நன்றி இந்து தமிழ் திசை:

உலக இலக்கியம் என்பது மகா சமுத்திரம். ஒரு மனித ஆயுள் என்பது அதற்குமுன் ஒரு நாழிகை. உலக இலக்கியத்தின் வாசகர்கள் எல்லோரும், எவ்வளவு வேகமாக வாசித்தாலும், எவ்வளவு தேர்ந்தெடுத்துப் படித்தாலும், தான் வாசித்ததை விட, பலமடங்கு நூல்களை வாசிக்க முடியாத வருத்தத்தை மனதிலிறுத்திக்கொண்டே இறுதி மூச்சை நிறுத்தப்போகிறார்கள். 21-ம் நூற்றாண்டு உலக இலக்கியத்தை ஒரு கட்டுரையில் கொண்டுவர முடியாது. கங்கையில் சேந்திய நீர், கங்கையைக் கொண்டுவந்தோம் என்ற நம்பிக்கையைக் கொடுப்பதுபோல இது ஒரு உருவரைக் குறிப்பு. அவ்வளவே.

அரபு இலக்கியம் உலக கவனத்தைக் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பெற்றுவருகிறது. இன்றுவரை இலக்கியத்திற்கான ஒரே ஒரு நோபல், ஒரே ஒரு புலிட்சர் விருதைத்தான் அரபு இலக்கியம் பெற்றுள்ளது. அநேகமாக, எல்லோருமே ஆண் எழுத்தாளர்கள். அரபு இலக்கியத்தைப் பொறுத்தவரை பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இல்லை என்ற சொல்லப்பட்ட குறையை அடனியா ஷிப்லி (Adania Shibli) எழுதி ‘Minor Detail’ என்ற நூல் தீர்த்துவைத்தது. ‘நேஷனல் புக் அவார்ட்’, ‘புக்கர்’ என்று இரண்டு பட்டியல்களிலும் 2021-ல் இடம்பெற்ற நூல். ஒரு பெண்ணின் பாலியல் வல்லுறவிலிருந்து பாலஸ்தீனத்தின் கதையைச் சொல்லும் நாவல். இதைத் தொடர்ந்து பல பெண்கள், குறிப்பாக வெளிநாடுகளில் குடியேறிய பெண்கள் சின்ன வட்டத்திலிருந்து, அரபு இலக்கியத்தை உலக இலக்கிய மையநீரோட்டத்தில் கலக்க உதவுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

ரஷ்ய இலக்கியத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் அதிகம் அறிமுகமான லத்தீன் அமெரிக்க இலக்கியம் மாய யதார்த்தம், பின்காலனித்துவம் ஆகியவற்றையெல்லாம் தாண்டி வந்துவிட்டது. 20-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் லத்தீன் அமெரிக்க இலக்கியத்தை ஆதிக்கம் செலுத்திய மார்க்கேஸ், யோஸா, இஸபெல் அயெந்தே, பீட்ரோ ஹ்வான் கூட்டியரஸ், ரொபொர்த்தோ பொல்யானோ ஆகியோரின் ஆதிக்கம் 21-ம் நூற்றாண்டிலும் தொடர்ந்தது. மார்க்கேஸ் வெவ்வேறு படைப்புகளில் இலக்கியத்தின் எல்லையை விரிவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டவர். இஸபெல் பெரும்பாலும் அவரது இளமைப் பருவத்து சிலியையும், உள்நாட்டுக் கலவரங்களையும் படைப்புகளில் கொண்டுவந்திருப்பவர். பெட்ரோ கியூபாவின் விளிம்புநிலை மனிதர்கள் குறித்து அதிகம் எழுதியவர். யோஸா இலக்கியத்தில் பல வகைமைகளிலும் நூல்கள் எழுதியவர். மார்க்கேஸின் அடுத்த தலைமுறை எழுத்தைப் படைத்தவர் பொலான்யோ.

கொரிய இலக்கியம் சமீபத்தில் பலரது கவனத்தைப் பெற்றுவருகிறது. ஹான் காங் எழுதிய ‘வெஜிட்டேரியன்’ நாவல் புக்கர் விருதை வென்றது. கொரிய சமகால வாழ்க்கையைப் பெண்ணியப் பார்வையுடன் சொன்ன நாவல் இது. தமிழில் சமயவேல் மொழிபெயர்ப்பில் ’மரக்கறி’ என்ற தலைப்பில் வெளியானது. அடுத்து கவனத்தைப் பெறும் எழுத்தாளர் க்யூங் சூக் ஷின். இவரது ‘The Court Dancer’ அரசவையின் அநாதை நடனப் பெண்ணை மையமாக வைத்து எழுதப்பட்டது. தற்போதைய கொரிய இலக்கியம் பெண்களால் நிரம்பியுள்ளது. அதனால் பெண்களின் உணர்வுகளே அதிகம் பேசப்படுகின்றன.

