ஆசிரியர் குறிப்பு:

யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்தவர். கல்லூரிகாலத்தில் இருந்து சஞ்சிகைகள், பத்திரிகைகளில் எழுதிவரும் இவரது முதல் கவிதைத்தொகுப்பு இது.

காதலில் துணையை விட, காதலிக்கிறோம் அல்லது காதலிக்கப்படுகிறோம் என்ற உணர்வே, காதலின் சுவையைக் கூட்டுகிறதாக நினைக்கிறேன். லோகாதய வாழ்க்கையின் நிர்பந்தங்கள் அதில் இல்லை. அது ஒரு கனவுநிலை. கயூரியின் கவிதைகள் காட்சிப்படிமங்கள் காட்டும் வர்ணஜாலங்கள்.

காதலை, காமத்தைச் சொல்ல விழையும் பல கவிதைகளிலும், அகஉணர்வைச் சொல்வதற்குப் புறக்காட்சிகளைப் பயன்படுத்தி இருக்கிறார்.

” பவளமல்லி சிவப்புகளில்
நுரையீரல் நிறைக்கும் காற்று
மருதமர வேர்களின் ரகசியப்பாதைகளில்
ரத்தச்சாறு தெறிக்கும்
கருவறைக் கனவுகள்
பாதங்களை அழுத்தும் குறுமணல்
துகளிலெல்லாம் கூடற்ற
பறவையொன்றின் இரவுத்தவிப்பு
திமிறும் கழுத்து நரம்புகளில் புதையும்
உன் விரகங்களை அள்ளி என்
நிராசைகளில் ஒளித்து வைக்கிறேன்”.

” எரியக் காத்திருக்கும் பெருங்காட்டு
சருகசைவில் குவிந்து மிதந்து
கொண்டிருக்கும் மகத்தான ஏக்கங்கள்
நீர் உருண்டு உருண்டு
நழுவும் குளத்துப்படிக்கட்டுகளில்
அசையாத காலமாய் மழைக்கால
குருவிகளின் அச்சம்”.

நினைவின் தொடர்பயணமாய் வந்திருக்கும் கவிதைகளிலும் படிமங்கள் தன் பங்கு எங்கே என்று கேட்டு வாங்கிக் கொள்கின்றன.

” ஆன்மாவின் வெளியெங்கும்
ஆர்ப்பரிக்கும்
ஞாபகக் குரல்களுக்குள் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறது இரவுகள்
நிசப்தத்தின் கனதிக்குள் ஒற்றை முத்தம்
நரம்பெல்லாம் அறுத்து ஏதோவொரு கடல்
உவர்ப்பில் கரையப் பார்க்கிறது”

விவாதங்கள், உரையாடல்கள் யாருக்கும் எதையும் சொல்லிக் கொடுப்பதில்லை. பணம் ஈட்ட படித்த படிப்புகள் எல்லாமே பாதி ஆயுளில் மரித்துப் போகின்றன. இயற்கை சுவாரசியமானது. புத்தகங்கள் விரும்பத்தக்கவை. இரண்டுமே சொல்வதால் தீராது சுரக்கும் ஞானாசிரியர்கள்.

” இப்போதெல்லாம் என் மனம்
வானத்தின் நீலத்தை…..
படபடக்கும் சிறகுடைய வண்ணத்துப்பூச்சி
யின் பேதமையை
மஞ்சள் குருவிகளின் தவிப்பை….
நத்தைகளின் மென் தடங்களை…..
கொஞ்ச காடுகளின் இருண்மையை…
மழையின் இறுதித்துளிகளின் குளிரை…
பசித்த விழிகளின் களைப்பை…..
இருண்ட வானத்தையும்….
கொஞ்சம் இரவையும் நிறைய
புத்தகங்களையும் தான் தேடுகிறது”

எண்பத்தைந்து கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. எல்லாக் கவிதைகளுமே, ஆழ்மன உணர்வுகள், தொடரும் சிந்தனைகள், ஆசைகள் அபிலாஷைகள், முயல்துளைக்குள் விழுந்து புதிய உலகத்தைக் காணும் முயற்சிகள். கயூரியின் கையெழுத்து எல்லாக் கவிதைகளிலுமே பார்க்க முடிகிறது.

மொழிவளமும், மழைபெய்து முடிந்த இலைகளில் யாரோ அடுக்கினாற் போல் சரிவரிசையில் இருக்கும் நீர் திவலைகளைப்
போல் இயல்பாய் அமைந்த படிமங்களும் கவிஞர் கயூரி புவிராசாவின் பலங்கள். முதல் கவிதைத் தொகுப்புக்கு உண்மையிலேயே மொழியும் வடிவநேர்த்தியும் நன்றாகக் கைகூடியிருக்கிறது. அநேகமாக எல்லாக் கவிதைகளும் ஆசை அல்லது நிராசையை காட்சிகளின் தொகுப்புகளின் வாயிலாகச் சொல்ல நினைக்கின்றன. தொடர்ந்து எழுத வேண்டும்.

பிரதிக்கு:

கடல் பதிப்பகம் 86808 44408
விற்பனை உரிமை தமிழ்வெளி 9094005600
முதல்பதிப்பு ஜனவரி 2022
விலை ரூ. 140

Leave a comment