ஆசிரியர் குறிப்பு:

சீர்காழியைப் பூர்வீகமாகக் கொண்டவர், அபுதாபியில் வசித்து வருகிறார். இது இவரது சமீபத்திய கவிதைத் தொகுப்பு.

இந்தியத் தொன்மமரபில் கடவுளைக் காதலனாக உருவகித்து ஏராளமான கவிதைகள். பெண்கள் கண்ணனை அழைக்கும் சிருங்கார நடனம் வடக்கில் ஏராளம். சீதா, லட்சுமியின் அம்சம், அவளையும் வேறொருவன் காமுற்றான். தன்னை மறக்கச் செய்யும் போதை அபின், ஹெராயின் மட்டுமல்ல, பக்தியும், காமமும் தான்.

காமம் சிற்றின்பம், கடவுள் பேரின்பம் என்று முதலில் வகுத்தவன் யார்? காணாதது, கையில் சிக்காதது எப்போதுமே பேரின்பம்.பெண்வடிவை காளியாக உருவகம் செய்து பிரபு கங்காதரன் எழுதிய கவிதைகள் இவை. மன்மதனுடன் கொள்ளும் மற்போருக்குத் தாந்தரீக பூஜை.

அரசன் செல்லும் பாதை ராஜபாட்டை.

“நாவால்

இடவலமலைந்து

இதென்

ராஜபாட்டையென்கிறேன்

என் பாவாடைத்

தடமடாவென நகைக்கிறாள்

மாகாளி”

இப்பிறவி ஆசை தீராதவர்கள் பேயாய் அலைவார்கள் என்பது நாட்டார் வழக்கு.

“சிக்கடர்
நின் செஞ்சடைக்
காட்டில்
பேயாயலைகிறேன் காளி”

வீசுகமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு என்றான் பாரதி. எல்லாவரிகளிலும் complementing each other. ஆனால் இவருடைய காளி பிரம்மாண்டம். எந்தவிதத்திலும் அவளுக்கு இவர் நிகரில்லை.

‘ஆறேழுநாள்
அழுகியபிணத்தின்
துர்நாற்றத்தை
யொத்ததாக இருக்கும்.
என்மீதான உன் நினைவுகள்
ஈலுப்பை மரங்களடர்ந்த
குளக்கரையின்
மாலையில் வீசும்
மணம் நீ காளி.

போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட என்ற தற்குறிப்பேற்றல் அணி இவரது வார்த்தைகளில்:

உப்பனாற்று
மையத்திலிருந்து
வழித்த
களிமண்பூசி
கரையோரம்
முயங்கிக் கிடக்கிறேன்
காளியுடன்
காவக்கார முனியின்
கல்குதிரை
நாணித்தலை
திருப்பிக்கொள்கிறது.

மானிடர்க்கு என்று பேசப்படில் என்று உரத்தகுரலில் ஆண்டாளால் சொல்ல முடிந்தது. மீராவும் யாரை மணந்தாளோ கண்ணனையே கடைசிவரை காதலித்தாள். தமிழில் கந்தசஷ்டிக்கவசம் என்ற பக்திப்பாடலில் இருந்து இலக்கியங்கள் பலவற்றில், சுடுகின்ற கூட்டாஞ்சோறில் ஊற்றிப்பிசைந்த நல்லெண்ணெய் போல் காமம் இரண்டறக் கலந்துள்ளது. பின்னாளில் காமம் அந்தரங்கம், நாலுசுவர் நடுவில் என்றானது. நீலமணியின் சில கவிதைகள், மகுடேசுவரனின் காமக்கடும்புனல் போல் வெகுசில விதிவிலக்குகள்.

பெண்கள் தைரியமாக கடவுளைக் காதலிப்பதைச் சொல்வது போல், ஆண்களால் காதலை, காமத்தைச் சொன்னதை என்வரையில் படிக்கவில்லை. யாதுமாகி நின்றாய் காளி என்ற பாரதி வரியின் உள்ளர்த்தம், பின்வரும் வரிகளினால் எடுத்துக்கொள்ள முடியாது போகிறது.

சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி……. சிவகங்கை என்று வருகையில் பக்தி வந்துவிடுகிறது.

Fantasizing க்கு எல்லைகளே இல்லை. வசந்தா என்ற பெண்ணைக்கூட இவர் காளியாக உருவகம் செய்திருக்கலாம். நிறைய மதங்களில் பெண் கடவுளே கிடையாது. கடவுள் எப்போதும் ஆண். அது வேறுவிசயம். ஆனால் புனிதம் என்பது எப்போதும் பொதுமைப் பொருள் இல்லை. பழகியதடத்தை விட்டுப் பயணிக்கும் கவிதைகள், பிறழ்வில்லை. சலிப்பூட்டும் வாழ்க்கையில் புதுருசி சேர்க்கும் யத்தனங்கள். நாச்சியாள் சுகந்தியின் ராவணகாவியம் போல. புதிய முயற்சிகள் வரவேற்கப்படவேண்டும்.

காதல் வயப்படாதவர்களும் காமத்தின் வசப்படத்தான் வேண்டியிருக்கிறது.

பிரதிக்கு:
எழுத்து பிரசுரம், 98400 65000
முதல் பதிப்பு ஜனவரி 2019
விலை ரூ 120

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s