அடுக்களை- பனானா யொஷிமோட்டோ

பனானா ஜப்பானில் இப்போது எழுதிக் கொண்டிருப்பவர்களில் அதிக வாசகர் எண்ணிக்கை கொண்ட ஜப்பானிய எழுத்தாளர்களில் ஒருவர். உணவுவிடுதியில் பணிப்பெண்ணாக வேலைபார்த்துக் கொண்டு எழுதிய முதல் நாவலான Kitchen பரவலான வரவேற்பைப் பெற்று, இவருக்கு ஜப்பானிய இலக்கியத்தில் நிரந்தர இடத்தைப் பெற்றுத் தந்தது.

மிகேஜ் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவள். தாத்தா, பாட்டியுடன் அவர்கள் வீட்டில் வளருகையில் தாத்தாவும் இறக்கிறார். அவள் காலமெல்லாம் ஒன்றாய் வாழ்வோம் என்று நம்பிக் கொண்டிருந்த காதலனின் பிரியத்தில் அந்த இழப்பைக் கடக்கிறாள். ஆனால் காதலனும் ஒரு விபத்தில் இறக்கிறான். பாட்டியும் இறந்து விடுவாள், தான் மட்டும் தனியாக இருக்க வேண்டும் என்ற அவளது பயம் உண்மையாகிறது. தனித்து விடப்பட்ட மிகேஜின் கோணத்தில் இந்தக்கதை நகர ஆரம்பிக்கிறது.

இறப்பும், துக்கமும் இந்த நாவலின் முக்கிய தீம்கள். மிகேஜ் மட்டுமல்ல அவளைக் கூட்டிக்கொண்டு போய் வீட்டில் வைத்துக்கொள்ளும் யுஐச்சியையும் மரணங்கள் சூழ்கின்றன. மிகேஜ்ஜின் காதலளின் தம்பி, ஆற்றைப் பார்க்கலாம் வா என்று அழைக்கும் பெண் என்று எல்லோருமே அவர்களுக்கு மிக நெருங்கியவர்களின் மரணத்தைக் கடந்தே வந்திருக்கிறார்கள். மரணம் நடக்காத வீடு இல்லை, ஆனால் எல்லா கதாபாத்திரங்களையும் மரணங்கள் சூழ்ந்திருப்பது தற்செயலான விசயமில்லை.

மிகேஜ் சமையல் செய்வதில் ஒரு ஆசுவாசம் கொள்கிறாள். வீட்டின் எல்லா அறைகளையும் விட அவளுக்கு அடுக்களை தான் பிடித்த இடம். தூங்குவது கூட அங்கே தான். ஆரம்பம், தியரி, செயல்முறை என்று மூன்றுவிதமான சமையல் புத்தகங்களை
வாங்கிக்கொண்டு, ருசி சரியாக வரும்வரை மீண்டும் மீண்டும் செய்கிறாள். எதையேனும் சார்ந்திருந்து தான் துக்கத்தில் இருந்து தப்பிக்க வேண்டியதாகிறது. அதே போல் உணவு என்பது வயிற்றை நிரப்புவது மட்டுமல்ல, அம்மா அல்லது மனைவியின் அன்பின் மௌனபாஷை அது. இந்தியாவைப் போலவே இந்த நாவலிலும் உணவு ஒரு நெருக்கத்தை, அன்பை வெளிப்படுத்த அங்கங்கே உபயோகப்படுகிறது.

குடும்ப அமைப்பு என்பதும் நம் போலவே ஜப்பானியர்களுக்கும் மிக முக்கியமானது. ஆனால் இந்த நாவலில் வரும் யாருக்குமே குடும்பம் என்பது கிடையாது. அநாதையான மிகேஜை யுஐச்சியும் அவனது அம்மாவும் குடும்ப உறுப்பினராக ஏற்றுக் கொள்கிறார்கள். அப்படி ஏற்றுக்கொண்டது என்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பது நாவலின் கடைசியில் தெரிகிறது.

எண்பதுகளின் இறுதியில் எழுதப்பட்ட இந்த நாவல் ஜப்பானின் சிறந்த Contemporary novelகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பாப் கல்ச்சர் போன்ற விசயங்களைக் கலக்காமல் ஜப்பானின் மதிப்பீடுகள், வாழ்க்கைமுறை, உறவுகள், வலி தாங்குதல் போன்றவற்றை வெளிக் கொணர்ந்த நாவலாகக் கருதப்படுகிறது.

Nostalgiaவையும் நனவோடையையும் கலந்து ஒரு அழுத்தத்தையும், பிரதான கதாபாத்திரத்தின் மனநிலையை வாசகர் புரிந்து கொள்ளும் யுத்தியாகவும் பனானா பயன்படுத்துகிறார். அதே போல் மிகேஜ் என்ன செய்யப் போகிறாள் என்பதை சொல்லாமலேயே இது தான் என்ற முடிவுக்கு மாயயதார்த்தத்தின் சாயலில் நடக்கும் நிகழ்வால் உணர வைக்கிறார். எல்லாம் முழுகிக் கொண்டு இருக்கையில் எதிர்பாராத உதவி போன்ற ஒரு நன்நம்பிக்கை தொனியைக் கொண்டுவருவது பனானாவின் வழக்கமான பாணி. இது இவருடைய முதல் நாவல் மட்டுமல்ல, இவரைப் படிக்க விரும்புவோர் முதலில் ஆரம்பிக்க வேண்டிய நாவலும் இதுவே என்று பரிந்துரை செய்வேன்.

நூல் பெயர் – Kitchen
ஆசிரியர் பெயர்- பனானா யொஷிமோட்டா
பதிப்பகம்- க்ரோவ் பிரஸ்
பக்கங்கள்- 164
வகை- ஆங்கிலநாவல்
விலை, ரூ 304.05
நூல் பெற தொடர்பு- Amazon.in
முதல்பதிப்பு செப்டம்பர் 2015.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s