ஆசிரியர் குறிப்பு:

தஞ்சை மாவட்டம் செண்டங்காடில் பிறந்தவர். சிங்கப்பூரில் வசிக்கிறார். இலக்கிய விமர்சனத்தைத் தொடர்ந்து செய்யும் இவர், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள், நான்கு சிறார் நூல்கள் முதலியவற்றை வெளியிட்டிருக்கிறார். இது வாசிப்பனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு.

இலக்கிய விமர்சனம் என்பது ரசனை அடிப்படையிலான விமர்சனம் மற்றும் திறனாய்வு ரீதியான விமர்சனம் என்று பொதுவாக இரண்டு வகைகளாகப் பிரித்துக் கொள்ளலாம். திறனாய்வு என்று எடுத்துக் கொண்டால் அங்கே, ஏற்கனவே அந்த கருப்பொருளில் வந்த நூல்களுடன் ஒப்பிடுதல், பகுப்பாய்வு, விளக்குதல், எப்படி இந்த நூல் மற்றவைகளில் இருந்து வேறுபடுதல் போன்ற முறைமைகளை உள்ளடக்கியது. பரந்த வாசிப்பு மட்டுமன்றி வாசித்தவற்றைக் குறிப்பெடுத்துக் கொள்ளாதவர்களால் ஒப்புமைப்படுத்துவது இயலாத காரியம். அடுத்து பகுப்பாய்வு, விளக்குதல் இரண்டுமே நூலைப் படித்தவர்களுக்கு கூடுதல் புரிதலைக் கொடுக்குமே அல்லாது, புதிதாகப் படிக்க எந்த உதவியும் செய்யாது. முழுக்க ரசனை அடிப்படையிலான விமர்சனம் விருந்தினரை நடுவழியில் இறக்கிச் செல்வது. முழுத் திறனாய்வு என்பது தேவையில்லை, ரசனையுடன்கூடிய சில திறனாய்வுக்கூறுகள் போதுமானது. கன்னியில் அமலாவும், சாராவும் ஒன்றா என்று நீங்கள் கேட்கும் கேள்வி, புதிதாக வாசிப்பவருக்குப் புதிய திறப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் ஏராளமான விமர்சனங்கள் கதை முடிவைச் சொல்லாமல் மற்றதையெல்லாம் சொல்வது என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கும் காலத்தில், விமர்சனத்தின் நடுவே, தன்னனுபவங்களை, உதாரணமாக, என்னுடைய முதல்காதல் முகிழ்த்ததும் குறிஞ்சியில் தான் என்று சொல்வது வாசகரைப் படைப்புக்கும் விமர்சனத்துக்கும் நெருக்கமாக்கும் யுத்தி.

காடு நாவல் பொய்மானைத் தேடும் பயணம். நரனின் கேசம் மற்றும் சரீரம் தொகுப்புகளுக்கு Themes அடிப்படையிலான விமர்சனம் மிக நன்றாக வந்திருக்கிறது.
சாம்ராஜின் இருகதைத் தொகுப்புகள் குறித்துப் பேசுகையில் சிறுகதைகளின் வகைமையைக் குறித்தும் பேசுகிறார்.
இசையின் கவிதைத் தொகுப்பு குறித்த விமர்சனம் பகடியில் இருந்தாலும் தெளிவாகச் சொல்ல வந்ததைச் சொல்கிறது.

காச்சர் கோச்சர் நாவல் விமர்சனத்தில்,
” இந்த நாவல் சரட்டில் வாசகன் தனது கற்பனை என்னும் அரூப மணியை எங்கு வேண்டுமானாலும் கோர்த்துக் கொள்ள ஏதுவாக இடைவெளியோடும், நெகிழ்வுத் தன்மையோடும் இருப்பது தான் இந்நாவலின் வெற்றி” என்றிருப்பது முக்கியமான விசயம். She is hitting the nail on the head. எல்லா சிறந்த நாவல்களுக்கும் இருக்கும் பொதுஅம்சம் இது. உன்னதமான நாவல்கள் தன்னை முதல்பார்வையில் ஒருபோதும் முழுமையாகத் திறந்து காண்பிப்பதில்லை.

ரத்தம் விற்பவனின் சரித்திரம், கங்காபுரம், எங்கதே, மெனிஞ்சியோமா முதலிய நாவல்களின் மீதான இவரது பார்வை தெளிவாக வந்திருக்கிறது. பவா செல்லத்துரையின் கதைகளை நான் படித்ததில்லை, எனவே என்னால் இந்தக் கட்டுரை குறித்து எந்தக் கருத்தும் சொல்ல முடியவில்லை.

நாஞ்சில் நாடனின் கம்பனின் அம்பறாத்துணியும், அ.கா.பெருமாளின் இராமன் எத்தனை இராமனடி இரண்டுமே இராமாயணத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட நூல்கள். இராமாயணங்களை மையப்படுத்தி ஜி.என். நாகராஜ்ஜின் அற்புதமான ஆய்வுநூல் உண்மை இராமாயணத்தின் தேடல், கே.நல்லதம்பியின் மொழிபெயர்ப்பில் வந்து சத்தமில்லாது கடக்கப்பட்டு விட்டது தமிழ் வாசகர்களின் துர்பாக்கியம். ஐம்பது ஆண்டு கால ஆராய்ச்சி இந்த நூலுக்கு என்பதைப் பார்த்ததும் சீன, இந்தோனேஷிய, Cornish, Irish மொழி இலக்கியங்களை வழக்கமாகக் குறிப்பிடும் எழுத்தாளர்களும் கண்டுகொள்ளவில்லை.

சு.தமிழ்செல்வியின் கண்ணகி குறுநாவல் குறித்த கட்டுரை நன்றாக வந்துள்ளது. தமிழ்செல்வியை வாசித்திராதவர்கள் கீதாரி நூலில் இருந்து ஆரம்பிக்கலாம்.

நல்ல எழுத்தாளர்களின் படைப்புகளில் கண்டிப்பாக வாசகஇடைவெளிகள் இருந்தே தீரும். அலங்காரத்தம்மாளின் பிரம்மாண்டத்தை ஒருவரியில் கடந்து போவார் தி.ஜா. வீடு குறுநாவலிலும் இதே காட்சி வரும். பொருத்தம் உடலில் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளும் போது அடுத்தடுத்த ஏன்களுக்கு விடைகள் கிடைக்கின்றன. விமர்சகர்களுக்கு வேண்டியதே கூரிய பார்வையும், வரிகளுக்கிடையே இருக்கும் அர்த்தங்களைப் புரிந்து கொள்வதும் தான். அழகுநிலா பிரதிக்குள் புகுந்து, புதிய தரிசனங்களுடன் வெளிவரும் வாசகி மட்டுமல்லாது அதை எழுத்திலும் கொண்டு வருபவர். எல்லோரும் படிக்கும் கதைகளை விமர்சனமாகச் சொல்ல ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள். அதைத் தாண்டிச் சொல்வதற்கு அழகுநிலா போன்றவர்களின் தேவை நிறையவே இருக்கின்றது. அழகுநிலாவின் வாசிப்பும், விமர்சனமும் மென்மேலும் பெருக வாழ்த்துகள்.

பிரதிக்கு

Amazon.in
முதல்பதிப்பு ஜனவரி 2022
விலை ரூ.100.

Leave a comment