கீதாஞ்சலி மணிப்பூரியில் பிறந்து உத்திரப்பிரதேசத்தின் பல நகரங்களில் வளர்ந்தவர். சிறுகதைத் தொகுப்புகளும், நான்கு நாவல்களும் ஏற்கனவே வெளியிட்டுள்ள கீதாஞ்சலியின் ஐந்தாவது நாவலான இது, இந்தியில் எழுதப்பட்டுப் பின் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. புக்கரின் நீண்ட பட்டியலில் இடம்பெறும் முதல் இந்தி நாவல் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.
புக்கர் இன்டர்னேஷனல் விருது புனைவிலக்கியத்திற்கான(நாவல், சிறுகதைகள்) உயரிய விருதாகக் கருதப்படுகிறது. நோபல் பரிசு போல் மர்மமான முறையில் நடைபெறாமல் எல்லாமே ஆரம்பத்தில் இருந்து வெளிப்படையாக இருப்பது இந்த விருதின் மதிப்பை அதிகரித்திருக்கிறது. 500,1000 பிரதிகள் விற்கத் திணறிய ஆசிரியர்களின் புத்தகங்கள் புக்கர் பட்டியலில் வந்ததும் லட்சக்கணக்கில் விற்றது இதற்குமுன் பலமுறை நடந்திருக்கிறது. புக்கர் இன்டர்னேஷனல் விருதுக்கு தேர்வு பெற மூலநூல் வேற்று மொழியில் எழுதப்பட்டு, கடந்த வருடத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, UKயிலோ அல்லது அயர்லாந்திலோ வெளியிடப்பட்டிருக்க வேண்டும். உலகின் பல நாடுகளின் நூல்கள் இந்த இரண்டு தேசத்தில் வெளியாகாத காரணத்தால் போட்டியிடும் தகுதியை இழக்கின்றன. இந்திய பதிப்பகத்தார், அவர்கள் ஆங்கிலத்தில் வெளியிட்ட மொழிபெயர்ப்பு நூல் உலக அளவில் போட்டியிடும் தரத்தைப் பெற்றிருக்கிறது என்று நம்பினால் இந்த இரண்டில் ஒரு தேசத்தில் இருக்கும் சிறிய பதிப்பகத்தாரின் மூலம் ஒரு நூறு பிரதிகளேனும் வெளியிடுவது உசிதமானது.
கணவனை இழந்து, மன அழுத்தத்திற்கு ஆளாகி, படுக்கையில் விழுந்த எண்பது வயதுப் பெண்ணைச் சுற்றி நகரும் கதை இது. திடீரென ஒரு நாள் காணாமல் போகிறாள், பின் கண்டுபிடிக்கப்பட்டு மகள் வீட்டிற்குப் போகிறாள். பின் ஒருநாள் பதின்வயது நினைவுகளை மீட்டெடுக்க பாகிஸ்தானுக்குப் (பிரிவினைக்கு முன் ஒன்றுபட்ட இந்தியா) போகவேண்டும் என்கிறாள்.
சாதாரண கதைக்கருவை. சொல்லிய விதம் பெரிதும் கவரத்தக்கது. பெரும்பகுதி கதையை, பெயர்சொல்லாத கதைசொல்லி பார்வையாளன் கோணத்தில் சொல்கிறார்.
எதையுமே ஒரு அலட்டிக்கொள்ளாத தொனியில் சொல்லும் மொழிநடை இந்த நாவலின் பெரிய பலம். வடஇந்தியாவில் ஒரு உயர்மத்தியவர்க்கக் குடும்பத்தைச் சுற்றிவரும் கதை, வாழ்க்கை, இறப்பு, அடையாளத்தைத் தேடும் பயணம் போன்றவற்றை உள்ளடக்கியது.
