ஆசிரியர் குறிப்பு:

திருச்சி மாவட்டம் பா.மேட்டூரில் வசிப்பவர். முதுகலை நுண்ணியிரியல், இளங்கலை கல்வியியல் ஆகிய பட்டப்படிப்புகளைப் படித்தவர். இதுவரை மூன்றுசிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இது நான்காவது.

நிகழ்காலத்தில் கதை நகர்ந்து கொண்டு போகையில் எந்த எச்சரிக்கையும் இல்லாது, கடந்தகாலம் வந்து கலந்து காலமயக்கத்தை ஏற்படுத்தும் கதைகள் கமலதேவியின் கதைகள். Nuclear familyயே நம்மைச்சுற்றிப் பரந்து விரிந்திருக்கும் காலகட்டத்தில், கமலதேவியின் கதைகளில், சித்தப்பா திருமண செய்முறைகளைப் பற்றிப் பேசுகிறார். சித்தி, அக்காவின் குழந்தையை ஆறுமாதத்திற்கு தத்து எடுத்துக் கொள்கிறாள். சுற்றம் சூழ வாய்த்த கதையுலகம் கமலதேவியின் கதைகள்.

கிராமத்து வாழ்க்கையே பெரும்பாலான கதைகளுக்கான களங்கள். விவசாயத்தை நம்பிய, மண் போகுமுன் உயிரைவிடும் மனிதர்களின் கதைகள். அவர்களது ஆசாபாசங்கள், உறவுச்சிக்கல்கள், அலைக்கழிப்புகள் இவைகளைக் காட்சிப்படுத்துவதே இவரது கதைகள். கணவனுக்கு குழந்தை பெற்றுத்தர முடியவில்லை என்று தானே முன்னின்று இன்னொரு பெண்ணைக் கட்டிவைத்து ஒதுங்கி நிற்கும் பெண், காலில்லாத கணவனுக்கும் உயிரான பெண்ணுக்கும் இடையில் தவிக்கும் பெண் என்று சிக்கலே இல்லாத வெள்ளந்தி மனிதர்கள் இவரது கதாபாத்திரங்கள்.

உரையாடல்கள், புறவர்ணனைகள் மூலம் நகரும் கதைகளில் உயிர்ப்பொறி ஒரிரு வரிகளில் ஒளிந்து நிற்கிறது. நாம கசந்து போயிறல்ல என்று பிச்சி சொல்லும் வார்த்தைகளில், மதுவின் கைவிரல்களை நோக்கி நகரும் ராதாவின் கைகளில், அறிவாளின்ற மிதப்பு என்ற வரிகளில், பெரிய தோகையில் ஒரு பீலியை உருவுதல்,
இருந்து தான் தப்பிக்கணும் என்ற வார்த்தைகளில் கதைகளின் ஆன்மா ஒளிந்திருக்கிறது.

அதிக விளக்கமின்றி உரையாடல்கள் மூலம் கதையை நிகழ்த்தும் யுத்தியில், மேலோட்டமாகப் பார்க்கையில் சாதாரணகதைகள் என்று கடந்துவிடும் அபாயம் இருக்கின்றது. உடன்போக்கு கதையில் காயத்ரி முடிவெடுக்க முடியாமல் திணறுவதாகத் தோன்றும். ஆனால் யோசித்துப் பார்த்தால், என்ன சொன்னாலும் சரி என்பவனை விட உற்றதுணை யார் பெண்ணுக்கு? அதனால் தான் அவனுடன் உடன்போக்கு. இதே போல் மற்றொரு கதை
கடல். மேலோட்டமான பார்வைக்கு சராசரிக் கதைகள் போல் தோற்றமளிக்கும் இந்தக் கதைகளின் பின்னால் பெண்களின் உணர்வுகள் ததும்பி வழிகின்றன. அந்த உணர்வுகளை எளிய வாசிப்புக்குச் சிக்காமல் பதுக்கிவைப்பது கமலதேவியின் கதைகள்.

பிரதிக்கு :

வாசகசாலை 99426 33833
முதல்பதிப்பு ஜனவரி 2022
விலை ரூ.200.

Leave a comment