எம்.ஜி.ஆர் படங்களின் வெற்றிக்கு, அத்திரைப்படங்களில் வரும் பெண்கள், தங்களையே விரும்புகிறார்கள், தங்களையே கட்டி அணைக்கிறார்கள் என்று ஆண் ரசிகர்களை நம்பவைத்தது முக்கிய காரணம். பெண்கள் எப்படி நம்பினார்கள் என்பதை ஜெயகாந்தன் ஒரு கதையில் (சினிமாவுக்குப் போன சித்தாளு) சொல்லி இருப்பார். இலக்கியத்தையும் அதையும் ஒப்பிடக்கூடாது. ஆனால் அதன் மையக்கதாபாத்திரங்களுடன் தன்னை இணைத்துக்கொள்ளும் தன்மை இரண்டிலும் பொதுமையானது.

சி.மோகனின் கமலியில், கமலியை யாரும் தானாக நினைக்க வாய்ப்பில்லாத, மொழிநடை, சம்பவக்கோர்வை, கதைசொல்லல், கமலியை அருவருப்பாகப் பார்க்க வைத்தது. செங்கம்மாவைப் பழனி கட்டிப்பிடிக்கையில் உடல் பதறியதாக பல பெண்கள் சொல்லி இருக்கிறார்கள். இலக்கியத்தில் மீறல் இல்லாமல் எழுத முடியாது. ஆனால் இந்த ஒன்ற வைத்தல் என்பதே, அவர்களது தவறுகளைக் கண்டும் காணாமல் போகச் சொல்கிறது. அம்மணி கடைசியாக ஒரு ஆணைத் தேடிக்கொண்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நிறையப் பெண்கள் என்னிடம் சொல்லி இருக்கிறார்கள். ஒன்றுதல் நேராதபோது பக்கத்து வீட்டுப்பெண் செய்வதைப் பார்க்கும் பார்வையாளர் மனநிலை, அவர்களது செயலின் மேல் அசூயை கொள்ளச் செய்கிறது.

சொல்ல மறந்தது என்ற கதையில் அம்மாவின் மீறலை சு.வேணுகோபால் அனுதாபத்துடன் அணுகியிருப்பார். ஒரு ஆண் என்பதற்காக, பள்ளிச்சிறுவனுக்குத் தெருவில் அம்மாவை இழுத்து அடிக்கும் உரிமையை இந்த சமூகம் தந்திருக்கிறது.
உள்ளிருந்து உடற்றும் பசியில் Incest என்பதை விட ஒரு புனிதபிம்பம் உடைதலும், தட்டிக்கேட்க ஆளில்லாத ஆண் எப்படி நடந்து கொள்கிறான் என்பதும் அந்தக் கதையில் பொங்கிவரும் விஷயங்கள். சு.வேணுகோபால் பலரும் இன்னும் பாராட்டத்தயங்கும் நல்லதொரு கலைஞன். இசைவு கதையில் இராஜேந்திர சோழன் வாசகர்களின் கோணத்தில், தோற்றது இந்த இடத்தில் தான். மகள் அம்மா சாயலில் இல்லை என்ற சப்பைக் கட்டு எல்லாவற்றையும் தாண்டி அங்கே Incest பூதாகரமாக வெளிப்படுகிறது. அதனாலேயே பலரும் அந்தக் கதையை எதிர்மறையாகப் பேசுகிறார்கள். இலக்கியத்தில் மீறலுக்கும், ஆபாசத்திற்கும் இடையில் எப்போதும் மெல்லியகோடு.

Leave a comment