ஆசிரியர் குறிப்பு;
கடப்பாக்கத்தில் பிறந்தவர், சென்னையில் வசிப்பவர். அரசு அலுவலர். இவரது கவிதைகள் பல இதழ்களில் வெளியாகி உள்ளன. இது இவரது முதல் கவிதைத் தொகுப்பு.
சிறகுகள் வெட்டப்படுவது எப்போதும் பெண்களுக்கே நேர்கிறது. மீறிப் பறந்தாலும் வானத்தில் வல்லூறுகளால் அபாயம். பறக்காமல் சிறகுகளைப் பத்திரப்படுத்தி வைப்பதைச் சொல்கிறது இந்தக்கவிதை. A ship in harbor is safe, but that is not what ships are built for.
” என் சிறகுகளைப் பழுதுபார்த்துக்
கொள்கிறேன்.
ஒவ்வொரு இறகையும்
தூய்மைப்படுத்திக் கொள்கிறேன்
பறக்கும் ஆசையினால் இல்லை
இருக்கும் சிறகுகளையேனும்
இழக்காமல் இருப்பதற்கு”
வாழ்க்கை சிலருக்கு காரட்டை முன்னால் தொங்கவிட்டு நடந்துகொண்டே இருக்க வைக்கும். சிலருக்கு அடிச்சூடு தாங்காமல் நெருப்பில் விழுந்த கதை. சிலருக்கு பொறியில் வால் மட்டும் வசமாக மாட்டிக் கொண்டது போல் வாழ்க்கை.
” இறுகவும் இல்லாமல்
விலகவும் இல்லாமல்
என் நினைவெனும்
தூக்குக் கயிற்றில்
தொங்கிக் கொண்டிருக்கிறது
வாழ்க்கை”
Alzheimer வியாதி முற்றி அத்தனையும் துடைத்து விட்டது போலானால் என்ன நிகழும்? பார்ப்பவர்களுக்கே பரிதாபம், நமக்கில்லையே. நினைவுகளைக் கட்டி இழுத்து இந்த வாழ்க்கையைக் கரைசேர்ப்பதென்பது பெருஞ்சுமை.
” சிறுவயதின் அறியாமைகள்
பதின்மத்தின் ஆசைகள்
மனதின் விருப்பமன்றி
நிறைவேறிய நிகழ்வுகள்
மறக்க நினைத்தும் புதைந்துவிட்ட
நினைவுப்படிமங்கள் என
நினைவுகளின் புதையிடம்
இந்த மனம் எனும் பேரகழி”
இத்தொகுப்பின் பெரும்பாலான கவிதைகள், சமூகப் பிரச்சனைகள், விளிம்புநிலை மனிதர்களைப் பார்த்துப் பரிதாபப்படுவது, காதலில் ஏங்குவது என்ற மூன்று பிரிவுக்குள் பொதுவாக அடங்குகின்றன. சமூகப்பிரச்சனைகளை கவிதைகளாக்கலாமா என்று கேள்வி எழுந்தால், நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது பேரிடம் வேண்டாம் என்று தான் சொல்ல வேண்டியதாகிறது. Subtleness மிகவும் தேவைப்படும் ஏரியா அது, நிறையப்பேருக்குக் கூடி வருவதில்லை.
ஒரு நிகழ்வை தொலைக்காட்சியில் பார்க்கிறோம். அதிகம் பாதிக்கிறது. ஆனால் அதை கவிதை எழுத உட்கார்ந்தால், வார்த்தைகள் வாடகைக்கும் கிடைப்பதில்லை. அதுவே நாம் நேரடியாக சம்பந்தப்பட்டு, அகத்தைப் பாதிக்கையில் ஆறுபோல் கொட்டும். மனித மனம் விசித்திரமானது, பல அடுக்குகள் கொண்டது. அறிவின் தளத்தில் எழுதப்படும் கவிதைகள் எப்படியும் தப்பித்துக் கொள்கின்றன. உணர்வின் தளத்தில் எழுதப்படும் கவிதைகளுக்கு, மனம், சிந்தை, நேரம் என்று ஊர்கூட்டித் தேர் இழுக்க வேண்டியதாகிறது.
பிரதிக்கு:
படைப்பு பதிப்பகம் 94893 75575
முதல்பதிப்பு 2020
விலை ரூ.100.