ஆசிரியர் குறிப்பு:

இலங்கை மத்தளையைச் சேர்ந்தவர். ஆய்வுநூல்கள், நாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு என பலதளங்களில் இயங்குபவர். இவர் டாகுமென்டரி, நேர்காணல்கள் எடுத்து ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளது. ஒன்பது தமிழ் மெல்லிசைப் பாடல்கள் இவர் எழுதி, இசையமைத்து இசைத்தட்டு வெளியாகியுள்ளது. பல துறைகளில் சாதனை புரிந்த பெண்களின் குரலைப் பதிவுசெய்யும் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.

ராஜம் கிருஷ்ணன் குறித்த கட்டுரை அழகாக வந்துள்ளது. நான்கு சுவர்களுக்கு நடுவில் இருந்து புனைக்கதைகள் எழுதாமல், களஆய்வுகள் செய்து நாவல்களை எழுதியவர். மக்களை பேட்டிகண்டு அவர்களது வாழ்வியலை கதைகளில் கொண்டு வந்தவர். Craftness என்பது அவருக்குக் கைகூடி இருந்தால், தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக இருந்திருப்பார். அத்தகைய உழைப்பையும், அர்ப்பணிப்பையும் படைப்புகளுக்காகக் கொடுத்தவர்.

இந்து, பௌத்த, முஸ்ஸீம் பெண் கவிஞர்களின் இறைக்காதல் குறித்த கட்டுரை முக்கியமானது. சில சிறிய வேறுபாடுகள் இருப்பினும் மும்மதப் பெண்களின் குரலும் ஆன்மீகத்தேடல், லௌகீக வாழ்வின் இன்னல்களை விட்டு இறைவனுடன் ஐக்கியமாதல் குறித்துப் பேசுகின்றன. எத்தனை பேர் தொட்ட முலை என்று ஆண்கள் பெண்மையைப் பழித்தது போல பெண்துறவிகள் யாரேனும் ஆண்கள் குறித்து எழுதியிருக்கிறார்களா?

சிங்களக் கவிதாயினிகள் குறித்த கட்டுரை சுவாரசியமானது.அகஉணர்வுகள், அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தே பெரும்பாலான கவிதைகள் இருக்கின்றன. தமிழ் கவிஞர்கள் என் தேசம், என் மண்ணை எப்போது காண்பேன் என்று ஏராளமாக எழுதியது போன்ற சூழல் இவர்களுக்கில்லையே.

ஆர்த்தெழும் பெண் குரல் கட்டுரையில்
இடம்பெற்றுள்ள ஃபாயிஸா அலியின் கவிதை வரிகள்:

” உடுப்பவை மட்டுமல்ல
எனக்கான எதையுமே
தீர்மானிக்க வேண்டியதும் தெரிவதும்
அவர்களுமல்ல இவர்களுமல்ல
நான்
நான் மட்டுமே”

ஒன்பது கட்டுரைகள் அடங்கிய நூல் இது. லறீனாவின் கட்டுரைகளில் எதுவுமே, மேலோட்டமாக அந்த Topicஐ அணுகவில்லை. உதாரணத்திற்கு ராஜம் கிருஷ்ணன் கட்டுரையில், அவரது நான்கு நாவல்களை மையமாகக் கொண்டு, அவர் எப்படி தன் படைப்புகளில் பெண்களின் நிலையை ஆய்வுக்குள்ளாக்கி இருக்கிறார் என்பதைச் சொல்லி, அடுத்து அவர் போல இலங்கையில் இயங்கியவர்கள் குறித்தும் பேசுகிறது. இந்தக் கட்டுரை மட்டுமல்ல, லறீனாவின் எல்லாக்கட்டுரைகளுமே ஆய்வியல் நோக்கில் எழுதப்பட்டவை.

சார்புநிலை என்பதை கட்டுரையாளர்கள் எப்போதும் எடுக்கக்கூடாது. இஸ்லாமியப் பெண்ணியம் என்ற கட்டுரையை எந்த சார்புமில்லாது, இந்தக் கட்டுரைக்குத் தேவையான விசயங்கள், தரவுகளைப் பேசி முடிகிறது இந்தக் கட்டுரை. இஸ்லாமியப் பெண்ணியம் வேறு மேற்கத்தியப் பெண்ணியம் வேறு, அரபுநாடுகளில் பேசப்படும் இஸ்லாமியப் பெண்ணியம் வேறு, கீழை நாடுகளில் பேசும் இஸ்லாமியப் பெண்ணியம் வேறு. மிகுந்த Vast subjectஐ இவரது கோணத்தில், எளிதான கட்டுரையாகத் தந்திருக்கிறார்.

ஏற்கனவே கூறியது போல் வெவ்வேறு துறைகளில் ஒலிக்கும் பெண்குரல்களை அடையாளப்படுத்துவதே இந்த நூலின் நோக்கம். அதைத் திறம்பட செய்திருக்கிறார் லறீனா. இப்போதிருக்கும் திருமணக் கட்டமைப்பில் பெண்ணியம், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெண்ணியம் அடைந்த மாற்றங்கள் என்று ஏராளமான விசயங்கள், எழுதப்படவும், விவாதிக்கப்படவும் காத்திருக்கின்றன.

பிரதிக்கு :

புது எழுத்து 63742 30985
முதல்பதிப்பு நவம்பர் 2021
விலை ரூ. 150.

Leave a comment