கே.ஆர். மீரா-

சமகால இந்திய இலக்கியத்தின் தவிர்க்க முடியாத எழுத்தாளர்களில் ஒருவர். சாகித்ய அகாதமி உட்பட பல விருதுகளைப் பெற்றவர். பெண்ணிய சிந்தனைகளை இலக்கியமாக மாற்றத்தெரிந்த ரசவாதி. தேவிகாவின் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளிவந்த இந்தக்குறுநாவல், சமீபத்தில் தமிழில் வெளியாகியிருக்கிறது.

சிற்பி பாலசுப்பிரமணியம்:

கவிஞர். மொழிபெயர்ப்பாளர். கல்வியாளர்.
இலக்கிய இதழாசிரியர். சாகித்ய அகாதமி அமைப்புடன் இணைந்து பலவருடங்கள் பணியாற்றி வருபவர். இவரது மற்றொரு மொழிபெயர்ப்பான ‘ஒரு சங்கீதம் போல’ போலவே இந்த நூலும் பலகாலம் பேசப்படும் படைப்பாக அமையும்.

மீராவை வாசிப்பதென்பது, பல காலம் பருக நினைத்த பானத்தை, நல்ல வெயிலில் அலைந்து பின், மிடறு மிடறாக, தீரப்போகிறது என்ற கவலை சுவையை முழுவதுமாக ரசிக்கவிடாது, துளி கூட வீணாமல் பருகுவது. சிறிய நாவலோ, பெரிய நாவலோ மீரா Intensityஐ மட்டும் குறைப்பதேயில்லை.

நாவலின் முதல் பக்கத்திலேயே, அதிர்ச்சி ஏற்படுகிறது. பத்துவயது பெண்ணை நகரத்துக்குக் கூட்டிவந்த அப்பா, மகளை மறந்துவிட்டு, மதுவையும் மாதுவையும் தேடிப்போக, மகள் முன்பின் தெரியாத ஒருவனுடன் சென்று வல்லுறவு செய்யப்படுகிறாள். சிறுவயது வல்லுறவின் காயம், ஆயுளுக்கும் அழியாதது.

கன்னி நாவல் காதல் ஒருவனை என்னவெல்லாம் செய்ய வைக்கும், எப்படி மாற வைக்கும் என்று வாசகரை நம்ப வைப்பதில் வெற்றிகொள்ளும். இந்த நாவலில் அசல் பைத்தியத்துடன் காதல் பைத்தியமும் சேர்ந்து கொள்கிறது. காதல் முதலில் கொலைசெய்வது அறிவார்ந்த சிந்தனையை. படித்தவர், படிக்காதவர் வித்தியாசமில்லாது, முட்டாள்தனமான காரியங்களில் இறங்கும் துணிச்சலை காதல், காமம் இரண்டு மட்டுமே தரவல்லன.

Poison of Love துளசி, கப்பார் பாவனா போலவே ராதிகாவும் முப்பது வயதைத் தாண்டிய பெண். அந்த வயதுப் பெண் கதாபாத்திரங்களுக்கு எளிதாக உயிர் கொடுப்பது மட்டுமல்லாது, அவர்களை மறக்கவிடாது செய்வது மீராவின் குறளி வித்தை. கிறிஸ்டியும் வித்தியாசமான கதாபாத்திரம். White nights பலவருடங்கள் முன்னால் படித்தேன், மறந்து விட்டது என்று யாருமே சொல்ல முடியாதது போல, இந்த நாவலைப் படித்தவரும் மறக்கப்போவதில்லை.

நான் மலையாளம் வாசிக்கக் கற்றுக் கொள்ளாததன் குறைபாட்டை மீரா போன்ற ஆசிரியர்கள் மீண்டும் மீண்டும் நினைவுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
இவர் ஒவ்வொரு நாவலிலும் மொழிநடையை மாற்றுகிறாரா இல்லை அது மொழிபெயர்ப்பினால் ஏற்படுவதா என்பது எனக்குப் புரியவில்லை. ஆனால் மீராவின் எந்த நாவலும் வாசகருக்கு ஏமாற்றத்தை ஒருநாளும் தரப்போவதில்லை.

சிற்பியின் மொழிபெயர்ப்பில் இந்த நாவலை வாசிப்பது இனிமையாக இருக்கிறது. ” காதல் என்பது விசித்திரமான மரம்தான். தழைத்து நிற்கும் போது தலைகீழாய் விழும். பச்சை மறந்து பட்டுப் போனதென்று நினைக்கும் போது காய்க்கத் தொடங்கும்”. நாவலின் மையம் இந்த வரிகளைச் சுற்றிச் சுழல்கிறது. ஆங்கில மொழிபெயர்ப்பாளர் தேவிகா, மீரா காம்பவுண்ட் சுவரின் மேல் பதிக்கும் கண்ணாடிச் சில்லுகளை வார்த்தைகளாக்கி இருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வருகிறது. இந்த நாவல் ஒரு மறக்கமுடியாத அனுபவம். புதிதாக இந்த நாவலைப் படிப்போருக்கான எச்சரிக்கை: முகுந்தனின் முன்னுரையை முதலில் வாசித்து விடாதீர்கள். முழுவதும் Spoilers அடங்கிய முன்னுரை.

பிரதிக்கு:

எதிர் வெளியீடு 99425 11302
முதல்பதிப்பு ஆகஸ்ட் 2022
விலை ரூ.140.

Leave a comment