யாழ்ப்பாணம் கோவில்களின் நகரம். ஆன்மீகவாதிகளுக்கு ஒரு மாதம் தங்கினாலும் முடிக்க முடியாத எண்ணிக்கையில் கோவில்கள் இருக்கின்றன. சிங்களவர்கள் குறைவு என்பதால், தமிழ்நாட்டுத் தமிழருக்கு இலங்கையின் மற்ற எல்லா ஊர்களை விட உணர்வு ரீதியாக நெருக்கத்தை இந்த ஊரின் நிலத்தில் காலடி வைத்ததுமே உணரமுடியும்.

பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவில். மூலவர் ஆமை வடிவம். பிரதிஷ்டை செய்யப்படாத மூர்த்தி. இன்னொரு வகையில் இந்தக் கோவில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அல்பிரட் துரையப்பா கொலைமூலம் பிரபாகரன் பிள்ளையார் சுழி போட்டது இந்த ஆலயத்தின் முன்னரே. கசூரினா கடற்கரை
சுனாமியின் வேகத்தைக் காட்டிய கடற்கரை. நீண்ட கடற்கரை, குளிக்கலாம், குடிக்கலாம், காதல் செய்யலாம். எதுவுமேயில்லை. மாலை ஆறு மணிக்கு நாங்கள் போனபோது ஆளில்லாமல் கடல் தனிமையில் கிடந்தது. பெங்களூர் போன்ற பெருநகரங்களில் வசிப்போர் கடலின் இல்லாமையைப் பெரிதாக உணர்வர்.

யாழ் நூலகம். அழிவிற்குப் பின் அது குறித்த சஞ்சலமில்லாமல் நிற்கிறது. ஓலைச்சுவடிகள், பழம்பெரும் நூல்கள் எரிக்கப்பட்டன. புத்தகங்களை எரிப்பது என்பது Cultural genocide. Ray Bradburyயின் Fahrenheit 451ல் புத்தகங்களை எரிப்பார்கள். Markus Zusakன் The Book Thief நாவலில் புத்தகங்களை எரிப்பார்கள். அடுத்தவரின் கலாச்சாரத்தை அழிக்கிறோம் என்று புத்தகங்களை எரிப்பவர்கள் எப்போதும் மனிதரில் சேர்த்தியில்லை. எதுவும் செய்யத் துணிந்தவர்கள். யாழ்ப்பாணக் கோட்டை பல முறை அழிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டது.
முன்னர் புலிகளின் கோட்டையாக இருந்த இடம் இப்போது சிங்கள ராணுவத்தின் கைப்பிடியில்.

நயினா தீவு. யாழ்ப்பாணம் சென்றவர்கள் தவற விடக்கூடாத இடம். நாகபூஷணி அம்மனையும், ஒரு விஹாரையும் படகுப் பயணத்தின் மூலம் அடையலாம். அம்மன் மிக சக்தி வாய்ந்தது என்பது ஐதீகம். அதனாலேயே பெருவாரியாக மக்கள் வந்து சேர்கிறார்கள். படகில் படுநெரிசல். இருபது வருடம் பழகியவரை நாம் தொடத் தயங்குகையில் முன்பின் தெரியாத பெண், யாழ்ப்பாண வெயிலில், என் முதுகின் மேல் முதுகைப் பதித்து எந்தப் பிடிமானமும் இன்றி கடலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். காதலில் பாரம் தெரியாது என்பது பொய், சற்று பொறுத்துக்
கொள்வோம் என்றிருக்கிறார்கள் போலிருக்கிறது. கோவிலின் உள்ளே யாழ்ப்பாணக் கவிஞர்கள் எழுதிய பக்திப் பாடல்கள், தேவாரத்துடன் சேர்ந்து சுவரில் எழுதப்பட்டிருக்கின்றன. அறுபத்து மூன்று நாயன்மாரில் பெரும்பாலோர் போவோர் வருவோரைக் கும்பிட்டுக் கொண்டு சுவரில் நிற்கிறார்கள்.

Leave a comment