ஆசிரியர் குறிப்பு:
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர், இலக்கியவாதி, பட்டிமன்ற பேச்சாளர, ஆன்மிக சொற்பொழிவாளர், சிறுகதை ஆசிரியர் என்று பலமுகங்கள் சுமதிக்கு.
கல்மண்டபம், ரௌத்ரம் பழகு, கண்டதைச் சொல்லுகிறேன் ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார்.
வளரசவாக்கம், கேசவர்த்தினி பஸ்ஸ்டாப்பில் இருக்கும் அகத்தீஸ்வரர் ஆலயத்தில், கபாலீஸ்வரர் கோவில் குளத்தருகில், பாரிஸில் இன்னும் எத்தனையோ கோவில்களில் சிரார்த்தம் செய்ய, நான்கைந்து பேரை புக் செய்து கொண்டு ஒவ்வொருவரையும் அவசரமாக முடித்து அனுப்புவர்களை பார்த்திருக்கலாம்.
பிராமண படிநிலையில் கடைசியில் இருப்பவர்கள் அவர்கள். ஹோமம் செய்வோர், கோவில் குருக்கள், கல்யாணத்தில் வைதீகம் செய்வோர், தளிகை, பிராமணார்த்தம் என்று பலபடிகள்.
கடைசி இரண்டு படிகளில் நிற்கும் தகப்பன், மகன் அல்லது அவர்கள் வாயிலாக இந்த சமூகத்தைப் பற்றிய கதையிது. இதற்குமுன் தமிழில் இந்த சமூகத்தைப் பற்றி நாவல் வந்ததாக என் நினைவில் இல்லை.
சௌந்தரம்- சௌந்தரம் மட்டுமா அவளிடம்?
மாமின்னு கூப்பிடாதே என்ற சௌந்திரம், ரங்கனை விட்டு விலக மனதில்லா சௌந்திரம், மீதிப்பாதி எங்கே என்று கேட்டு வாங்கும் சௌந்திரம், கணவன் வைதீகத்தை விட்டு தளிகைக்குப் போனதும் மனதில் குமுறலை அடக்கிய சௌந்தரம், நான்குவருட பொறுமைக்குப்பின் வெறுப்புடன் கிடந்த கோலத்தில் இருந்த சௌந்தரம்…… ராமான்ஜி மனது விட்டுப் பேசியிருக்க வேண்டும் என்றுசொல்வது எளிது. ஆனால் பலநேரங்களில் அப்படித்தான் வார்த்தைகள் புதைகுழியில் சிக்கி வெளிவராமல் போகின்றன. சௌந்தரம் பொன்னாங்கன்னிக் கீரையும், பாசிப்பருப்பும், சாதமும் சமைப்பவள் மட்டுமா? என் பிள்ளை மிக்கானை சொல்றதுன்னா என்று மகிழ்பவள் மட்டுமா? நான் தான் அள்ளி அள்ளிக் கொடுக்கிறனே என்று உருக வைப்பவளா இல்லை என்னை ஏன் அப்படி செய்தீர் என்று தூர வைப்பவளா?
சொந்தம் என்பது ஒருபூவையின் அருளில் என்பது எவ்வளவு சத்தியம். பெண்கள் குடும்ப உறுப்பினரை, உற்றாரை இணைக்கும் சங்கிலிக்கண்ணிகள். கண்ணிகள் இல்லாத மனிதர்கள் சிதறிப் போகிறார்கள்.
விஷ்ணு தீர்த்தம், தர்மவாபி- கடைசிக்காரியங்களை நடத்தும் இடங்கள் மட்டுமல்ல. பல மனிதர்களின் சரிவுச் சரித்திரத்தை நினைவுறுத்தும் இடங்கள். கனவுகளைக் கொன்று, தன் வயிறு, குடும்பத்தினர் வயிறுக்காக சகல அவமானங்களையும் சகித்துக் கொண்டு வாழக்கற்றுக் கொண்ட மனிதர்களின் கதை.
எல்லோரும் ஏளனமாக நினைக்கும் இந்த வேலைக்கு, பணியிடத்தில் எத்தனை அரசியல். எத்தனை சடங்குகள், எத்தனை சம்பிரதாயங்கள்!
தன் தாத்தாவின் இறுதி ஊர்வலத்தில் தோள் கொடுத்த (மட்டை) பிச்சுக்குட்டியை பதினைந்து வருடங்களுக்குப் பிறகு தேடிக் கண்டுபிடிக்கிறார். பிச்சுக்குட்டியிடம் கேட்டுக் கொண்ட விசயங்களை கதையுடன் நாவல் வடிவம் கொடுத்து விட்டார் சுமதி. O.V.Vijayan விருதுபெற்ற, JCB இறுதிப்பட்டியலில் வந்த Anti Clock என்ற V.J.Jamesன் நாவல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. சவப்பெட்டி செய்பவரின் கதை. அவரும் கூட அங்கேயே தங்கிப்பார்த்து எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட அது போன்ற நாவலை சுமதி இருபது வருடங்களுக்கு முன்பே எழுதி முடித்திருக்கிறார்.
நாவல் ஒரு சமூகத்தின் வாழ்க்கையை மட்டும் சொல்லவில்லை, நிறைய கேள்விகளையும் எழுப்புகிறது. சௌந்தரம், வெங்கடம்மாள், காயத்திரி, கல்யாணி என பெண்கள் எல்லோருமே திடமும் தீர்க்கமுமாக இருக்கிறார்கள். ஆண்கள் தான் பாவம் அலைபாய்கிறார்கள். சுமதி தன் பங்கிற்கு இந்த நாவலை வெகுசிறப்பாக எழுதிவிட்டார். ஒரு நல்ல எடிட்டர் இந்த நாவலை இலக்கியத்தரம் மிக்கதாக ஆக்கி இருக்க முடியும். அத்தனை வீச்சுகளும் உள்ளடக்கியது. ஆனால் பதிப்பகத்திற்கே மாறிமாறி படியேறி இறங்கும் போது எடிட்டருக்கு எங்கே போவது. இன்னொன்று சிறுகதைகளை விட நாவலே உங்கள் களம் என்று எனக்குத்தோன்றுகிறது சுமதி. என்னதான் வேலைப்பளு இருந்தாலும் இதுபோல் ஒரு நாவலை எழுதிவிட்டு இருபது வருடங்கள் மௌனமாக இருப்பது எப்படி சாத்தியம்!
பிரதிக்கு :
சிறுவாணி வாசகர் மையம் 9488185920
மூன்றாம் பதிப்பு பிப்ரவரி 2022
விலை ரூ.250.