ஆசிரியர் குறிப்பு:
உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர்.
வானம்பாடி கவிதை இயக்கம் பற்றி தனது முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்தவர். இதுவரை பன்னிரண்டு நூல்களை எழுதிய இவரது ஐந்தாவது கவிதைத் தொகுப்பு இது.
உழவன் என்ற சொல் புழங்கும் அளவிற்கு அதன் பெண்பால் சொல் உழத்தி அதிகம் புழங்கியதில்லை. முதல் கவிதையில் அது ஏன் என்று சொல்கிறார். நாம் தான் எளிதாக கூலிக்காரி என்று சொல்லிக் கடந்து விடுகிறோமே.
எளிய மனிதர்களைப் பற்றிச் சொல்லும் எளிய கவிதைகள், ஆனால் எளிய விசயங்களைப் பேசவில்லை. வேறு கவிதைகளில் சொல்லியிருந்தால் பகடி, நையாண்டியாகி இருக்கும் வார்த்தைகள் இங்கே பரிதாப உணர்ச்சியைக் கூட்டுகின்றன.
பணிஇடச்சூழல் காரணமாய் வேளாண்குடி மக்களை சந்திப்பதிலேயே இவரது பாஷை கோவை விவசாயியாய் மாறி இருக்கிறதே!
” நாற்றின் பிரியினின்றும்
ஒற்றை நாற்றை
பெருவிரல் மெட்டி
சேற்றில் நடும் சூதானத்தோடு”
எரியும் வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்றிருப்போர், நகரம் கிராமம் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறார்கள்.
” வாழ்ந்து கெட்ட
ஒருவனின் காட்டிற்கு
விலைவைக்கச்
செல்பவர்கள்
சாத்தான்களால்
வழிகாட்டப்படுகிறார்கள்”
தொடர்பில்லாத இரண்டு விசயங்கள் இந்தக்கவிதையில் அவலச்சுவையைக் கூட்டுகின்றன, ஒன்று அச்சச்சோ சித்ரா போல் “சோளமக்கா”. அடுத்தது முதுமையில் தனிமை. முத்துமுத்தா எனும் வார்த்தை இங்கே முரண்நகை.
“கந்தல் சேலைக்காரிக்கு
முத்துமுத்தாப் பிள்ளைகள்
என்ற விடுகதையின்
விடைக்காக
அஞ்சாம் வகுப்பில்
எங்களை
ஒரு வாரமாய்த் தவிக்கவிட்டு
சோளமக்கா எனும் பெயர்பெற்ற
பழனீமாக்கா
முத்துமுத்தான தன்
மூன்று பிள்ளைகளும்
ஆஸ்திரேலியாவிலிருந்து
வரக்காத்திருக்கிறாள்
குளிர்ப்பெட்டிக்குள்”
தங்கைக்கு வைத்துவிடுவதால் ஒருபோதும் வலதுகைக்கு மருதாணி வைத்துக் கொள்ளாதவளின் பாசத்திற்கு பலவருடம் கழிந்து சேலை எடுக்க ஒரு மணிநேரம் தேடினாலும் சேலை கிடைக்கவில்லை. பாசத்தால் நெய்த சேலை எங்கே கிடைக்கப்போகிறது?
” எந்த மருதாணிக்கும் இல்லை
என் பால்யகால
மருதாணிச்சிவப்பு”
Concept poetry collection என்பது பொதுவாக மற்ற கவிதைத் தொகுப்புகளைப் போல் கவர்வதில்லை. ஆனால் இந்தத் தொகுப்பு, அப்பாவி மக்களின் வலியை, துயரை, ஏமாற்றத்தை, இழப்பை எளிய வார்த்தைகளில் சொல்லிப் போகிறது. பந்தல் பூவை வைக்க பெண்பிள்ளை இல்லை என்று புலம்பிய பெரிய அப்பத்தா பூவை விற்று கஞ்சி குடிப்பதைப் பார்க்காமல் போய் சேர்கிறாள். கண்முன் நிறைய மனிதர்கள் காட்டை விற்க கண்ணீருடன் கிளம்பிச் செல்வதைப் பார்த்தது போன்ற உணர்வு எழுகிறது.
குழந்தைக்கு ஊசிபோடும் போது திரும்பிக் கொள்வது போல மாட்டுக்கு மருந்து கொடுக்கும் போதும் முகம்திருப்பும், ஆடுமாடு குடும்பத்தில் ஒரு அங்கம் என்ற நம்பிக்கை வைத்திருப்பவர்கள், ஏதோ ஒருவிதத்தில் இந்த இயந்திரஉலகத்தில் வாழும் தகுதியை இழக்கிறார்கள். அவர்களை நினைவுகூர்வதே இந்தக் கவிதைகள். எல்லோராலும் கைவிடப்பட்ட சோகங்களின் நடுவில் இருக்கும் இவர்களைப் பற்றிய கவிதைகள் படிக்கவே வாதை செய்கின்றன என்கிறார் சு.வேணுகோபால் முன்னுரையில். அவர் ஒருகாலத்தில் விவசாயி. நூலைப்படித்து முடித்ததும் வயல்வேலை இடைவெளியில் ஓடிப்பிடித்து விளையாடும் கணவன் மனைலியின் உருவங்கள் என் மனக்கண்ணில் அசைகின்றன. நான் எப்போதும் கனவுலகசஞ்சாரி.
பிரதிக்கு:
கடற்குதிரை வெளியீடு 98422 93704
முதல்பதிப்பு டிசம்பர் 2020
விலை ரூ 100.