ஒரே இடத்தில் பிறந்து, வளர்வது நாம் பிரமிப்பாகப் பார்த்த விஷயங்கள் எவ்வளவு சாதாரணமானவை என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிக் கொடுக்கிறது.
மூன்றாம் வகுப்பு சாரை நான் கல்லூரிக்கு செல்கையில் பார்த்துப் பேசியபோது அவர் மூன்றாம் வகுப்பிலேயே இருந்தது தெரிந்தது. பத்துவயதுக் குழந்தையை ஐந்து வருடம் கழித்துப் பார்க்கையில் உடல்வளர்ச்சி கண்டு வியக்கிறோம். ஆனால் அறிவு வளர்ச்சி அவ்வளவு வெளிப்படையாகப் பார்த்த உடனே தெரிவதில்லை.

வாசிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தமிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் ஆங்கில நூல்கள் படிக்க அடிப்படை ஆங்கில அறிவு தேவைப்படுகிறது. அது போலவே சில நூல்களுக்கு அதன் பின்னணி தெரியாது நம்மால் அவற்றின் உட்புக முடிவதில்லை.
Flannery O’Connor முப்பத்திரண்டு கதைகளை எழுதிவிட்டு சிறந்த சிறுகதை எழுத்தாளர் பட்டியலில் இடம்பிடிக்கிறார். அமெரிக்காவின் கறுப்பர்களும் அவரை சிறந்த எழுத்தாளர் என்று சொல்கிறார்கள். ஆனால் அவரை ஆழ்ந்து படிக்கையில் வெள்ளையினத்தவரின் South mentality என்பது தெளிவாகத் தெரிகிறது. Jane Austenன் எல்லா நாவல்களுமே சிறிய வட்டத்தைத் தாண்டாதவை. ஆனால் அப்போதைய அந்த உலகத்தை அவர் கலையின் அதிகபட்ச சாத்தியங்களுடன், நிதர்சனத்துடன் படைத்தார். நான் கல்லூரி படிக்கையில் மறுபடிமறுபடி படித்த Irving Wallace, Sidney Sheldenஐ இப்போது அதிகப்பேருக்குத் தெரிவதில்லை. கிளாசிக்ஸ் தான் காலம் கடந்து நிற்கும் என்பது உண்மையெனினும், Henry James, Alberto Moravia, James A. Michener
போன்றோர் காலவெள்ளத்தில் அடித்துக் கொண்டு போனது, நூற்றாண்டுகளாக நான் வாழ்ந்த உணர்வை அளிக்கிறது.

கல்கி, சாண்டில்யன், மு.வ போன்ற மிகப் பிரபலமானவர்களின் அநேகமான நூல்களை பள்ளிப்பருவத்திலேயே படித்திருக்கிறேன். தமிழில் தீவிர இலக்கியத்தை ஆழ்ந்து வாசிக்க ஆரம்பித்த பிறகு, நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களை என்னால் வாசிக்க முடியாமல் போனது. நான் அவர்களை எனக்குத் தெரியாமலேயே கடந்து விட்டேன் என்பது எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. சாதாரண எழுத்தாளர்களை விதந்தோதுபவர்கள் அவர்களை இன்னும் கடக்காமல் இருக்கிறார்கள். வாசிப்புப் பழக்கமே இல்லாதவர்களுடன் ஒப்பிட்டால் இவர்கள் உயர்வானவர்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆணிடம் பெண்ணையோ, பெண்ணிடம் ஆணையோ யார் Class யார் gross என்றால் எளிதாகச் சொல்லி விடுவார்கள். இலக்கியத்தில் பரந்துபட்ட தொடர்வாசிப்பு, தனிப்பட்ட ரசனையே கலைநுட்பங்களைக் கண்டு கொள்ள உதவும். புதுமைப்பித்தனோ, அசோகமித்திரனோ, தி.ஜா வோ எதனால் மாஸ்டர்கள் என்று கேட்டால் நாம் என்ன பதிலைச் சொல்ல முடியும்?

Leave a comment