கொடிக்கால் – கார்த்திக் புகழேந்தி:

நாட்டார் வாய்மொழிக்கதை சொல்லும் பாணியில் சொல்லப்பட்ட கதை. வட்டார வழக்கு வசீகரிக்கின்றது. ஜாதி பேதம், வர்க்கபேதம் காதலுக்கு சமாதி கட்டுவது காலங்காலமாய் நடந்து வந்திருக்கிறது. சாந்தியடையாது அலையும் ஆவியை சமாதானப்படுத்த, கதையில் சொல்லப்படும் யுத்தி innovative. ஆச்சி கதாபாத்திரம் அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. கார்த்திக் புகழேந்தி தொடர்ந்து எழுதவேண்டும்.

கடவுளின் டி என் ஏ – கமலதேவி:

இந்திய அணியில் விளையாடிக் கொண்டிருக்கும் போதே, கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், மதுரையில் டி வி எஸ்க்காக ஏதோ மற்றொரு சோதா அணியுடன் விளையாடியதைப் பார்த்த போது வந்த அதே உணர்வு தான், கமலதேவியின் இந்தக்கதையைப் படித்த போது வந்தது. எண்ணிக்கைகள் எதையும் நிரூபிக்கப் போவதில்லை. எல்லாப் பத்திரிகைகளுக்கும் எழுதியே ஆக வேண்டும் என்ற கட்டாயமுமில்லை. தனக்குத் திருப்தி வரும்வரை கதையை மற்றவர் யாரையும் படிக்கவிடாதவர்களால் தான் தொடர்ந்து நல்ல கதைகளை எழுத முடியும்.

கால நகை- அழகிய பெரியவன்:

ஊருக்கெல்லாம் சகுனம் சொல்லும் பல்லி கழனிப்பானையில் விழும் துள்ளி என்ற சொலவடையை நிருபிக்கும் கதை. கிளி ஜோசியம் சொல்பவரை மையக்கதாபாத்திரமாகக் கொண்ட கதையை முதல்முறையாகப் படிக்கிறேன். அத்துடன் எல்லோருக்கும் பொத்தாம் பொதுவாகப் பொருந்தும்படி சொல்லும் ஜோசியம் அருமை. நீ நல்லவன் உன்னை சுற்றி இருக்கும் எல்லோரும் உபயோகித்துக் கொள்கிறார்கள் என்று சொன்னால் யார் இல்லை என்று சொல்லப் போகிறார்கள்.

எஃப்.யூ – இந்திரா ராஜமாணிக்கம்:

இந்திராவின் இந்தக்கதை இரண்டு விசயங்களை நொறுக்கி எறிகிறது. ஒன்று பாசாங்கு. அடுத்தது தமிழ்பெண்ணின் புனிதபிம்பம். கதை சொல்லும் நேர்த்தியும் நன்றாக வந்திருக்கிறது. திருமண வாழ்க்கையும் அட்டைப் பசையில் மாட்டிக் கொண்ட எலி போல் தான் ஆகிறது. Reverse role playஐ தமிழ் ஆண்களில் பலர் கற்பனை செய்திருக்க மாட்டார்கள். தொடர்ந்து எழுத வேண்டும். திறமை வாய்ந்த எழுத்தாளர். She can go places.

சடங்கு – கே.பாலமுருகன் :

Shirley Jacksonன் லாட்டரி கதை ஏற்படுத்துவதைப் போன்ற அதிர்வை ஏற்படுத்தும் கதை. நிலம் எப்போதும் மனிதர்களைக் கொடூரமானவர்களாக மாற்றுவது. எதிர்காலத்தில் நடப்பதாக எழுதப்பட்ட கதைகள் எல்லாம் நிஜமாகி வருகின்றன. இந்தக் கதையின் கூடுதல் சுவாரசியம் சுகந்தியின் அறியாமையும், தாத்தாவின் தடுமாற்றமும்.

வானில் எவருமில்லை – எஸ்.ராமகிருஷ்ணன் :

பார்ட்டிகள் என்பதும் ஒரு சடங்கு தான். பத்து, இருபது என வரும் திருமணநாட்கள் யாரோ ஒருவரின் அசாத்திய பொறுமையின் அடையாளங்கள். முந்தைய தலைமுறைப் பெண் கைக்குட்டைக்கும் கணவனை எதிர்பார்த்து நின்றாள். இப்போது சொல்லாமல் புடவை வாங்குகிறாள். வேறு எதுவும் மாறவில்லை. நடுராத்திரியில் அம்மா தானே கல்யாணம் செய்து வைத்தாள், அவளைக் கூப்பிடுவோம் என்று வரும் யோசனை புன்னகைக்க வைத்தது.

மொழிபெயர்ப்புக் குறுங்கதைகள் – கணேஷ்ராம்:

நல்ல தேர்வு. காஃப்காவின் சில சிறுகதைகள் Perfectஆன குறுங்கதைகள்.
தோழர் என்ற ஒரு வார்த்தை மொத்தக் கதையையும் புரட்டிப் போடுகிறது. Fable போல, தத்துவார்த்தமாக, Doomsdayஐ சொல்வதாக, தேடலாக பல குரல்களாக இந்தக் குறுங்கதைகள் ஒலிக்கின்றன. சிறந்த தேர்வும், மொழிபெயர்ப்பும்.

