ஆசிரியர் குறிப்பு:

நாகர்கோவில், ஒழுகினசேரியில் பிறந்தவர். பணிநிமித்தம் பெங்களூரில் வசிக்கிறார். பல இணைய இதழ்களிலும் இவருடைய கதைகள் வெளிவந்துள்ளன. இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு.

ஒழுகினசேரி வாழ்க்கையைச் சுற்றியே அநேகமான கதைகள். நாஞ்சில் வட்டார வழக்கில் எழுதியபோதும் மற்ற நாஞ்சில் எழுத்தாளர்களிடமிருந்து வெகுவாக விலகியவை வைரவனின் கதைகள். பெரும்பாலும் அதிக கல்வியறிவில்லாத, அன்றாடங்காட்சிகளைச் சுற்றிவரும் கதைகள்.

மனப்பிறழ்வு கொண்ட கதாபாத்திரங்கள் இவரை அறியாமலேயே கதைகளுக்குள் புகுந்து கொள்கிறார்கள். கோம்பை, நான், நாய், பூனை, அபிக்குட்டி போன்ற கதைகளில் மனநலம் குன்றியவர்கள் வருகிறார்கள். ஆனால் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் கதைசொல்லும் யுத்திக்குமிடையே நிறைய வித்தியாசங்கள் உண்டு. அபிக்குட்டி பாரம்பரிய பாணிக் கதைசொல்லல் என்றால்
நான்,நாய், பூனை பின்நவீனத்துவப்பாணிக் கதை சொல்லல்.

கதைக்கருக்களையும் மிகவித்தியாசமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இரண்டு தலைமுறைக்கு முன் புதிதாக கிருத்துவர்கள் ஆனவர்கள் தான் அடுத்தமத தெய்வங்களைச் சாத்தான் என்று அவசரமாகக் கூறுவார்கள். கம்பராமாயணத்தை எல்லோரையும் இணைக்கும் இலக்கியமாக வரும் கதை நன்றாக வந்திருக்கிறது. பெண்ணுடலின் பரிட்சயமில்லாது Porn siteல் பாலியல் உறவைக் கற்றுக்கொண்டவன் எப்படி எதிர்வினை செய்வான் என்னும் கதை, தாத்தாவின் காதலியைத் தேடி வந்தவன், கொரானா காலத்தில் சைக்கிள் மிதித்து ஊருக்குச்செல்ல யத்தனித்தவன், பொன்னுருக்குதல், நீர்மாலைச் சடங்குக் கதைகள், பதின்பருவத்தில் கரக ஆட்டக்காரிகள் மேலான கிளர்ச்சி என்று
பல வித்தியாசமான கருக்கள்.

வெள்ளை, செவலை இரண்டுகதைகளுமே கதையம்சத்தைவிட சென்டிமென்டை அதிகம் நம்பிய கதைகள். இவை போன்றவைகளையே இவர் தவிர்க்க வேண்டியது. என் ஆத்துமாவே…. என்ற கதையில் சென்டிமென்டல் அம்சங்கள் இருந்த போதிலும், பழிவாங்கலுக்கு நேரெதிரான மன்னித்தல் அந்தக்கதைக்குப் பல பரிமாணங்களை அளிக்குகிறது. மொத்தத் தொகுப்பைப் பார்க்கையில் நேர்த்தியாக வந்த தொகுப்பு. முதல் தொகுப்பு என்பதற்கான அடையாளம் ஏதுமில்லாத தொகுப்பு. இது போல் முதல் தொகுப்பிற்கான சலுகைகள் எதுவும் வேண்டாத எழுத்தாளர்கள் தான் பின்னாளில் பல சாதனைகளைப் புரிந்தவர்கள்.

பிரதிக்கு:

யாவரும் பப்ளிஷர்ஸ் 90424 61472
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ. 150.

Leave a comment