சீர்ஷேந்து முகோபாத்யாய்:

வங்கமொழி நாவலாசிரியர். சிறார் இலக்கியத்திற்கு கணிசமான பங்களிப்பை செய்தவர். கறையான் என்ற இவரது நாவல் NBT மொழிபெயர்ப்பாக வந்திருக்கிறது.

அருணவா சின்ஹா:

மொழிபெயர்ப்புகளுக்காக ஏராளமான விருதுகளைப் பெற்றவர். வங்க மொழியில் இருந்து இதுவரை எழுபத்துநான்கு படைப்புகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்துள்ளார்.

தி.அ.ஸ்ரீனிவாசன்:

நாகர்கோவிலுக்கு அருகே உள்ள திருப்பதிசாரத்தில் பிறந்தவர். மத்திய அரசு அலுவலகத்தில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். தன்பினாரின் நூலை நிச்சலனம் என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

Jane Eyre ஒரு Gothic Romance. எதனால் அதற்கு இன்றும் பெரிய இலக்கிய அந்தஸ்து கிடைத்து வருகிறது? அது காதலையும், ஆவியையும் மட்டும் பேசவில்லை. அது போலவே இந்த குறுநாவலும் Gothic romance தான். அது போலவே ஏராளமான விசயங்களை நுட்பமாகப் பேசுகிறது.

சுதந்திர இந்தியாவில் ஜமின்தாரி தடைச்சட்டம் இயற்றப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிகாலத்திலேயே முக்கால் அதிகாரம் பறிக்கப்பட்ட ஜமின்தார்கள் வாழ்வாதாரத்திற்கு மீதிஇருக்கும் சொத்தை வளர்த்து இல்லை விற்று கழிக்க நேர்ந்தது. அப்படி ஒரு குடும்பத்தைப் பற்றிய கதையிது.
வீண் பகட்டு, படடோபடங்களை செய்த குடும்பம் வறுமைநிலைக்குத் தள்ளப்படுகிறது.

ஒன்றுபட்ட இந்தியாவில் தலைமுறை தலைமுறையாகப் பணக்காரர்களாக இருந்தவர்கள் பின்னர் இந்தியா, பாகிஸ்தான் என பிரிக்கப்படப்போகும் இரண்டு தேசத்திலும் சொத்துக்கள் வைத்திருந்தார்கள். பாகிஸ்தானில் உடைமைகளை இழந்து தப்பித்து வரும்போது, இந்தியாவில் அதுவும் இந்துக்குடும்பம் பாகிஸ்தானில் இருக்கும் சொத்தை விற்பது ஆகாத காரியம். சோமலதாவின் மாமனாருக்கு இதுவே நேர்கிறது.

இளம் வயதில் விதவையாகி நீண்ட ஆயுள் வாழ்ந்து முடிந்தவர் இந்த மண்ணில் ஏராளம். பத்து, பன்னிரண்டு வயதில் விதவையானவர்களுக்கு புகுந்தவீட்டிலேயே தங்கிவிட்டால் கிடைக்கும் சொற்ப பாலியல் உறவுக்கான வாய்ப்புகளும், பிறந்த வீட்டிற்கு வரும் பெண்களுக்கு முற்றிலுமாக மறுக்கப்பட்டன. உடல் வேட்கையை எதிர்த்து வாழ்க்கையை நடத்தும் பெண்களுக்கு சிடுசிடுப்பு இயல்பாகப் போகிறது. அத்தையம்மாவின் குணத்திற்கு அதுவே காரணம். ஆனால் அவளது குணம் அவள் இறப்பிற்குப் பின்னே விஸ்வரூபம் எடுக்கிறது. மூன்றாம் தலைமுறைப் பெண்ணைக்கூட அவள் விடுவதில்லை.

கணவன் மேல் அதீத காதலும், மரியாதையும் இருக்கும் பெண்களால் மழை பெய்தது என்ற Mythஐயும் இந்த நாவலில் முகோபாத்யாய்
உடைத்தெறிந்திருக்கிறார். சிவப்பு ரோஜாக்கள் மறுக்கப்படுவதில்லை. எதிராளிக்கு இன்னும் கொஞ்சம் தைரியம் இருந்திருந்தால்….. அத்தையம்மா பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பது தெரியாமல் இருந்திருந்தால்…….

மூன்றுதலைமுறையைச் சேர்ந்த குணத்தால்
வேறுபட்ட பெண்கள் குறித்த கதை இது. நான்கே அத்தியாயங்களில், நூற்றுப்பத்தே பக்கங்களில் எழுதப்பட்ட நூல். எந்த வித விளக்கங்களுமில்லாது, நுணுக்கமான விவரிப்பில் விரையும் கதை. இது இரண்டாவது மொழிபெயர்ப்பு என்பதே தெரியாமல் சிறப்பாகத் தமிழுக்குக் கொண்டு வந்த ஸ்ரீனிவாசன் பாராட்டுக்குரியவர். Another must read.

பிரதிக்கு:

காலச்சுவடு பதிப்பகம் 4652- 278525
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ.125.

Leave a comment