ஆசிரியர் குறிப்பு:

ஆரணியைச் சேர்ந்தவர். பல புகழ்பெற்ற உலக எழுத்தாளர்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர். அருந்ததிராயின் பல நூல்களைத் தமிழுக்குக் கொண்டு சேர்த்தவர். மொழிபெயர்ப்புக்காக அயர்லாந்து அரசின் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். இந்த நூல் இளையராஜா குறித்த இரண்டு கட்டுரைகளின் தொகுப்பு.

எங்களது இளமைப்பருவம் இளையராஜாவிற்கு முந்தைய இசையமைப்பாளர்களால் நிறைந்தது. வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே, காதல் கடல் கரையோரமே (இரண்டுமே டி.ஆர்.பாப்பா), வண்ணக்கிளியே சொன்ன மொழியே (இரட்டையர்கள்) என்பது போலக் குறைந்தது நூறு பாடல்களேனும் பல முகங்களை, நினைவுகளைக் கொண்டு வரும். எந்த ஆசிரியர் சொல்லிக் கொடுத்தும் மறந்து போய்விட்ட பாடங்களையும் தாண்டி, இலங்கை வானொலியின் தமிழ்சேவை கற்றுக் கொடுத்த பாடல் வரிகள் இன்றும் நினைவில் பசுமையாக. ரோஜாவைத் தாலாட்டும் தென்றல், சுந்தரி கண்ணால் ஒரு சேதி, நீ பாதி நான் பாதி கண்ணே என்பது போல் ராஜாவும் இடையிடையே இதயத்தை வருடிக்கொண்டு தான் இருக்கிறார். எனில் முகங்கள் மட்டுமில்லை.

இளையராஜாவின் வரவு ஒரு பெரிய நிகழ்வு என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் எழுபதுகளில் இந்தி இசை தமிழகத்தில் கோலோச்சியது என்பது உயர்வு நவிற்சி. சொர்க்கம், வியட்நாம் வீடு, கௌரவம், வசந்த மாளிகை, சி ஜ டி சங்கர் போன்ற படங்களுடன் எங்கள் தங்கம், உரிமைக்குரல், உலகம் சுற்றும் வாலிபன் உள்ளிட்ட பல படங்களில் எல்லாப் பாடல்களுமே நன்றாக இருக்கும். சங்கர் கணேஷ் இசையில் வந்த உனது விழியில் எனது பார்வை என்ற அற்புதமான பாடலும் எழுபதுகளில் வந்தது தான்.

பின்னணி இசை குறித்து இவர் எழுதியிருக்கும் கருத்து முக்கியமானது. ராஜா தன் பின்னணி இசையால், பல படங்களில் இயக்குனருக்கு இணையாக பார்வையாளர்களின் உணர்வைக் கூட்டியிருக்கிறார். அதேபோல் தாளையாம் பூமுடிச்சு போல எத்தனையோ பாடல்கள் ராஜாவுக்கு முன் வந்திருந்தாலும், கிராமியப்பாடல்களின் மணத்தை நுகர முடிந்தது ராஜாவின் பாடல்களில் தான்.
ஹம்மிங் மற்றும் கோரஸ்களில் கேட்பவருக்கு அரைமயக்கநிலையை அதிகம் ஏற்படுத்தியது ராஜா தான். காவிரிக்கரையின் தோட்டத்திலே, விஜயலக்ஷ்மி + வேதா என்ற Deadly combination போல நாம் பலவற்றைப் பார்த்திருந்தாலும், ராமன் ஆண்டாலும் போல நூறு கோரஸ்கள், ஆகாய கங்கைக்கு முன்வரும் ஹம்மிங் போல ஏராளமான ஹம்மிங்களால் பிரமிக்க வைத்தவர். இந்த மூன்றையும் தன்னுடைய கட்டுரையில் உதாரணங்களுடன் அழகாகச் சொல்லியிருக்கிறார் குப்புசாமி.

இளையராஜாவின் பரமரசிகன் என்ற விதத்தில் அவரை அணுஅணுவாக ரசித்ததை, வார்த்தைகளிலும் கொண்டு வந்திருக்கிறார் ஜி.குப்புசாமி. இளையராஜாவின் இன்னொருசாதனை பல ஆண்டுகளாகக் கேட்ட பாடல்களுக்கு அவர் கொடுக்கும் புதுஇசைவடிவம். காக்கைச் சிறகினிலே பாடலை L. வைத்தியநாதன் என்ற மேதை திரையிசை செய்து கெடுத்திருப்பதையும், KVM சூலமங்கலம் ஜோடி திரையில் செய்திருப்பதையும் கேட்டுப் பாருங்கள். அப்போது தான் நிற்பதுவே நடப்பதுவே, வாரணமாயிரம் சூழவலம் செய்து (spb and Janaki versions) என்று பல பாடல்களில் ராஜாவின் மேதைமை தெரியும். அற்புதமான கலைஞன் ஒருவனுக்கு மட்டுமே சாத்தியமான விஷயம் பலகாலம் கேட்டவற்றை மறக்கச் செய்து இதில் மூழ்க வைப்பது.

தலைப்பு வைப்பதே தெரியாத எனக்கு குப்புசாமியின் தலைப்புகள் எப்போதும் ஆச்சரியப்படுத்தும். ‘காலத்தை இசைத்த கலைஞன்!’. ஒரு ரசிகனாக அவரிடமிருந்து வாங்கிய இசைக்கு இந்த நூலின் மூலம் ஒரு கைம்மாறு செய்திருக்கிறார். குப்புசாமி ஒரு சிறந்த வாசகரும் கூட. அவர் பரிந்துரைக்கும் நூல்களை கணப்பொழுது யோசிக்காமல் வாங்கிவிடுவேன். இந்த நூலைப் படித்து முடித்ததும் லாலி லாலி பாடலின் ‘ஆகாய வண்ணனுக்கு தியாகய்யர் நானே ‘ என்று சுசிலா பாடும் வரிகள் காதில் ஒலித்தது.

பிரதிக்கு:

காலச்சுவடு பதிப்பகம் 4852- 278525
முதல்பதிப்பு ஜூலை 2022
விலை ரூ.90.

Leave a comment