ஆசிரியர் குறிப்பு:

தஞ்சை, திருவாரூர் மாவட்டம் அம்மளூரில் பிறந்தவர். சென்னையில் வசிக்கிறார். தொழிற்சங்கப் பொதுசெயலாளராக இருந்தவர். தனியார் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு இது.

திருமணமாகி அடுத்த வருடத்தில் குழந்தை பெறுபவர்கள், எல்லோருக்கும் நடக்கும் விசயம் தானே என்று எளிதாக எடுத்துக் கொள்கிறார்கள். பத்து, பன்னிரண்டு வருடக் காத்திருப்பிற்குப் பின் முதல் குழந்தையை பெறுபவர்களுக்கு என்று தனி உணர்வு. தவசியின் காத்திருப்பு இன்னும் அதிக காலம்.

மூன்று வரிகள். தனித்தனியாக மூன்றும் மூன்று திசைக்கு இழுக்கின்றன. கடைசியில் ஒரு ஒருங்கிணைவு.

” கட்டறுந்த காலமும் வெளியும் சிலந்திக்கூடு
பூசணம் பூத்தவனுக்கு அவன் எப்போதும்சரி
கெடுப்பார் இன்றியும் தானே கெட்டுப்போவார்கள்”

சிலவரிகள் எதிர்பாராது வந்து அதிர்ச்சியை ஏற்படுத்துவது இவரது கவிதைகளில் அடிக்கடி நிகழ்கிறது. இந்த வரிகள் Classic example. நாம் பார்க்க செல்வதில்லையா? அது தான் காத்திருக்கிறதா? எனில் என்ன சொல்லப் போகிறது!

” அருகருகே நாமிருந்தும்
காண மறுக்கிறோம்
ஒத்தையாய் ஊதிப்பெருத்த பிணம்மாதிரி
யாருடைய வருகைக்காக காத்திருக்கிறோம்”

முதுமை என்பது ஆன்மாவின் கடைசிப் பாடலா? யாருக்கும் வேண்டாத பூசணியை என்ன செய்வது? மூச்சிருப்பது மட்டுமே வாழ்தலின் அறிகுறி என்றால் சாவது மேலல்லவா?

” புகைமூடிய கண்ணுக்கெட்டிய தூரம் கானல்
நிராதரவின் முதுமை
புரையோடிய வன்முறை
தலைச்சுழலல் தனிப்பறவை
நரம்பெல்லாம் கவலை
இருளின் நடமாட்டம்
மனம் பைத்தியமாகும்”

அன்னை வளர்ப்பதில் என்ன இருக்கிறது, பின் அவளைக் குறைகூறி என்ன பயன்?

” பித்துப்பிடித்த மந்திரம்போல் மதுரவெளி
அப்பாலும் இப்பாலும் எதிலும் பிடிபடாமல்
கபடின்றி வளர்வது என்பதே சாகசம்தான்”

அலையும் நீர் மேவும் குமிழாதல் போலே
ஆவதுப் பொய் ஆவதெல்லாம் ஆசையினாலே என்று உடுமலை நாராயணகவி சொல்வதன் எதிர்க்கரை இந்த வரிகள்:

” வௌவால்களின் வாடை
வாழ்வின் நச்சரிப்பு
ஒன்றிலும் ஒன்றுமில்லை
பாழும் அந்தகாரம்
நீ நான் யாவரும்
பரஸ்பரம் விழுங்கும் பாம்பு”

பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு…….
என்று திருமந்திரம் சொல்வது இதனால் தானா!

” கண்டும் காண்பதில்லை
கேட்டும் கேட்பதில்லை சவங்கள்
உறங்கியதை விழித்தபிறகுதான்
உணரும் பிணம்”

தவசி நவீனச்சித்தர். இந்தக் கவிதைகள் ஒரு தத்துவ யாத்திரை. திருமந்திரத்தின் அதிவிரும்பி தவசி. அங்கங்கே அதை எளிமைப்படுத்திக் கொடுத்தது போல் சிலவரிகள். இணைய அகராதியில் அருஞ்சொற்கள் தேடி, வாக்கியங்களை மழித்தும் நீட்டியும், தன்னைத்தான் வியந்து நோக்கும் வரிகளின் நடுவே எளிமையின் பிரம்மாண்டத்தைக் காட்டும் வரிகள் இவருடையவை. ” நினைவழியும் காலச்சுழியில் எது ப்ரமை எது நிஜம்”.

அம்மா அடிக்கடி அநேக கவிதைகளில் வருகிறாள். எப்போதும் மலர்ந்த முகத்துடன் அம்மா. எத்தனை வயதானால் என்ன, அம்மாவைத் தாண்டிய உறவேது இந்த பூமியில். அம்மாவின் கைத்தலம் பற்றுவதை விடப்பெரிய ஆறுதல் ஏது? அம்மாவைச் சுற்றுவதும் கிரிவலம் தானே.

தனிமை, சூன்யம், மரணம், முதுமை, பாசாங்கு போன்ற கருப்பொருட்களைச் சுற்றியே நகரும் கவிதைகள். ஏற்கனவே கூறியது போல் ஆச்சரியமூட்டும் சிந்தனையும் அதற்கேற்ப வார்த்தைக் கோர்வையும் சங்கமிக்கும் கவிதைகள். இது போன்ற கவிதை நூல்களை படித்தாயிற்று என்று சொல்வதற்கில்லை, ஒருமுறை வாசித்திருக்கிறேன். யாரையும் தொந்தரவு செய்யாத எழுத்து எதற்கு? ஆளில்லா இடத்தில் ஏற்றாமல் காற்றில் கரையும் கற்பூரம் போல. தவசியின் கவிதைகள் யாருக்கேனும் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அறுபதுக்குமேலான வருடங்களின் அனுபவச்சாரம் கேப்சுயூல் வடிவில். ” அற்றது பற்றுஎனில், உற்றது வீடு”

பிரதிக்கு:

அமிர்தாலயம் வெளியீடு
விற்பனை உரிமை தமிழ்வெளி 9094005600
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ.100.

Leave a comment