ஆசிரியர் குறிப்பு:

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையை சேர்ந்தவர் இவர். இதழியல் துறை, திரைத்துறை சார்ந்து இயங்கி வருபவர். இருபதுக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள், ஆறு சிறுகதைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்தவை.

யாமினியைத் தெரியாதவர்கள் யார்? இவர் யாமினிக்குச் சொந்தக்காரர். கவிதைகள் வாசிக்க ஆரம்பிப்பவருக்கு நான் பரிந்துரை
செய்யும் நூல் யாமினி. வேறெதையும் விட காதலைப் பேசுகையில் அய்யப்ப மாதவன்
அதிகபட்ச உயரத்தை எட்டுகிறார் என்பது என் கற்பனையாகக் கூட இருக்கலாம்.

” தெளிந்த நீரோடைக் கூழாங்கற்களைப் போல் மனதிலிருந்தாய்
என் ஏகாந்தம் உன் விரல்களால்
விட்டு விலகியது
காதலில் கரையொதுங்கிய வேளை
ஆழ்கடலுக்குள் எடுத்துச் சென்றாய்”

” ஊமைப் பொழுதுகளில்
பார்வை மொழியில் தாபத்தின் வீர்யம்
தூறலின் சீதளத்தில் விரலிடுக்குகளில்
தேகங்கள் கவிதைகள்
தவளைக் குரல்களில் சலனித்த காலம்
துரித மழையில் உதறலெடுத்த இருளில்
தொலைந்த நித்திரை
விதிர்விதிர்த்து இலைகள் போன்று
இமைகள் காமமாகவே அன்பே….”

வெகுவாகத் தொந்தரவு செய்த கவிதை.
ஏதோ ஒரு இலக்கைத் துரத்தி அடைந்தும், அடையாமலும் முடியும் மனித வாழ்வு. ஆசை அறுமின் என்பது தெரிந்ததே, எப்படி என்பது தான் கேள்வி. வானத்துப் பறவைகளைப் பாருங்கள் அவை விதைப்பதுமில்லை என்ற தேவகுமாரனே, வானத்துப் பறவைகளுக்கும் கூடு ஒன்று இருக்கிறதே என்று சொல்ல நேர்ந்தது.

“தட்டான்களுக்கு பறப்பது வாழ்வு
எக்கணத்திலும் மடியும்
மரணம் அறியாப்பொழுதுகளில்
இன்புற்றிருக்கவே பழகியிருக்கும்
மரக்கிளையில் இளைப்பாறும்
பூச்சிகள் கவ்விப் பசி தீர்க்கும்
பிரமாண்ட உலகில் இலக்குகள் இல்லை
பிறப்பும் இறப்பும் அறியா வாழ்வில்
யாதொரு கனவுமில்லை
சிலபொழுதே வாழும்
தட்டான்களுக்கு
நல்லவேளை
நீண்ட ஆயுள் வாய்க்கவில்லை”

அம்மா நமக்காக அழுகிறாள். நாள் முழுதும் வேலை செய்கிறாள். கோயிலுக்குப் போய் வேண்டிக் கொள்கிறாள். வரக்கூடும் என்ற நம்பிக்கையில் பட்சணத்தை வைத்திருந்து, பூசணம் பூத்ததும் தூக்கி எறிகிறாள். முட்டாள் மகனையும் ஊரில் வியந்து சொல்ல அவளுக்கு விசயங்கள் இருக்கின்றன.

” அம்மா என்னிடம்
எதையுமே வேண்டியதில்லை
நான் சம்பாதித்த போது
காசு கொடுத்தேன்
அதை மகள்களுக்கு கொடுத்து விடுவாள்
அவளுக்கென்று எதையும்
வைத்துக் கொள்ளவில்லை
வயதாக வயதாக நினைவு தப்பிப்போனாள்
இறப்பதற்கு ஒருநாள் முன்
கன்னம் கிள்ளி ஒரு முத்தம் கொடுத்தேன்
அது நான் கொடுத்த முத்தமென்று
தெரிந்திருக்கவில்லை”

அய்யப்ப மாதவன் மொழியின் அழகை உணர்வுகளின் மேலேற்றி, வரிகளில் ஈரப்பதத்தைத் தக்கவைத்துக் கொள்கிறவர். இவரது கவிதைகளில் நினைவுகள் உறையும் தருணங்கள் ஏராளம். அம்மாவின் பச்சைச்சேலை ஒரு உதாரணம். நம்மை விட்டு மறைந்தவர்களின் கடைசித் தோற்றம் எப்படியோ மனதில் படிந்து போகிறது. அதே போல தாத்தா குவளைக்குள் அடங்குவது.

அடிப்படையில் இவர் புகைப்பட. கலைஞர் என்பதால் புறக்காட்சிகள் சட்டகத்துள் அகப்பட்டு கொள்கின்றன. மரத்தை வெட்டிய கவிதையில் ஒவ்வொரு வரியும் ஒரு காட்சி.
“சாலையில் ஒரு பூ கண்ணில் படுவது பிரிவுக்கு நெருக்கமானது” என்பது போன்ற வரிகள் காட்சிகள் கவிதையாகும் தருணங்கள். கண்டெடுத்த கல்வெள்ளிக் கொலுசு விக்கிரமாதித்யனுக்கு பொன் வண்ண பாதத்தை நினைவுக்குக் கொண்டு வருவது போல கண் பார்க்கும் காட்சி அங்கேயே நின்றுவிடாமல் மனதுக்குள் புகுந்து அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் கவிதைகள் அநேகம் அய்யப்ப மாதவனுக்கும்.

பாசாங்கு, போலித்தனத்தை இவரது கவிதைகள் அடிக்கடி தொட்டுச் செல்லும். கிருபா பற்றிய கவிதை அதற்கு சிறந்த உதாரணம். இன்னொரு கவிதை உடலை நெருப்பு எரிக்கும் வரை முகத்திரை கிழியாமல் பத்திரமாக பார்த்துக் கொள்ள சொல்லி அறிவுறுத்தும் கவிதை. திறந்தவெளிச் சாலை அய்யப்ப மாதவனின் கவிதைகள். நாம் எந்த மூடில் இருந்தாலும் இவரது கவிதைகளுடன் எளிதாக நம்மை இணைத்துக் கொள்ள முடியும்.

பிரதிக்கு:

எழுத்து பிரசுரம் 89250 61999
முதல் பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ.140

Leave a comment