ஆசிரியர் குறிப்பு:

மயிலாடுதுறையில் உள்ள பனம்பள்ளி கிராமத்தில் பிறந்தவர். சென்னையில் திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். திரைப்படங்களுக்குத் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு.

நித்தியமானவன் கதையை முதலில் படித்ததும் நினைவுக்கு வந்தது அசோகமித்திரனின் புலிக்கலைஞன் சிறுகதை. சினிமாவில் சான்ஸ் என்பதும் மையக் கதாபாத்திரத்தின் மேலெழும் பரிதாபமும் மட்டுமே இந்த இரண்டு கதைகளை இணைக்கும் கோடுகள். மற்றபடி கதைகள் வேறு. சினிமாவுடன் பரிட்சயம் உள்ளவர் யாரென்றாலும், பிணமாக நடித்தாலும் தன்னுடைய முழுஆற்றலை செலவழித்து நடிக்கும் அவனை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.
இன்ஸ்பெக்டரை பிணமாக நடிக்க வேண்டியவன் என நினைப்பது, தாடிக் கிருஷ்ணனைத் தவிர்ப்பது, காமிரா முன் சிரிப்பது இப்படி எத்தனையோ அசல் ஜரிகை இழைகள் சேர்ந்தகதை. அதனால் தான் எளிதில் யூகிக்கும் முடிவைக் கொண்டிருந்தும் சிறந்த கதையாகி இருக்கிறது.

இவரது கதைகளில் வரும் அப்பாக்கள் குறித்து ஒரு தனிச்சித்திரம் மனதில் வந்திருக்கிறது. குறிப்பாக அன்பின் நிழல், எவ்வம் அப்பாக்கள். அதிலும் எவ்வம் அப்பா விஸ்வரூபம். மகன் மற்றவர்கள் முன் அவமானத்தை மென்று முழுங்கி, உடலைக் கூனிக்கொள்வது குறித்த சிறு பிரக்ஞையும் இன்றி தன் காரியத்தை நடத்தும் அப்பாக்கள். மழைக்கண்ணில் அம்மாவே மையக் கதாபாத்திரம் என்பதால் அப்பா குழம்புச்சட்டியை உதைப்பதுடன் திருப்தி கொள்கிறார்.

வேளாண்சமூகத்தைப் பற்றிய மழைக்கண் கதையைப் படிக்கையில் அந்த மண்ணின் வாசனையை முகரமுடிகிறது. விவசாயக் குடும்பத்தின் எதிர்பார்ப்பு, கடமைகளைக் கடந்து ஒரு தீராத நோயும் சேருவதால் இந்தக் கதைக்குப் பல பரிமாணங்கள் கிடைத்திருக்கின்றன.

உறவுச்சிக்கல்கள் வெகு இயல்பாக இவரது கதைகளில் பின்னிப்பிணைந்து வருகின்றன. குறிப்பாக மழைக்கண், ஆடிஷன், நெடுநல் உளளொருத்தி கதைகளில். Betrayal நெடுநல் உளளொருத்தி கதையிலும் காகளத்தில் இன்னும் அழுத்தமாகவும் வந்திருக்கிறது.

எந்த வித ஆடம்பர, படோடப மொழியும் இன்றி, விதவிதமான யுத்திகளில் கதை சொல்லலும் இன்றி எல்லாமே நேர்க்கோட்டில் நகரும் கதைகள். ஆனால்
toys carல் பொருத்தும் பாகங்கள் போல், மாற்று இல்லாது கச்சிதமாகப் பொருந்தும் வார்த்தைகளைக் கொண்ட மொழிநடையை இவர் உபயோகிக்கிறார். “மகனை விரல் நுனியால் தொட்டேன். ஒரு துளி அளவிற்கான தொடுதல்”. இதனாலேயே இவர் கதைகளில் உணர்வுகள் பொங்கி வழிந்தும் சென்டிமென்டலாகவோ, மெலோடிராமாவாகவோ முடியாமல் நுணுக்கமாக வந்துள்ளன.

ஒன்பதே கதைகள் அடங்கிய சிறிய தொகுப்பு. முத்தத்துக்கு என்ற கதை ஒன்றே இதில் சராசரிக்கதை. இதே கதைக்கருவில் நிழல்கள் என்ற கதையில் அடித்து ஆடியிருப்பார் ஆதவன். மீதி எட்டு கதைகளுமே ஒன்றிலிருந்து ஒன்று வித்தியாசமாகவும், பரந்த வீச்சும் கொண்ட கதைகள். திரையுலகம் இவரது எழுதும் கையைக் கட்டிப்போடவில்லை என்றால், செந்தில் அடையப்போகும் உயரங்களை வேறெந்த சக்தியாலும் தடுக்கவே முடியாது.

பிரதிக்கு:

வம்சி பதிப்பகம் 94458 70995
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ.150.

Leave a comment