகவல்களின் இடையிருக்கும் இடைவெளியை வாசகர்கள் நிரப்பிக் கொள்ள வேண்டும். சொல்லிய கதையைத் தாண்டி சொல்லப்படாத கதை சுவாரசியமாக நகர்கிறது. ‘அவன் ஆனது’ தலைப்பில் அவன் சிவசண்முகம், ஆனது என்பதை அவ்வளவே அவன் என்று நான் எடுத்துக்கொண்டேன்.
நாவலில் வரும் ராமு என்ற ராமலிங்கம் தமிழ் நாவற்களத்தில், அற்புதமான ஒரு கதாபாத்திரம். எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார் என்ற வரிகளில் கனகச்சிதமாகப் பொருந்துகிறவர். பத்மநாபனுடன் விலகியது தெரியாமல் விலகியதும், தவிர்க்க முடியாமல் சந்திக்கும் நேரத்தில் அதே நெருக்கத்தைப் பேணுவது என்பதில் மட்டுமல்ல, நாவல் முழுவதுமே ராமு தன் மௌனத்தால், ஆமோதிப்பால் உலகுக்குத் தெரிவிக்கும் செய்தி ஒன்று இருக்கின்றது. அவர் புத்தகங்களின் காதலன் என்பது மேலும் அவரை நோக்கி நம்மை நெருங்க வைக்கிறது.
கமலா, ரோஸ்மேரி, ராஜலட்சுமி, சித்தி, திருவேங்கடத்தின் மனைவி, தெரஸா என்று ( சிவாவின் அம்மா, பத்மநாபன் அம்மா மட்டும் விதிவிலக்கு) எல்லாப் பெண்களுமே ஆண்களைப் பகடைக்காயாக உபயோகிப்பது மட்டுமல்லாது, ஆண்களை அவர்களே ஓட்டுனர் இருக்கையில் இருப்பதாகவும் உணர வைக்கிறார்கள். ஊரில் இருந்து தந்திக்கு ஏற்பாடு செய்த திருவேங்கடத்தின் மனைவிக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை
மேலே குறிப்பிட்ட அனைத்துப் பெண்களும்.
பல வருடங்கள் கழித்து நாம் ஆழ்ந்து ஒன்றை மீள்வாசிப்புச் செய்ய முடிந்தால் அது செறிவான (நல்ல) இலக்கியப்படைப்பு என்று கூறமுடியும். ‘அவன் ஆனது’ வெளிவந்து நாற்பது ஆண்டுகளுக்குப்பின்
இடைவெளி விட்டு மூன்றாவது முறை வாசிக்கையிலும் அதே சுவாரசியம் தொற்றிக் கொள்கிறது. இந்த நாவல் வாசகர்களைப் பொறுத்தவரை ஒரு அகப்பயணம். வாழ்க்கை பல புதிர்களைத் தன்னகத்துள் அடக்கிக் கொண்டு புத்திசாலிகளைக்கூட குறுக்குச்சாலைகளில் நின்று குழம்ப வைக்கிறது. சராசரிக்கும் கீழான சிவா நினைவுகளால் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முயல்கிறான். அவன் மனைவியையே அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது நமக்குத் தெளிவாகத் தெரியும். கமலா ஒரே பக்கத்தில் இரண்டு முறை உங்கள் பிரண்டெல்லாம் நீட்டா இருக்காங்க என்று ஏன் சொல்கிறாள்? சா.கந்தசாமி கமலாவை வாசகர்கள் மழையில் நனைந்த கண்ணாடி மூலம் பார்க்கும் உருவமாக, வேண்டுமென்றே சித்தரித்திருக்கிறார். சிலநேரங்களில் அதிகம் அலைபாயாமல் ராமுவைப் போல் மனம் வாய்த்ததென்றால் மிக்கவசதி என்று தோன்றுகிறது.
இன்று முதன்முறை இதை வாசிப்பவர்கள், வெகுசமீபத்தில் எழுதிய ஒரு நாவலாக இதை உணரக்கூடும். இலக்கியம் காலங்கள் கடந்து தன்னை எப்போதும் புதுப்பித்துக் கொள்ளும்.
பிரதிக்கு:
காலச்சுவடு 4652-278525
முதல்பதிப்பு டிசம்பர் 2022
விலை ரூ.275