ஆசிரியர் குறிப்பு:

மதுரை மாவட்டம் எழுமலை கிராமத்தில் பிறந்தவர். நாகர்கோவிலில் வசிப்பவர். வரலாறிலும், சட்டத்திலும் முதுகலை பட்டப்படிப்பு படித்து வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். இரண்டு மொழிபெயர்ப்பு நூல்களும், ஒரு சிறுகதைத் தொகுப்பும் ஏற்கனவே வெளிவந்தவை. இது குறுநாவல்களும், சிறுகதைகளும் அடங்கிய
இரண்டாவது தொகுப்பு.

கோர்ட் நடவடிக்கைகள் என்பது வெளியில் இருப்போருக்குத் துளியும் புரியாது. என்னைக் கூண்டில் ஏற்றி, “நீ கொடுக்காத கடனுக்கு, நீ எப்படி வந்து சாட்சியம் சொல்கிறாய் ” என்று கடனைக் கட்டாதவரின் வக்கீல் கேட்டதை நீதிபதி ஆமோதித்தபோது,
எனக்கு அத்தனை வருடம் வங்கியில் கற்றது எல்லாமே Waste என்று தோன்றியது. ஆடிக் காற்றில்…. பழமொழி தான் முதல் குறுநாவலின் கிழவிக்கு. நீதிமன்றத்தில் பணிபுரியும் ஒருவர் தகவல்கள் தருவது எவ்வளவு கோர்வையாக வருகிறது பாருங்கள். போஸ்ட்மார்ட்டம் Procedure, ஆணவக்கொலை, Compulsive Alcoholic எல்லாம் சேர்ந்து நன்றாக வந்திருக்கிறது.

காவல்துறையைச் சேர்ந்தவர்கள் பல கதைகளில் வருகிறார்கள். அநேகமான கதைகளில் அழுத்தத்தைக் கூட்டுவதற்காகத் தன்மையில் கதை சொல்லப்படுகிறது. சமீப காலங்களில், ஜல்லிக்கட்டில் இருந்து ஆரம்பித்து நடந்த ஏராளமான அராஜகங்கள் மக்கள் மனதில் பசுமையாக இருக்கும் போது, பாவெல் சக்தி மட்டும் தங்கப்பதக்கம் சிவாஜியைக் கதைகளில் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் அறவே இல்லை. மூன்று குறுநாவல்களும், சில கதைகளும் காவல்துறையின் கொடூரமுகத்தை நமக்குக் காட்டுகின்றன.

அதே போல் அநேகமான கதைகள் விளிம்புநிலை மக்கள் ஊரடங்கினால் அடையும் அவதிகள் உள்ளிட்ட சமகாலப் பிரசனைகளைப் பேசுகின்றன. முன்னுரையில் இதைக் கடந்து சென்று என்ன எழுத முடியும் என்று கேட்டிருக்கிறார்.
எதைப்பற்றி எழுதுகிறோம் என்பதை விட எப்படி எழுதுகிறோம் என்பதில் தான் இலக்கியம் உருவாகுதல் நடக்கிறது. செவிட்டுக்கிழவி குறுநாவலும் கூட எல்லாப் பிரச்சனைகள் பேசப்பட்டாலும், சாடிஸ்ட் ஒருவனின் பார்வையில் கதை நகர்வதால் துளிக்கூட அங்கே எந்த பிரச்சாரத் தொனியும் இல்லை.

பெண்களே ஏராளமான கதைகளில் சகல இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள். பெண்கள் மேல் வன்முறை குடும்பத்தினராலும் வெளியாட்களாலும் தொடர்ந்து நடத்தப்படுகிறது. அடிஉதைகளை உடல் தாங்கும் அளவிற்கு மனம் தாங்க முடியாமல், மனநோயாளியாகிறார்கள். தெருவிலும் வன்முறை தொடர்கிறது. நீரில்லாத கிணற்றில் விழுந்து உயிர் போவது போல் ஏதோ ஒருவிதத்தில் விடுதலை கிடைக்கிறது.

இந்தத் தொகுப்பில் இருக்கும் கதைகளில் வரும் பெரும்பான்மை மனிதர்கள் இருள் உலகத்தைச் சார்ந்தவர்கள். இருள் உலகம் எனில் படிப்பறிவில்லாது, ரவுடித்தனம் செய்பவர்கள் இல்லை. படித்து, அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு
தட்டிக்கேட்க எவருமில்லாது, மாட்டிக் கொள்ளாது குற்றம் செய்யத் தெரிந்த இருள் மனிதர்கள். White collar criminalsக்குப் பதிலாக பலர் காக்கிசட்டையும் சிலர் கறுப்பு கோட்டையும் அணிந்த, சட்டத்தினால் ஒருபோதும் தண்டிக்கப்படாத குற்றவாளிகள். நீதிமன்றங்களையும், காவல்நிலையங்களையும் விட ஒரு சமூகம் எப்படி புரையோடிப் போயிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் இடங்கள் வேறில்லை.

பாவெல் சக்தி இரண்டு தொகுப்புகளிலுமே நீதிமன்றம் சார்ந்த கதைகளையே அதிகம் எழுதியுள்ளார். John Grisham, Steve Martini போன்றோரின் கதைகளில் வருவது போல் நீதிமன்றத்துக்குள் நடக்கும் விசயங்கள் கதைகளில் வருகின்றன. முந்தைய தொகுப்பில் இருந்து இந்தத் தொகுப்பில் கதைசொல்லல் யுத்தியில் நிறைய வித்தியாசம் வந்திருக்கிறது. ஐந்து சிறுகதைகளை விட மூன்றுகுறுநாவல்களும் மிகக்கனமானவை. இவர் நாவல் எழுதும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பாவெல் சக்தியின் எழுத்தில் யாருடைய சாயலும் இல்லை, புதிதாக எழுதுபவர்களிடம்
தனித்துவம் எப்போதாவது தான் நிகழ்கிறது.
இந்தக்கதைகளை எளிதாக வாசித்துக் கடக்க முடியாது. இலக்கியம் ஒன்றும் ஜீரணமருந்தில்லையே, எளிதில் செரிப்பதற்கு உதவ!

பிரதிக்கு:

எதிர் வெளியீடு 99425 11302
முதல்பதிப்பு ஜனவரி 2022
விலை ரூ. 450.

Leave a comment