ஆசிரியர் குறிப்பு:

அகரமுதல்வன் கவிதை, சிறுகதைகள், கட்டுரை என்று தொடர்ந்து இயங்கி வருகிறார். இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஒரு குறுநாவல்கள் தொகுப்பு ஆகியவை வெளிவந்துள்ளன. இது சமீபத்தில் வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு.

Pleasure of reading the text,. அகரமுதல்வன் போல வெகுசில எழுத்தாளர்களே கவிதையோ, உரைநடையோ எதை எழுதினாலும் வாசகர்களுக்குக் கிடைக்கப் பெறுவது. மொழி வளமை மட்டுமே சிறுகதை அல்ல என்பது நமக்குத் தெரியும். ஆனால்
“என்னுள் நூற்றாண்டின் கொடுங்கனா மணலாய் பெய்யத் தொடங்கியது” “அடிமையின் குழந்தை அருந்தும் தாய்ப்பாலும் செரிக்காது” என்பது போன்ற வரிகள் கொடுக்கும் திட்டமிடப்பட்ட அதிர்வை Command over the language மட்டுமே கொடுக்கமுடியும். எனக்கு இவரது மொழிச்செறிவின் மீது எப்போதும் பொறாமை உண்டு.

தொன்மம், மாய யதார்த்தம், இனப்படுகொலை காலம் மூன்றையும் இணைத்துப் புனையப்பட்ட கதைகள், பாலன், நெடுநிலத்துள், மாபெரும் தாய் முதலியன. தொன்மம் நிகழ்காலத்தில் எப்படி வந்து கலந்தது என்று நாம் வியக்கையில் அகரமுதல்வனின் மேஜிக் முடிந்திருக்கிறது. மாபெரும் தாய், கோபிதா வரும் பகுதி, ஊரை விட்டு விலகுவது தவிர முழுக்கவே மாயயதார்த்தம். கோபிதாவிற்கு நிகழ்ந்தது பயங்கரம். அதனையும்,.அலைக்கழியும் வாழ்க்கையையும் சொல்ல மாயயதார்த்தத்தை உபயோகித்தது நல்ல யுத்தி. நெடுநிலத்துள், மாபெரும் தாய் படித்து,, மறக்கும் கதைகளே அல்ல.

துரோகிகளால் தான் எதிரிக்குப் பல வெற்றிகள் எளிதாகி இருக்கின்றன. உயிர் பிழைக்க, குடும்பத்தைக் காக்க என்று ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம். கடைசியில் தன் இனம் வெட்டி சாய்ப்பதே நடந்திருக்கிறது. குற்ற உணர்வில் தற்கொலை செய்தவர்களும் வருகிறார்கள்,
இரத்தத்தின் மேல் நடந்து பாதுகாப்பான வாழ்க்கையை அடைந்தவர்களும் வருகிறார்கள். தொகுப்பில் என்னை மன்னித்துக்கொள் தாவீது, பிரிவுக்குறிப்பு, மன்னிப்பின் ஊடுருவல் முதலிய கதைகள் துரோகத்தைப் பேசுபவை.

போருக்குப் பின்னான வாழ்வைப் பற்றிப் பேசும் கதைகள் பல தொகுப்பில் உள்ளன.
அவளைக் கொன்றவர்கள், மன்னிப்பின் ஊடுருவல், எம்பாவாய், வீழ்ந்தவர்களின் புரவி முதலியன. வீழ்நதவர்களின் புரவி கதையைப் படிக்குமுன் திடச்சித்தம் உள்ளவர்களும் கூட உங்களை நன்றாக தயார்படுத்திக் கொள்ளுங்கள். போரில் ஒரு இனமே அழிக்கப்பட்ட பிறகு, போராளிகள் இருந்த இடத்தில் புல் முளைத்த பிறகு, துரோகி யார்? தியாகி யார்? யார் கேட்பதற்கு இருக்கிறார்கள் இருவருமே சேர்ந்து வாழ வேண்டியது தான்.

நாட்டார் மரபின் நீட்சியாக அகரமுதல்வனின் கதைகள். ஆச்சி சில கதைகளில் மாபெரும் சக்தியாக வருகிறாள். இறந்த பின்னும் வேறொரு உருவில் தான் சொல்ல விரும்பும் செய்தியைச் சொல்கிறாள். ஊரைக் காக்கும் மந்திரக்கத்தியுடன் வேட்டை நாய்கள் புடை சூழ நடமாடுகிறாள். பெண்கள் போர் நடுவில் உடலிலும், உள்ளத்திலும் ஏற்பட்ட அவமானக்கறைகளை துடைத்தெறிய முடியாமல் மீதி வாழ்வைக் கழிக்கிறார்கள். போர்க்களத்தில் போராளியாக இருந்தவள் மீண்டு வந்ததால் திருமணம் செய்ய ஜாதி கேட்கப்படுகிறது.

அகர முதல்வனின் இந்தத் தொகுப்பு வேறு உலகத்திற்கு நம்மைக் கூட்டிச் செல்வது. சிறந்த வாசின்பத்தை வழங்குவது. அரசியல், காதல், துரோகம், தொன்மம், மீளும் வாழ்வு எல்லாம் கலந்து, புனைவின் வெளியை ஈழப்போர் என்பதுடனாக சுருக்கிவிடாது, மிக அகலமான ஒன்றாக இந்தத் தொகுப்பில் கொண்டு வந்திருக்கிறார். குறைவாக எழுதி நிறைய வாசிப்போரின் நூல்களுக்கே உண்டான தரத்துடன் வந்திருக்கிறது. மாபெரும் தாய்- உக்கிரம்.

பிரதிக்கு:

ஜீவா படைப்பகம் 98413 00250
முதல்பதிப்பு பிப்ரவரி 2022
விலை ரூ.240.

Leave a comment