ஆசிரியர் குறிப்பு:
தமிழ்க் கவிஞர், ஆய்வாளர், பதிப்பாளர், பிழைதிருத்துநர், பிரதிமேம்படுத்துநர், கல்விப் புலத்துக்கு வெளியே நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குபவர் போன்ற பன்முகத் தன்மை உடையவர், முனைவன் என்ற சிற்றிதழை எண்பதுகளில் நடத்தி வந்தவர். தொல்காப்பிய-திருக்குறள் உரையியல், மணிக்கொடி கலைஞர்களைப் பற்றிய ஆய்வியல் உள்ளிட்ட இவரது பல நூல்கள் ஏற்கனவே வெளிவந்தவை.
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கியம், சிறுபத்திரிகைகளுடன் இணைந்தே பயணிப்பவர். இலக்கிய விமர்சனங்களை, நூல் குறித்த தகவல்களை அயர்வின்றி வாசகர்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணிக்கு பலர் எதிர்வினை செய்யாத போதும் என் கடன் இலக்கியப்பணி என்றிருப்பவர். செயலால் இன்றும் இளைஞர். இவருடைய புதுமைப்பித்தன் கதைகள் அகலமும் ஆழமும் குறித்தே முதலில் எழுத வேண்டும் என்றிருந்தேன். நூலை யாரோ எடுத்துச் சென்றனர், வேறு பிரதி இன்னும் கிடைக்கவில்லை.
முதல் கட்டுரை மேஜிக்கல் ரியலிசத்தைப் பற்றிய கட்டுரை, புதுமைப்பித்தனை முன்வைத்து. கிருஷ்ணன் நம்பியின் தங்க ஒரு….. சிறுகதை முழுமையான மாயயதார்த்தக் கதை. மார்க்கஸின் One hundred year of solitudeல் ஒரு காட்சி. மகன் கொலை செய்யப்படுவான். மாடியில் இருந்து அவனது ரத்தம், படிகளில் இறங்கிப் பலவீதிகளைக் கடந்து, சமையலுக்கு முட்டை உடைத்துக்கொண்டிருக்கும் தாயின் வீட்டுப் படியேறி அவள் காலைத் தொடும். தொட்ட கணமே மகன் இறந்தது தாய்க்குத் தெரியும். இங்கே எல்லாமே உண்மை, ரத்தத்தின் பயணம் மட்டும் மாயயதார்த்தம். உண்மையை அழுத்திக்கூற உபயோகிக்கப்பட்ட மாயயதார்த்தம்.
ஜி.நாகராஜன் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக எழுதினார் என்று தமிழில் மட்டுமே விவாதம் நடத்தும் சாத்தியம் இருக்கிறது. அதற்கு எதிராக இவர் அளிக்கும் தகவல்கள் புதிதாக வாசிக்கவரும் வாசகருக்கு ஒரு பறவைக் கோணத்தில் தமிழ் இலக்கிய அரசியலை விவரிக்கும்.
நந்தனை முன்வைத்து இன்றைக்கும் பொருந்தும் விசயங்களைப் பேசும் கட்டுரை,
இலக்குமிகுமாரன் ஞான திரவியத்தின் படைப்புகளின் அழகியவ் குறித்து விரிவான கட்டுரைகள் பல தகவல்களுடன் வாசிக்க சுவாரசியமானவை.
பெருமாள்முருகனின் மாதொருபாகன் குறித்த கட்டுரை அது குறித்த பல்வேறு கருத்துகள் எதிர்கருத்துகளைக் கூறுவது மட்டுமில்லாமல், தமிழ்சூழலில் யார் யாரெல்லாம் அவரது படைப்புகளுக்கு எதிர்ப்பை சந்திக்க நேர்ந்தது என்பதையும் கூறுகிறது. இங்கே எந்த பரபரப்பும் நூல் விற்பனையை அதிகப்படுத்தும் என்பதையும் இந்தநேரத்தில் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
முறைகேடாகப் பிறந்த கதைகள் கட்டுரை 360 டிகிரி கோணத்தில் பிரச்சனையை அணுகுகிறது. கருத்து சுதந்திரம் மீண்டும் மாதொருபாகனை முன்வைத்து பலரது எதிர்வினைகள் குறித்த குறிப்புகளுடன் இவரது விளக்கமும் அடங்கிய கட்டுரை. ரமேஷ் பிரேதனின் ஐந்தவித்தான் நூல் குறித்த இவரது கட்டுரை ஒரு முழுமையான ஆய்வுக்கட்டுரை. தமிழில் ஆய்வுக்கட்டுரைகள் எழுத விரும்பும் மாணவர்கள் ஒரு படைப்பை எவ்வாறு அணுகவேண்டும் என்று சுட்டும், தவறாது படிக்க வேண்டிய கட்டுரை. தலைப்புக் கட்டுரை தமிழில் குறுங்கதைகள் குறித்து ஏராளமான தகவல்களை அளிக்கும் கட்டுரை.
பன்னிரண்டு கட்டுரைகள் கொண்ட தொகுப்பு. புனைவுவெளி அழகியலும், அரசியலும் ஒரு பகுதியாக, கதையாடலாய்வு மற்றொரு பகுதியாக இரண்டு பகுதிகள். கதையாடலாய்வு இரண்டு கட்டுரைகளுமே எனக்கு நெருக்கத்தை ஏற்படுத்திய கட்டுரைகள்.
இவரது இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் மட்டுமல்ல, இவரது எல்லாக் கட்டுரைகளுமே பலரது மேற்கோள்களைக் குறிப்பிட்டு அதன் மீதான தர்க்கவிவாதத்தை நடத்துபவை. தான் நம்பும் ஒரு விசயத்திற்காக எத்தனை தகவல்களை இணைத்துத் தருகிறார் இவர் என்று பலமுறை நான் ஆச்சரியம் அடைந்ததுண்டு.
தனித்தமிழ், திராவிடம், மார்க்சியம், தமிழ் இலக்கியம் இவரது நான்கு தூண்கள். இவரது புதுமைப்பித்தன் குறித்த நூல் மிக முக்கியமான நூல். புதிதாக வெளிவந்த ஜெயந்தி கார்த்திக்கின் லிங்கம் வரை வாசித்து விமர்சனமும் எழுதி விட்டார். வாசிப்பில் தாகமுள்ளவர்களுக்கு ஓய்வு என்பதேயில்லை. இவருக்கு அது மிகவும் பொருந்தும்.
பிரதிக்கு:
அன்னம் 94431 59371
முதல்பதிப்பு செப்டம்பர் 2018
விலை ரூ.275.