கு.ப.ராவின் ஆற்றாமை சிறுகதையை யார் மறக்க முடியும். தனக்கு மறுக்கப்பட்ட காமம் அடுத்தவளுக்குக் கிடைப்பதைப் பார்ப்பதில் ஏற்படும் பொறாமை தான் இரண்டு கதைகளையும் இணைக்கும் மையச்சங்கிலி.

தேவி, கூட்டுக்குடும்பத்தில் கொழுந்தன் மேல் கொள்ளும் உரிமையை இந்தக் கதையில் கொண்டு வந்திருக்கிறார். வயது அதிகமுள்ள அண்ணிகளின் மூத்தபிள்ளைகளாகிப் போகிறார்கள் கொழுந்தர்கள். வித்தியாசம் குறைகையில் அந்த உறவில் ஒரு சீண்டல் இருப்பது இயல்பு. பெரும்பாலும் சீண்டலுடன் நிறுத்திக் கொள்ளப்படும். நுட்பமான உறவு அது. காமம் ஒடுக்கப்படுகையில் பெண்களின் எதிர்வினை பலவாக இருக்கும். பிரபஞ்சனின் ‘அம்மா’ கதையில்
இரயிலில் போகும் போது, முன்பின் தெரியாத ஒருவனுடன், மகன் (தூங்கிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்து) உடன் பயணிக்கையில் உறவு கொள்வாள் அம்மா. “பாதி சாப்பிட்டவன் சர்வரை எதிர்பார்த்த மாதிரி ” என்றிருப்பார் பிரபஞ்சன். அவரது ஆரம்பகாலச் சிறுகதை அது. பின்னர் அந்த உயரம் அவருக்கே அதிகமாகிப் போனது. இந்த இரண்டு நுட்பமான விஷயங்களைம் இந்தக் கதையில் கொண்டு வந்திருக்கிறார் தேவி.

தேவிக்கு மட்டுமல்ல, வளரும் எல்லா எழுத்தாளருக்கும் சொல்கிறேன். இந்தக் கதையை ஜனரஞ்சகத்தன்மை அதிகம் கொண்டதாகச் செய்தது எது? இலக்கியத்தன்மைக்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள். முதலில் அனாவசியமான வார்த்தைகளை நீக்கி Toasted sandwich போலக் கதைகளை இறுக்கமாக (Tight) எழுதப் பழகுவது முக்கியமான விஷயம். அடுத்தது எடிட்டிங்.
முழுதிருப்தி வரும்வரை கதையை வெளியே விடாதீர்கள். கடைசியாக உண்மைச் சம்பவத்தை எழுதும் போதும் அதில் லாஜிக் இல்லாத விஷயங்களில் கத்தரிக்கோலை வைக்கத் தயங்காதீர்கள். தேவி நுட்பமான விஷயங்களைத் தொடர்ந்து எழுத ஆரம்பித்திருக்கிறார். நிறைய வாசிக்க வேண்டும். தொடர்ந்து எழுத வேண்டும். எதிர்காலத்தில் சிறந்த கதைகளை எழுத தேவிக்கு வாழ்த்துகள்.

Leave a comment