ஆசிரியர் குறிப்பு:

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் பிறந்தவர். மென்பொருள் நிறுவனத்தில் தலைமைப் பொறியாளராகப் பணிபுரியும் இவர், நொய்டா, ஜோகன்ஸ்பர்க், சிட்னி முதலிய நகரங்களில் வசித்தவர். டொரினா எனும் சிறுகதைத் தொகுப்பும், நட்சத்திரவாசிகள் என்ற நாவலும் இதுவரை வெளிவந்தவை. இது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு.

குழந்தை இறந்த வீட்டில் பட்டினிச்சாப்பாடு போட்டது ஒரு நிகழ்வு. அந்த வீட்டில் உள்ளோருடன் ஒரு பழைய நிகழ்வை கற்பனை செய்து இந்த நிகழ்வுடன் இணைக்கையில், நிகழ்வு ஒரு கதையாக உருவாகிறது. துக்கவீட்டில் எதிர்பார்த்த உணர்வுக்கு நேரெதிராக எதிர்வினை இருப்பதாகக் கொண்டு வருகையில் கதையில் நுட்பம் கூடுகிறது. பெண்கள், பழைய காதலனிடம் ஏழ்மையையோ, கஷ்டங்களையோ வெளிக்காட்டுவதில்லை.

அசாதாரண நிகழ்வுகள் பல கதைகளில் வருகின்றன. கனவுகள் செய்தியை சுமந்து வரும் கதைகள் இரண்டு. மன்னிப்பைக் கோருவதற்காக வரும் சொந்தக் கனவுகள் ஒரு கதை, மன்னிக்கவே முடியாது என்பதை அடுத்தவர் கனவில் தெரிந்து கொள்ளும் மற்றொரு கதை. Consumer interest insightsஐ கூகுள் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு அனுப்புவதைச் சொல்லும் சுழல் கதையின் இறுதி Twist எதிர்பாராதது. மெய்நிகரி நிஜத்திற்கும் நிழலுக்குமிடையேயான தோற்றமயக்கம். ஜன்னல், இணை இரண்டும் வீடடங்கு காலத்தின் இரண்டு பரிமாணங்கள்.

பன்னிரண்டு கதைகள் அடங்கிய தொகுப்பு.
நான்கு வருட இடைவெளியில் எழுதப்பட்ட கதைகள். நான்கு வருடத்தில் மனநிலையும், எழுத்தும் கூட நிச்சயம் மாறியிருக்கும்.
மண், சக்கரம் இரண்டும் தொகுப்பின் மிகச் சிறந்த சிறுகதைகள். மண் கதையில் பேராசை, நிறவெறி, அமானுஷ்யம், Mixed culture எல்லாமே சரியான கலவையில் வந்திருக்கிறது. அது மட்டுமல்ல ஊர் மண்ணும் ஆஸ்திரேலிய மண்ணும் சந்திக்குமிடமாக அந்தக் கண்கள். அதே போல் வாழ்க்கை சக்கரம் போல் சுழல்வது, மேல்பாகம் கீழும், கீழ்பாகம் மேலும் மாறிமாறி சுழல்வது. யார் மோசம் செய்தவனோ அவனைக் கடைசியில் Victim ஆக்கும் யுத்தி!

கடைசிக் கதையில் எழுத்தாளரைப் பற்றி வரும் வரிகளில் பாதி இவருக்கும் பொருந்தலாம். மிகை உணர்ச்சிகள் இல்லாது நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கதைகள் இவருடையவை. கார்த்திக்கின் எழுத்தில் ஒரு முதிர்ச்சி இருக்கிறது. Fantasy elements கொண்ட தனித்தலையும் நட்சத்திரம் கூட அந்த முதிர்ச்சியினாலேயே கதை Sharp ஆக வந்திருக்கிறது. வெவ்வேறு வித்தியாசமான களங்களில் இந்த பன்னிரண்டு கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. நிறைவான வாசிப்பனுபவத்தை வழங்கும் சிறுகதைத் தொகுப்பு.

பிரதிக்கு:

காலச்சுவடு பதிப்பகம் 4652- 278525
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ.175.

Leave a comment