அற்றம் – மித்ரா அழகுவேல்:

மன்மதலீலை படத்தின் கதை கூட கிட்டத்தட்ட இது தான். ஆனால் அது வெளிவந்து நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. எல்லா ஆண்களும் கெட்டவர்கள். எல்லாப் பெண்களும் Victims. ஆமென்.

உருமாற்றம் – யுவன் சந்திரசேகர்:

இது தான் என்று விஞ்ஞான பூர்வமாக விளக்கம் கொடுக்க முடியாத விசயங்கள் பல உண்டு. அவற்றில் ஒன்றை இந்தக் கதைக்குப் பயன்படுத்தியிருக்கிறார் யுவன்.
Survival என்று வரும்பொழுது மனிதர்கள் நடந்து கொள்ளும் விசயம் நுட்பமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. வாழ்க்கையில் நிறைய ஏன்களுக்குப் பதிலே கிடைப்பதில்லை, யுவனின் இந்தக் கதையைப் போல.

உலர்நதி- எம்.கோபாலகிருஷ்ணன் :

ஒரு பெண் வீட்டை விட்டு அவள் விரும்பியவனுடன் செல்வது அந்தக் குடும்பத்துக்கு ஏற்படும் பாதிப்பை, மெல்லிய குரலிலும், புறச்செய்திகளை மிகவும் சத்தமாகவும் சொல்லும் நுணுக்கமான கதை.
இங்கே பாம்பைப் பிடிக்க எடுக்கும் முயற்சிகளும், அங்கே பிடிக்கமுடியாதபடி ஒருவர் நழுவுவதும் நுட்பமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. வெட்டி வெட்டி கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திலும் நகரும் கதை. மணியின் குழந்தைப் பருவத்தில் புதிதாகக் கட்டப்பட்ட வீடு பற்றிய பகுதி வேண்டுமென்றே இணைக்கப்பட்டு இருக்கிறது. கொங்கு வட்டார வழக்கு கூடுதல் அழகு இந்தக்கதைக்கு.

உணவு- சித்துராஜ் பொன்ராஜ்:

மீண்டும் சித்துராஜிடமிருந்து நுட்பமான கதை. காயசண்டிகை போல் தீராப்பசி ஒரு அடுக்கு. சீனருடன் இருக்கும் நெடுங்கால நட்பு ஒரு அடுக்கு. சீக்கியப்பெண்ணை எதிர்ப்புகளுடன் மணமுடித்து, குழந்தை பெற்று, அவளையும் பறிகொடுப்பது அடுத்தது. மகன் வேற்றினப் பெண்ணை மணமுடித்து தந்தையுடன் ஒட்டாமல், முதுமையில் தனிமை மற்றொரு அடுக்கு. எல்லாவற்றையும் ஒரே கதையில் அழகாக Sync ஆக வைத்தது சித்துராஜின் திறமை.
வரவர சித்துராஜின் கதைகளில் வரும் வரிகள் subtlety, sharpness அதிகம் கலந்து வருகின்றன.

பச்சையம் பொதிந்த சுடுசோறு – ஜீவ கரிகாலன்:

பிச்சை என்பது கர்வத்தை ஒழித்தல். உஞ்சவிருத்தி, நேர்த்திக்கடன் என்று பிச்சை எடுப்பது இந்துக்களின் நம்பிக்கை. உணவை தானம் செய்தால் பாவம் தொலையும் என்ற நம்பிக்கை Demand Supply gapஐ பூர்த்தி செய்கிறது. பிச்சையை ஒரு சுமையை இறக்கிவைக்க உபயோகிக்கும் ஒருவரைப் பற்றிய கதை.அம்மா வந்தாள் இந்து பரிமாறும் போது கால், தவ்வையில் பரிமாறுபவளின் பாதம், பல கதைகளில் கால்கள் நிறைய வந்திருக்கின்றன, ஆனால் இந்தக்கதையில் மஞ்சள் பூசிய கைகள்…….. அவருடைய சுமையை அடையாளம் காட்ட வருகின்றன. மீண்டும் கரிகாலனிடமிருந்து நல்லதொரு கதை.

இன்னொருவன் – உமா ஷக்தி:

Beautiful ஆக வந்திருக்க வேண்டிய கதையிது. சில எடிட்டிங்கை செய்யாததாலும்,
மெலோ டிராமாவாகக் கதையை முடிந்ததாலும் அதைத் தவற விட்டிருக்கிறது.
நல்ல Presentation இந்தக்கதை, வித்தியாசமான கதைக்களமும் கூட. கதை முழுதும் ஒரு விசயத்தைச் சொல்லி விட்டு கடைசியில் அதற்கு எதிர்மாறான விசயத்தைக் கொண்டு வருவது நல்ல யுத்தி.

Leave a comment