ஜப்பானிய இலக்கியத்தில் முராகாமி உலக இலக்கிய வாசகர்கள் நடுவே மிகவும் பிரபலமான பெயர். அமெரிக்கக் கலாச்சாரம் கலந்த ஜப்பானியக் கலாச்சாரத்தின் நீட்சிகள் முராகாமியின் படைப்புகள். ‘Convenience Store Woman’ நாவலை எழுதிய சயாகா முராட்டா (Sayaka Murata) தொடர்ந்து நல்ல பங்களிப்பை அளித்துவருகிறார். நோபல் பரிசு பெற்ற இஷிகுரோவின் ‘Klara and the Sun’ சமீபகாலங்களில் வந்த அறிவியல் புனைகதை நாவல்களில் முக்கியமானது. ஹிரோகோ ஒயமாடாவின் (Hiroko Oyamada) ‘The Hole’ முக்கியமான படைப்பு. தற்போதைய ஜப்பானிய வாழ்க்கையை மாயயதார்த்தம் கலந்து எழுதப்பட்டது. மியகோ கவாகாமியின் (Mieko Kawakami) ‘Heaven’ நாவல் புக்கர்-2022 இறுதிப் பட்டியலில் இடம்பெற்றது. பள்ளியில் முரட்டுத்தனமான மாணவர்கள் மற்ற மாணவர்களைக் கொமைப்படுத்துவதைப் பற்றி எழுதப்பட்டது. ஜப்பானில் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் பெரும் பிரச்சினையாக இருக்கும் இந்த விஷயத்தைப் பற்றி ஜப்பானிய எழுத்தாளர்கள் பலரும் எழுதுகிறார்கள்.

கனடா இலக்கியம் ஆலிஸ் மன்ரோ, மார்கரெட் ஆட்வுட் ஆகிய இரண்டு பேரால் உலகம் முழுவதும் பரவலாக வாசிக்கப்படுகிறது. மன்ரோ உலகச் சிறுகதைகளில் பல சிறந்த சிறுகதைகளை எழுதியவர். சாதாரண மனிதர்களின் வாழ்வில் நிகழும் சாதாரண நிகழ்வுகளை அசாதாரணமாகச் சொல்பவர். ஆட்வுட் ‘Handmaids Tale’ உட்பட பல முக்கியமான நாவல்களை எழுதியவர். அமெரிக்காவில் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதாக கற்பனை செய்து எழுதப்பட்ட நாவல் அவரது ஆயுள் காலத்திலேயே கிட்டத்தட்ட உண்மைக்குப் பக்கத்தில் நெருங்கிவிட்டது. ‘லைஃப் ஆஃப் பை’ நாவலுக்காக புக்கர் விருது பெற்ற யான் மார்ட்டெல் (Yann Martel) கற்பனை, பேண்டஸி கலந்த அசாதாரணக் கதைகளை எழுதுபவர்.

ஆப்பிரிக்க இலக்கியம் கூகி வா தியாங்கோ (Ngugi wa Thiong’o) மற்றும் சினுவா ஆச்சிபி (Chinua Achebe) போன்ற சிறந்த எழுத்தாளர்களால் வளர்க்கப்பட்டு சிமாமண்டா அங்கோஸி அடீச்சி, பென் ஒக்ரி போன்றவர்களால் முன்னுக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. பலவிதத்தில் இந்தியாவைப் பிரதிபலிக்கும் கலாச்சாரம் கொண்ட ஆப்பிரிக்க இலக்கியம் தமிழுக்கு அதிக அளவில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.

ஏற்கெனவே கூறியதுபோல் இந்தக் கட்டுரை தூரத்தில் இருந்துகொண்டு மலையைக் கைகாட்டும் வேலைதான். முழுவதாக யாராலும் வாசிக்கவும் முடியாது, கட்டுரையில் கொண்டுவரவும் முடியாது. உலக இலக்கியத்தின் தற்காலப் போக்கை, மாறுதல்களை அறிந்துகொள்ள புக்கரின் இரு விருதுகளின் (ஒன்று வேற்று மொழியிலிருந்து மொழிபெயர்ப்பு, மற்றொன்று நேரடி ஆங்கில நூல்கள்) நீண்ட பட்டியல்களில் வரும் நூல்களை வாசித்தால்கூட போதுமானது, நாடித்துடிப்பு தெரிந்துவிடும்.

Leave a comment