இந்தியத்தனம் (Indianness) என்பதே இந்த நாவல் நீண்ட பட்டியலில் இடம்பெற்றதன் முக்கிய காரணமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அம்மாவைப் பார்த்துக் கொள்வது மகனின் கடமையாவது, அவள் மகள் வீட்டுக்குச் சென்றபிறகு மகன் சோகத்தில் ஆள்வது, மாமியார்-மருமகள் உறவின் கூட்டல் கழித்தல்கள், ,மாமியார் சேலையை மருமகள் அணிந்து கொள்வது, பல காதலர்களுடன் சுதந்திர வாழ்க்கை வாழும் நாத்தனாரைக் கண்டு மருமகள் உள்ளுக்குள் பொறாமையும் வெளியே அசூயையும் காட்டுவது, சொல்லாமல் கொள்ளாமல் விருந்தினர் உறவினர் வீட்டுக்கு உரிமையுடன் வருகை தருவது, , மரத்தில் ஏறி மகள் வீட்டின் ஜன்னல் வழி அம்மா நடமாடுவதை மகன் பார்ப்பது, என்பது போல் இந்தியத்தனங்களால் நிறைந்த கதை இது. யயாதி கதை போல் புராணக்கதைகள் பல இடையிடை வந்து போகின்றன. நமக்கு சாதாரணமாக இருக்கும் விசயங்கள் வெளிநாட்டினருக்கு ஆச்சரியத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்துவன.
மாயயதார்த்தம் கதையின்இடையில் வந்து போகின்றது. காக்கைகள் நீண்ட உரையாடலை நடத்துகின்றன. அம்மா கீழே விழுந்த செய்தியை மகனிடம் காக்கை சொல்கின்றது. பாட்டி சொல்லச் சொல்ல வண்ணத்துப்பூச்சி அமைதியாக அவள் கதையைக் கேட்கிறது.
அம்மா-மகள் உறவு இந்த நாவலில் முக்கிய அம்சம். வயதான தாய், மகளுக்கு மகளாகிறாள். .ரோஸி என்னும் திருநங்கையுடனான அம்மாவின் நட்பு, மகளுக்குப் பொறாமையை ஏற்படுத்துகிறது. அம்மா இருக்கும் வீட்டில் காதலனுடன் உறவு கொள்ள பிடித்தமில்லாதது ஒரு நுட்பமான விசயம். அம்மாவின் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும் என்ற திடீர் தீர்மானம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. இப்போதும் அவள் மகளையே வழித்துணையாகத் தேர்ந்தெடுக்கிறாள்.
இந்தியா பாகிஸ்தான் இருநாடுகளும் பரஸ்பர வெறுப்பில் இனி எப்போதும் நட்பாக முடியாத தூரத்திற்கு சென்றுவிட்டன. ஆங்கிலேயர்கள் வெறுப்புத்தீயைத் தூண்டிவிட்டு அது காட்டுத்தீ போல் அணைக்க முடியாத போது அவசரமாக நாட்டை விட்டு சென்றுவிட்டனர். பிரிவினையின் போது ஏற்பட்ட கொடூரங்களை நாவல் தொட்டு செல்கிறது.
பெண்கள் தான் எந்தப் போரிலும் பலியாடுகள் ஆகிறார்கள். இந்த நாவலை partition literature என்றும் சொல்லலாம்.
பல இழைகளைச் சேர்த்த நாவல் இது. நவீன நகரவாழ்வு, தொன்மை கதைகள், பெண்ணியம், மதம் இரு நாடுகளைப் பிரித்த கதை, குடும்ப உறவுகள், அழியாத காதல்……..இது போல் பல இழைகள். நாவலை கீதாஞ்சலி ஒரு Playful toneல் சொல்லி இருக்கிறார். எழுநூறு பக்கங்களுக்கு நான்கு பக்கங்களே குறைவாக உள்ள நூல். டெய்சியின் மொழிபெயர்ப்பு அபாரம். ஆங்கிலத்தில் கூட இந்த நாவலில் இருக்கும் இந்தியத்தனத்தை ஒதுக்க முடியவில்லை. புக்கரைப் பொறுத்தவகையில் இந்த நாவலின் பலமும் அதுவே, பலவீனமும் அது தான்.