தமிழோ அல்லது ஆங்கிலமோ நான் புத்தகத்தை வாசிக்குமுன் முன்னுரைக்குள் நுழைவதேயில்லை. ஆங்கிலத்தில் Spoilers இருப்பதில்லை, ஆனால் ஒரு முன்முடிவை ஏற்படுத்தும் தகவல்கள் இருக்கும். ஆனால் தமிழில், “இறுதியில் கனகா அப்படி செய்திருக்கக்கூடாது” என்பது வரை சொல்கிறார்கள். பெரும்பாலான தமிழ் முன்னுரைகள், பின்னுரையாக இருப்பதற்கே பொருத்தமானவை.

வேறெப்போதையும் விட கொரானா ஊரடங்கு காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து தமிழில் அதிகமாக சிறுகதைகள் எழுதப்பட்டு வருகின்றன. ஜீவகரிகாலன் குறைவாக எழுதுகிறவர். நண்பர்கள் பலரின் அழுத்தம் காரணமாக அவ்வப்போது எழுதிய கதைகள் ஒரு தொகுப்பளவிற்குச் சேர்ந்தது உண்மையில் ஆச்சரியமே. பெரும்பாலான கதைகள் முன்னரே படித்திருப்பினும், தொகுப்பில் மொத்தமாகப் படிக்கையிலேயே பூர்ண சித்திரம் கிடைக்கிறது.

இத்தொகுப்பின் கதைகளில் தாமிரத் தழும்புகள், நாவலுக்கான களம். பணக்காரருடன் சாப்பிடச் சென்று பாதிவயிறே நிரம்பிய உணர்வு இந்தக் கதையைப் படிக்கையில் வருவதைத் தடுக்கமுடியவில்லை. பால்வெளி மயக்கம் வெற்றிரமாக அமையாத ஒரு முயற்சி. Fantasize செய்வதான கதையில் வித்தியாசமான மொழிநடை, Second person singularல் கதை சொல்லும் யுத்தி, Extra காமம் எல்லாம் சேர்ந்தும் கதையில் நுட்பம் கூடிவரவில்லை. ஸ்டிக்கி நோட்டின் கதையில் கரிகாலனின் மெல்லிய Dry wit humour உடன் மேலைநாட்டுக் கதைகள் போலவே அல்புனைவுக்கும், புனைவுக்குமுள்ள இடைவெளியைக் குறைக்கும் கதை நன்றாக வந்துள்ளது. ஒருவகையில் நகுலனின் வாக்குமூலத்தை நினைவுக்குக் கொண்டுவருகிறது.

அமானுஷ்யத் தன்மையின் சாயல் வந்து போகும் கதைகள், வளர்பிறை, ஒருசம்பிரதாய தேநீர் சந்திப்பு, திருமுகம், எப்பவும் போலவே 4 மற்றும் 7 முதலியன. ஆலன் போவின் கதைகள் போல் இவற்றை Gothic வகையில் சேர்க்கமுடியாது. யாரேனும் Hallucination அல்லது Subconscious உள்ளே இருந்து வரும் விசயங்கள் என்று விளக்கம் சொல்லக்கூடும். கதையில் அதிக அழுத்தத்தைக் கொடுத்து விட்டு, வாசகரை திசைமாற்ற அமானுஷ்யத்தின் சுவடுகளைக் கொஞ்சமாக பயன்படுத்துவதாகத் தோன்றுகிறது. அந்த வகையில் அடிக்கடி அமானுஷ்யத்தைத் தொட்டு எழுதும், ஜெயமோகன், போகன் சங்கர், சுஷில் குமார் போன்றோரின் கதைகளில் இருந்து கரிகாலனின் கதைகள் விலகி நிற்பவை.

Music குறிப்பாக Jazz தவிர்க்கவியலாமல் முரகாமியின் கதைகளில் வருவது போல ஜீவ கரிகாலனுக்கு ஓவியம். தொகுப்பில் பல கதைகளில் ஓவியம் கிட்டத்தட்ட ஒரு கதாபாத்திரமாகவே வருகின்றது. ஒரு சைக்கோ பற்றிய கதையில் கூட ஓவியம் தவிர்க்க முடியாது இடம் பெறுகிறது. “கலை எனும் பெண்டுலம்” போன்ற இவரது கட்டுரைகள், புனைவுகளில் வெளிப்படுவதைவிட ஒவியக்கலையின் மீதான இவர் நெருக்கத்தை வெளிப்படுத்தும்.

ஜீவ கரிகாலன் எடுத்துக் கொள்ளும் கதைக்களங்கள் மட்டுமில்லை, கதைகளும் வித்தியாசமானவை. ஒருசம்பிரதாய தேநீர் சந்திப்பு கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முரகாமி எழுதியது என்றால் பாதிப்பேர் நம்பிவிடுவார்கள். திருமுகம் கதையின் நடை அதற்கு முற்றிலும் வேறானது. அது போலவே பல கதைகள் ஒரே எழுத்தாளரின் சாயலை இழந்து நிற்பவை.

குறுங்கதைகளையும் முயற்சி செய்து இருக்கிறார். எப்பவும் போலவே- 2 குறுங்கதை இலக்கணப்படி எழுத்தாளர் நினைத்தபடி வாசகருக்கு அதே உணர்வைக் கடத்துகிறது. குறுங்கதைகள் கதை சொல்வதற்கு எழுதப்படுவதில்லை, ஒருஉணர்வை வெளியிடவே எழுதப்படுகின்றன. குறுங்கதை சட்டகத்துள் பொருந்தாத கதைகளும் தொகுப்பில் இருக்கின்றன.

சிறுகதைகளை ஒரு தொழிற்சாலையில் உருவாக்குவது போல் எழுதுவதற்கில்லை.
சிறுகதைகள் பெரும்பாலும் வெளியே வருவதற்கு சரியான நேரத்திற்காகக் காத்திருக்கின்றன. எழுத்தாளர் இங்கே ஒரு மீடியம். கலைநுட்பம் வாய்ந்த எழுத்தாளர்களிடம் அவை நல்ல கதைகள் ஆகின்றன. ‘எஞ்சியிருக்கும் துயில்’ போன்ற கதைகளில் கரிகாலன் பிரகாசிக்கிறார்.

நேரம் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு கதைகளுக்கும் இடைவெளி எடுத்துத் திருத்தம் செய்தால் கரிகாலனால் சிறந்த கதைகளைத் தொடர்ந்து தரமுடியும். முதல் இரண்டு தொகுப்பைக் காட்டிலும் இந்தக் கதைகளில் இன்னும் முதிர்ச்சி தெரிகிறது. ஒரு எழுத்தாளன் தொடர்ந்து எழுதுகையில் கதைகள் நேர்த்தியில் முன்னோக்கி நகர்வதைத் தாண்டி வேறு எதை கோருவதற்கு இருக்கிறது?

பிரதிக்கு:

யாவரும் பப்ளிஷர்ஸ் 90424 61472
முதல் பதிப்பு நவம்பர் 2021
விலை ரூ. 180.

Leave a comment